பழி தீர்க்கும் படலம் - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

ஈரோடு.

முள்வேலி கூரை போல் வளர்ந்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்த அந்த இடத்தில் அமர்ந்து ஐந்து சிறுவர்களும் மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் உள்ளூர் பஞ்சாயத்துப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் அந்தக் கிராமத்து நண்பர்கள். அவர்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிலும் வளர்ந்திருந்த கருவேல மரங்கள் உள்ளே இருப்பவர்களை மற்றவர்கள் கண்களுக்குத் தெரியாமல் மறைத்திருந்தன. அவர்கள் அமர்ந்து ரகசியம் போல் பேசிக் கொண்டிருந்தது, கடம்பூர் சம்புவரையர் மாளிகையில், பழுவேட்டரையர்கள் சிற்றரசர்களுடன் ரகசியமாகச் செய்த சதியாலோசனைக் காட்சியைப் போலவே இருந்தது.

கூட்டத்தில் நடுவில் அமர்ந்திருந்த பொன்னுச்சாமிதான் பேசிக்கொண்டிருந்தான்.

வர வர நல்லப்பன் தாத்தாவின் தொல்லை தாங்க முடியவில்லையடா... குறிப்பாக நாம செய்யற சின்னச் சின்ன தப்பையெல்லாம் என் வீட்டில் சொல்லி எனக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து ஆனந்தப் படறாருடா... என்று ஆற்றாமையுடன் பொங்கிக் கொண்டிருக்கும் போதே, சண்முகன் இடை மறித்தான்.

அவரு உங்க தோட்டத்தில வேல செய்யற ஆள்தாண்டா... அவரைப் பார்த்து ஏன் இப்படி பயப்படறே? என்றான்.

ஆமாண்டா... குடும்பம் இல்லைன்னு சொல்லித்தான் எங்ககிட்ட வேலைக்கு வந்தார். எந்த வேலை கொடுத்தாலும் நல்லா செய்வார். அதைப் பார்த்துத்தான் என் அப்பாவும் அம்மாவும் அவரை எங்கள் தோட்டத்து வீட்டில் குடி வைத்து, எங்கள் வீட்டிலேயே சாப்பாடும் போட்டு வைத்துக் கொண்டார்கள். எல்லா விவசாய‌ வேலைகளையும் பொறுப்புடன் செய்வதால் அவர் என்ன சொன்னாலும் எங்க வீட்ல நம்புவாங்க... அதுதான் பிரச்சனையே.. என்றான் பொன்னுச்சாமி.

அது சரி... உன்மேல் மாத்திரம் அவருக்கு என்னடா எரிச்சல்? அவர்கிட்ட ஏதாவது வம்பு வளர்த்தியா? என்றான் பழனிவேல்.

இல்லடா... என்னமோ தெரியல... ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு என்னைக் கண்டா பிடிக்கறதில்ல... எனக்கும் அவரைக் கண்டா பிடிக்கல... காரணம் ஒண்னும் இல்ல... முதலில் ஆரம்பிச்ச அவரின் கோள் மூட்டளைச் சொல்லட்டா? என்றான் பொன்னுச்சாமி.

ம்..ம்.. சொல்லு... என்று கதை கேட்கும் ஆர்வத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தனர் நண்பர்கள்.

ஒரு நாலு மாசம் முன்னாடி நாம எல்லோரும் இங்கே உட்கார்ந்து விளையாடியதில் நேரம் போனதே தெரியல. எல்லோருக்கும் நல்ல பசி.. நான் போய் கடலைக்காய் பிடுங்கி வருகிறேன், எல்லோரும் சுட்டுச் சாப்பிடலாம் என்று போய் கடலை கொண்டு வந்து சாப்பிட்டோமே ஞாபகம் இருக்கா? என்று கேள்வி கேட்டு நிறுத்தினான் பொன்னுச்சாமி.

சரிடா... அந்த மாதிரி நிறையத் தடவை செய்திருக்கிறோம்...அதுக்கென்ன? மேலே சொல்லு... என்றான் பழனிவேல்.

அன்னைக்கு நான் கடலைச் செடியைப் பிடுங்கியது நம்ம ஆறுமுகம் மாமா தோட்டத்தில... இதை எங்கேயோ இருந்து பார்த்துக் கொண்டிருந்த செல்லப்பன் தாத்தா என் அப்பாவிடம் போட்டுக் கொடுத்து விட்டார்.  அன்றைக்கு இரவு எனக்கு செம அடி.  கடைக்கண்ணில் என்னைப் பார்த்து, கள்ளச் சிரிப்பு சிரித்துக் கொண்டே போனார் செல்லப்பன் தாத்தா... என்றான் பொன்னுச்சாமி எரிச்சலுடன்.

சரி... வயசானவர்... போனால் போகட்டும் என்று விட்டு விடடா... என்றான் சின்னமுத்து பெரிய மனிதன் போல.

அட போடா... அடுத்தது அவர் என்ன செய்தார் தெரியுமா? ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை நாம எல்லோரும் நம்ம பள்ளிக் கூடத்துக்குப் பின்னால ரகசியமா பீடி பிடித்ததை, பக்கத்துக் காட்டுக்கு ஆடு ஓட்டிக்கொண்டு வந்த செல்லப்பன் தாத்தா பார்த்து விட்டு என் வீட்டில் போட்டுக் கொடுத்து விட்டார்.  அன்னைக்கு என் அம்மா விளக்குமாறால் என்னை நையப் புடைத்து விட்டார்.  அடி கூட வலிக்கவில்லை... ஆனால் இந்த செல்லப்பன் தாத்தா வாயில் துண்டை வைத்துச் சிரித்துக் கொண்டே கேவலமாக என்னைப் பார்த்தது ரொம்ப அவமானம் ஆயிடுச்சுடா..  என்றான் பொன்னுச்சாமி.

நம்ம அப்பனுங்க மாத்திரம் யோக்கியமா?  தலைப்பா கட்டுக்குள்ள பீடிக்கட்டும், நெருப்புப் பெட்டியும் வைத்துக் கொண்டு எந்நேரமும் புகை விட்டுக் கொண்டே இருக்காங்க... அதைப் பாத்துத்தானே நாமும் பழகினோம்.. என்றான் சுப்பிரமணி.

ஆமா... நான் கூட மூக்கில் புகை விடப் பழகிவிட்டேன்... என்று பீற்றிக்கொண்டான் சண்முகன் சமயம் தெரியாமல்.

சரி... உங்க சண்டை இத்தோட முடிஞ்சுதா?  இன்னும் இருக்குதா?....  என்றான் சின்னமுத்து பொன்னுச்சாமியிடம்.

இன்னும் இருக்குடா.... உங்களுக்கே தெரியும்... என் அப்பாவும், சித்தப்பாவும் சொத்தில் பங்கு பிரிக்கும்போது ஏற்பட்ட சண்டையில் இருந்து பேசிக்கொள்வதில்லை. எங்களையும் பேசக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருந்தார் அப்பா. ஆனால், எனக்கு சின்ன வயசில் இருந்தே சித்தப்பாவை ரொம்பப் பிடிக்கும்.  அவருக்கும் என்னைப் பிடிக்கும்.  நாங்கள் ஒருவருக்கும் தெரியாமல் அவ்வப்போது பேசிக் கொள்வோம்.  எனக்கு சாப்பிட யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திண்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பார்.

ஒரு நாள் அப்படி கடையில் எனக்கு தேன் மிட்டாய் வாங்கிக் கொடுக்கும்போது திடீரென அங்கு பீடி வாங்க‌ வந்த செல்லப்பன் தாத்தா பார்த்து விட்டார்.  அன்று இரவு அப்பா கையால் எனக்குக் கிடைத்த சாட்டை அடியின் அடையாளம்... இங்கே பாருங்கடா...   என்று தன் கெண்டைக்காலில் இருந்த தளும்பைக் காட்டியபோது அவன் நண்பர்களுக்கும் கூட‌ கோபம் வந்து செல்லப்பன் தாத்தாவை வாயில் வந்தபடி திட்டினர்.

சின்ன முத்து கொஞ்சம் யோசனை செய்து பேசினான்,

டேய்... நாம எல்லோரும் சேர்ந்து அவரை ஈசியா பழி வாங்கலாம். ஆனால் ஊரில் எல்லோரும் செல்லப்பன் தாத்தாவுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க. நாம சின்னப் பசங்க... அவரை ஒண்ணும் செய்ய முடியாது.... அவர் வெளியே சொல்ல முடியாதமாதிரி எப்படியாவது பழி வாங்கணும்... என்றான்.

நீங்க யாரும் இதில எனக்கு உதவி செய்ய வேண்டாம்.... நானே பார்த்துக் கொள்கிறேன்... என்றான் பொன்னுச்சாமி தன் நண்பர்களிடம், நம்பியார் போல் கையைப் பிசைந்து கொண்டு.

பொன்னுச்சாமியின் தோட்டத்தில் வாழை போடப்பட்டு, அவைகள் குலை தள்ளி வெட்டும் பருவம் வரும்போது நல்லப்பன் தாத்தாவுடன் ஒருவர் காவலுக்குச் செல்வது வழக்கம். அடுத்த நாள் பள்ளிக்கு விடுமுறை என்பதால் பொன்னுச்சாமி விருப்பப்பட்டு காவலுக்குச் சென்றான். தோட்டத்துக் களத்தில் வெட்ட வெளியில் கயிற்றுக்கட்டிலைப் போட்டுப் படுத்துக்கொண்டு, வானத்தில் தெரியும் நிலவையும், நட்சத்திரத்தையும் ரசித்துக் கொண்டு உறங்குவது அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

தூக்கம் வந்தா தூங்குடா பொன்னையா... என்றார் செல்லப்பன் தாத்தா. அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தூக்கத்தின் உலகத்தில் நுழைந்து விட்டான் பொன்னுச்சாமி.

டேய் பொன்னையா... எழுந்திரு.... என்ற குரலோடு சேர்த்து தன்னை செல்லப்பன் தாத்தா உலுக்குவதை அரைத் தூக்க மயக்கத்தில் உணர்ந்து, திடுக்கிட்டு எழுந்தான் பொன்னுச்சாமி. எவனோ திருடன் வாழைத்தோட்டத்தில் நுழைந்து விட்டானோ என்று நினைத்தபோது செல்லப்பன் தாத்தா பதட்டத்துடன் அவசரமாகக் கூறினார்,

பொன்னையா... என்னமோ வயித்தைக் கலக்குதடா... நா அவசரமா அந்த பாறைக்குழிக்குப் போகிறேன். பானையில தண்ணி எடுத்துக்கிட்டு பின்னால வாடா....

என்ன அவசரமோ, நள்ளிரவில் இயற்கை உபாதையால் அவர் தலை தெறிக்க ஓடுவதை குழப்பத்துடன் பார்த்து விட்டு தண்ணீர் எடுக்க எழுந்தான் பொன்னுச்சாமி.

மேகம் மறைக்கப்பட்ட அரை நிலா வெளிச்சத்தில், தண்ணீர் குடத்துடன் பாறைக்குழிக்குப் பக்கத்தில் செல்லப்பன் தாத்தாவின் வருகைக்காகக் காத்திருந்தான் பொன்னுச்சாமி.

இங்கேயே தண்ணியைக் கொண்டு வாடா பொன்னையா... என்று அழைத்த செல்லப்பன் தாத்தாவை நெருங்கிய பொன்னுச்சாமி அவரின் பின்புறம் வந்து,

குனிந்து தேயுங்க தாத்தா... தண்ணீர் ஊத்துறேன்.... என்றவுடன் தேய்க்கத் தொடங்கினார் செல்லப்பன் தாத்தா.

கழுவுவதற்குத் தண்ணீர் விழாததைக் கவனித்த செல்லப்பன் தாத்தா திரும்பிப் பார்த்த போது தண்ணீர்க் குடத்துடன் பொன்னுச்சாமி ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து,

டேய் பொன்னையா... குடத்தையாவது வெச்சுட்டுப் போடா... என்றார் கெஞ்சும் குரலில்.

அவரைத் திரும்பிப் பார்த்த பொன்னுச்சாமி தன் கையில் இருந்த தண்ணீர்க் குடத்தை பக்கத்தில் இருந்த பாறையில் போட்டு சுக்கு நூறாக உடைக்க, நீர் மண்ணோடு மண்ணாகக் கரைந்தது.

நம்பியாரைப் போல சிரித்துக் கொண்டே தூரத்தில் இருந்து, செல்லப்பன் தாத்தாவைத் திரும்பிப் பார்த்தான் பொன்னுச்சாமி.

கால்களை அகட்டிக் கொண்டு, கையை முகத்திலிருந்து தூரத்தில் வைத்துக் கொண்டு, வாத்து நடை நடந்து வரும் செல்லப்பன் தாத்தாவைப் பார்த்தபோது அவனின் மனதில் அதுவரை சுமந்து கொண்டிருந்த பெரும் பாரத்தை இறக்கி வைத்ததைப் போல இருந்தது.

முற்றும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.