மீனவர் நலத்துறைக்கு வேற ஆளே இல்லையா? - அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராக கொதிக்கும் மீனவர்கள்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரான ஸ்ரீநாத் தன்னுடைய துறைசார்ந்த மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைகளை கூட கண்டுகொள்வதில்லை. மீனவர்களின் நலனில் துளிகூட அக்கறை இல்லாத இவரை ஏன் மீனவர்நலத்துறை அமைச்சர் ஆக்கினீர்கள்? என சென்னையை சேர்ந்த மீனவர்கள் கொந்தளிக்கின்றனர்.

அமைச்சர் ஸ்ரீநாத் (தூத்துக்குடி)

இதுதொடர்பாக சென்னையின் கடலோர மீனவக் கிராமங்களை சேர்ந்த சங்கப் பிரதிநிதிகளிடம் பேசினோம், எந்த அரசு வந்தாலும் வாக்கு கேட்கும்போது மட்டுமே எங்களிடம் அக்கறை காட்டுகின்றனர். அதன்பிறகு சமூகத்தில் ஒரு ஓரமாக இந்தக் கடலுக்குள் எங்களுக்கு என்ன ஆகினாலும் யாரும் கண்டுகொள்வதில்லை.

இந்த அரசு அப்படி இருக்காது என நினைத்துதான் நாங்கள் விஜய்க்கு வாக்களித்தோம். விஜய்யும் அவருடைய நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத்தை மீனவர் நலத்துறையின் அமைச்சர் ஆக்கினார். முதலில் எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இனி மீனவர்களின் பிரச்னைகளை ஸ்ரீநாத் மூலம் முதல்வருக்கு நேரடியாக எடுத்துச் செல்ல முடியும் என நினைத்தோம்.

அமைச்சர் ஸ்ரீநாத்
அமைச்சர் ஸ்ரீநாத்

ஆனால், ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் ஸ்ரீநாத் இந்தத் துறையின் மீது பெரிய அக்கறை காட்டவே இல்லை. கச்சத்தீவு விவகாரத்தை பற்றி கேட்கையில், அதன் பின்னணியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் உணர்வையும் புரியாமல் நோ கமெண்ட்ஸ் எனக் கூறிவிட்டு கடந்து சென்றார். அப்போதே நாங்கள் சோர்வடைந்துவிட்டோம். பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிராக 9 மீனவ கிராமத்தினர் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றனர். முதல்வர் மீனவர்களுடன்தான் நிற்பார் என அமைச்சர் ஆதவ் பேசுகிறார். ஆனால், எங்களுடன் நிற்க வேண்டிய அமைச்சர் ஸ்ரீநாத் எங்கே? பட்டினப்பாக்கம் கிராமங்களை பெயருக்குக் கூட எட்டிப்பார்க்கவில்லை.

இப்போது காசிமேட்டில் ஆந்திர கடல்படையினர் பிடித்து வைத்திருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கக் கோரி அத்தனை மீனவர்களும் கடந்த சில நாட்களாக ஸ்ட்ரைக்கில் இருந்தோம். ஆயிரக்கணக்கான படகுகள் தொழிலுக்கு செல்லாமல் கரையில் நிற்கின்றன.

வார இறுதி நாட்களில் உணவுக்கு மீன் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டிருக்கின்றனர். மீன்வளத்துறை அமைச்சர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறோம். அப்படியிருந்தும் மீன்வளத்துறை அமைச்சர் காசிமேட்டை எட்டிப் பார்க்கவில்லை. சம்பந்தமே இல்லாமல் நிதியமைச்சர் மரிய வில்சன் வந்து மீன்வளத்துறை அதிகாரிகளின் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அவரை நாங்கள் குறைசொல்லவில்லை. ஆனால், துறை அமைச்சர் எங்கே? தூத்துக்குடியில் மீனவர் தின விழாவில் கலந்துகொண்டு சிறப்பு செய்கிறார்.

ஸ்ரீநாத்

அங்கே நின்றுகொண்டே தீய சக்திகளின் தூண்டுதலால் ஒரு சில மீனவர்கள் போராடுகிறார்கள் என அநியாயமாக பேசுகிறார். சில நாட்களுக்கு முன்பு 9 மீனவர்கள் புயலில் காணாமல் போன போதும் இறந்த உடல் கைக்கு கிடைத்த பிறகுதான் காசிமேட்டை ஸ்ரீநாத் எட்டிப்பார்த்தார். அலட்சியமாக செயல்பட்டு எங்கள் மீனவர்களை பலி கொடுத்துவிட்டீர்களே? என எங்கள் மக்களும் கேட்டனர். செய்தியாளர்களும் கேட்டனர். அதற்கு துறை அதிகாரியை முன்னால் நிறுத்தி பதில் சொல்ல சொல்லிவிட்டு இவர் கைக்கட்டி நின்றுவிட்டார்.

மீனவர்களின் பிரச்னையை பற்றி எதுவும் தெரியாமல் எங்களின் வலியை உணர மறுக்கிற ஒருவர் எதற்காக மீனவர் நலத்துறை அமைச்சராக இருக்க வேண்டும்? தயவுசெய்து இவரை வேறு துறைக்கு மாற்றிவிடுங்கள் எனக் கொதிக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.