திருச்சி: காதணி விழாவிற்குச் சென்ற 8 பேர் பலி; ஆம்னி வேன் மரத்தில் மோதிய விபத்தில் பரிதாபம்

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த செங்கல் சூளையில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள் மாணிக்கம், சங்கிலி, முருகன், ராஜேஷ், சக்திவேல், சுப்பிரமணியன், பாவாடை.

இவர்கள் ஆம்னி வேனில் நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டியில் நடைபெற்ற காதணி விழாவிற்குச் சென்று உள்ளனர். விழா முடிந்த பின்னர் மீண்டும் அதே ஆம்னி வேனில் திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்வதற்காகக் கிளம்பினர்.

அப்போது, திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து முசிறி செல்லும் சாலையில் ஜெம்புநாதபுரம் அருகே சாலை ஓரத்தில் இருந்த வேப்பமரத்தில் தொழிலாளர்கள் பயணித்து வந்த வேன் கட்டுபாட்டை இழந்து படுவேகமாக மோதியுள்ளது.

இதில், வேனில் பயணித்து வந்த மாணிக்கம், சங்கிலி, முருகன், ராஜேஷ், பாவாடை ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வேனில் பயணித்து வந்த சக்திவேல் சுப்பிரமணியன் உள்பட 5 பேர் படுகாயமடைந்ததால், ஆம்புலன்ஸ் உதவியுடன் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

omni van

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் சடலங்களை மீட்டு உடற்கூராய்வு செய்வதற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 பேரும் உயிரிழந்தனர். 8 பேருடன் அதிவேகத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மரத்தில் மோதி இருக்கலாம் எனத் தகவல்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் விழாவிற்குச் சென்று திரும்பிய 8 பேர் பரிதாபமாக சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.