Yellow Fever: கொசு மூலம் பரவும் நோய்; அறிகுறிகள் என்ன? வெளிநாடு பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு!

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்லும் பயணம் என்பது வெறும் இடமாற்றம் மட்டுமல்ல. சில நேரங்களில், ஒரு நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அந்த வகையில், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் சில பயணிகளிடம் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழ் கேட்கப்படுகிறது.

இது ஒரு சாதாரண பயண ஆவணம் அல்ல; ஒரு தொற்று நோய் ஒரு நாட்டுக்குள் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

காய்ச்சல்

இந்த விதிமுறைகளை இந்திய அரசு, சர்வதேச சுகாதார விதிகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தி வருகிறது.

மஞ்சள் காய்ச்சல் என்பது பாதிக்கப்பட்ட கொசுக்கள் மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். குறிப்பாக, பாதிக்கப்பட்ட கொசுக்கள் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.

அறிகுறிகள்

இந்த நோய் ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். சிலருக்கு நோய் தீவிரமடைந்தால் மஞ்சள் காமாலை, இரத்தக்கசிவு மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்பு போன்ற ஆபத்தான நிலைகள் ஏற்படலாம்.

மஞ்சள் காய்ச்சலுக்குக் குறிப்பிட்ட வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை இல்லை. அதனால், இந்த நோயைத் தடுப்பதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது.

மஞ்சள் காய்ச்சல் பரவும் நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மூலம் இந்த நோய் புதிய பகுதிகளுக்குப் பரவ வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்கும் வகையில், இந்திய அரசு சில பயண சுகாதார விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

மஞ்சள் காய்ச்சல் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகள், அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் பெறப்பட்ட மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இந்த நடவடிக்கை பயணிகளைத் தடுப்பதற்காக அல்ல.

விமானம்
விமானம்

இந்தியாவில் இந்த நோய் பரவாமல் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்ட உடனே கிடைக்கும் Certificate செல்லுபடியாகாது.

தடுப்பூசி போட்ட 10 நாட்களுக்குப் பிறகே அந்தச் சான்றிதழ் செல்லுபடியாகும். அதன் பிறகு அதன் செல்லுபடியாகும் காலம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்.

எனவே, மஞ்சள் காய்ச்சல் பாதிப்பு உள்ள நாடுகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள், பயணத்திற்கு முன்பே தடுப்பூசி தொடர்பான நடைமுறைகளை முடித்துக்கொள்வது அவசியம்.

சான்றிதழ் இல்லாமல் இந்தியா வந்தால்..?

மஞ்சள் காய்ச்சல் பாதிப்பு உள்ள நாட்டிலிருந்து வரும் பயணியிடம் சரியான தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால், சுகாதார அதிகாரிகள் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கலாம்.

அத்தகைய பயணிகள், கடைசியாகத் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருந்த நாளிலிருந்து அதிகபட்சம் 6 நாட்கள் வரை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம்.

தடுப்பூசி கவனம்!

குறிப்பாக 9 மாதத்திற்கும் குறைவான குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் சில குறிப்பிட்ட மருத்துவ நிலை உள்ளவர்கள் தடுப்பூசி பெறுவதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.