Doctor Vikatan: எப்போதாவது ஒன்றிரண்டு சிகரெட் பிடிப்பதில் ஆபத்து இல்லையா?
Doctor Vikatan: எனக்கு எப்போதாவது, என்றாவது ஒரு நாள் சிகரெட் பிடிக்கும் வழக்கம் இருக்கிறது. நண்பர்கள் சேர்ந்தால் மட்டும் அன்றைய தினம் ஒன்று அல்லது இரண்டு சிகரெட் பிடிப்பேன். வாரத்தில் ஒன்றிரண்டு நாள்கள் இப்படி நடக்கலாம். மற்றபடி தினமும் சிகரெட் பிடிப்பதில்லை. என்னுடைய இந்தப் பழக்கம் எனக்குப் பிரச்னையைத் தராதுதானே?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் சுரேஷ் சாகதேவன்
அவ்வப்போது மட்டும் புகைப்பவர்களுக்கு இந்த எண்ணம் வருவது இயல்புதான். தேநீர் குடிக்கும்போது, சாப்பிட்ட பிறகு அல்லது நண்பர்களுடன் நேரம் செலவிடும்போது ஒரு சிகரெட் பிடிப்பது பெரிய உடல்நலப் பிரச்னையாகத் தெரியாமல் இருக்கலாம். உடனடியாக இருமல், மார்பில் அசௌகர்யம் அல்லது மூச்சுத்திணறல் (Breathing difficulty) போன்றவையும் ஏற்படாமல் இருக்கலாம். ஆனால், உடலுக்குள் அதற்கான எதிர்வினை (Response) அதைவிட மிக விரைவாகத் தொடங்கிவிடுகிறது.
சிகரெட் புகை நுரையீரலுக்குள் சென்றவுடன், நிகோடின் (Nicotine), கார்பன் மோனாக்ஸைடு (Carbon monoxide) மற்றும் புகையிலைப் புகையில் உள்ள பல்வேறு வேதிப்பொருள்களுக்கு (Chemicals) உடல் ஆளாகிறது. உடனடியாக எந்த மாற்றத்தையும் நீங்கள் உணராமல் இருக்கலாம். ஆனால், இதயம், ரத்த நாளங்கள் மற்றும் நுரையீரல் ஆகியவை அந்தப் புகைக்கு எதிர்வினையாற்றத் தொடங்குகின்றன.
சிகரெட் பிடித்த பிறகு இதயத்தில் என்ன நடக்கிறது?
நிகோடின் (Nicotine) ரத்த ஓட்டத்தில் (Bloodstream) மிக வேகமாகக் கலக்கிறது. இது உடலின் மனஅழுத்த எதிர்வினையை (Stress response) தூண்டக்கூடும். இதனால் இதயத்துடிப்பு (Heart rate) மற்றும் ரத்த அழுத்தம் (Blood pressure) அதிகரிக்கலாம். அதே நேரத்தில், ரத்த நாளங்கள் சுருங்கவும் செய்யலாம். இதன் விளைவாக, உடல் முழுவதும் ரத்தத்தை அனுப்ப இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கலாம்.
இந்த மாற்றங்கள் தற்காலிகமாக இருக்கலாம். ஆனால், இதயம் மற்றும் ரத்த நாளங்களை உள்ளடக்கிய இதய-ரத்தநாள் அமைப்பு (Cardiovascular system), சிகரெட் புகைக்கு கிட்டத்தட்ட உடனடியாகவே எதிர்வினையாற்றுகிறது என்பதையே இதன் மூலம் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் நீண்ட காலமாகப் புகைப்பழக்கம் உள்ளவராக (Long-term smoker) மாறும் வரை, இந்த எதிர்வினைகள் ஏற்படுவதற்கு உடல் காத்திருக்க வேண்டியதில்லை.
நுரையீரலுக்குள் என்ன நடக்கிறது?
நுரையீரல் நேரடியாக சிகரெட் புகைக்கு ஆளாகிறது. இந்தப் புகையில் உள்ள எரிச்சலூட்டும் பொருள்கள் (Irritants), மூச்சுக்குழாய்களை (Airways) பாதிப்பதுடன், இயல்பான சுவாசச் செயல்பாட்டையும் (Respiratory function) பாதிக்கக்கூடும். சிகரெட் பிடித்த பிறகு சிலருக்கு தொண்டையில் எரிச்சல் அல்லது இருமல் ஏற்படலாம். ஆனால், வேறு சிலருக்கு எந்தவித அசாதாரண உணர்வும் இல்லாமல் இருக்கலாம்.
எந்த அறிகுறியும் தெரியவில்லை என்பதால், சிகரெட் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அர்த்தமல்ல. ஒருவர் உடனடியாக மூச்சுத்திணறல் (Breathlessness) அல்லது அசௌகர்யத்தை உணராவிட்டாலும், நுரையீரல் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருள்களுக்கு (Harmful substances) ஆளாகியிருக்கலாம்.
இந்த பாதிப்பு புகைப்பவருடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அருகில் இருப்பவர்களும் இரண்டாம் நிலைப் புகையை (Second-hand smoke) சுவாசிக்கலாம். அதாவது, புகைப்பவரைச் சுற்றியுள்ள குடும்பத்தினர் மற்றும் பிறர் சுவாசிக்கும் காற்றையும் புகைப்பழக்கம் பாதிக்கக்கூடும்.
மறைந்திருக்கும் பாதிப்பு: கார்பன் மோனாக்ஸைடு
சிகரெட் புகையில் உள்ள மற்றொரு முக்கியமான பொருள் கார்பன் மோனாக்ஸைடு (Carbon monoxide). கார்பன் மோனாக்ஸைடு, ரத்தம் ஆக்ஸிஜனை (Oxygen) திறம்பட எடுத்துச் செல்லும் திறனைக் குறைக்கிறது. எனவே, சிகரெட் பிடித்த பிறகும் ஒருவர் முற்றிலும் இயல்பாக உணர்ந்தாலும், உடலில் ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லப்படும் செயல்முறை (Oxygen transport) பாதிக்கப்படலாம்.
அதனால்தான், புகைப்பழக்கத்தால் ஏற்படும் உடனடி விளைவுகளை ஒருவர் எப்படி உணர்கிறார் என்பதை மட்டும் வைத்து மதிப்பிடக் கூடாது.

ஒரு சிகரெட்தான்... ஒன்றும் செய்யாதா?
அவ்வப்போது மட்டும் புகைப்பதால் எந்த ஆபத்தும் இல்லை என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக்கொள்ள பலர் நினைத்துக் கொள்கிறார்கள்.
உடனடியாக எந்த அறிகுறியும் இல்லாததால், உடலில் எந்தவித உடலியல் எதிர்வினையும் (Physiological response) ஏற்படவில்லை என்று அர்த்தமல்ல. சில மாற்றங்களை ஒருவர் உணராமல் இருக்கலாம். புகைக்கு வெளிப்படும் நிலை முடிந்த பிறகு, அந்த மாற்றங்கள் சில இயல்பு நிலைக்குத் திரும்பலாம். ஆனால், மீண்டும் மீண்டும் ஏற்படும் வெளிப்பாடு (Repeated exposure) தான் பிரச்னையே.
ஒரு சிகரெட் மற்றொரு சிகரெட்டாக மாறலாம். அவ்வப்போது மட்டும் பிடிக்கும் சிகரெட், படிப்படியாக ஒரு வழக்கமான பழக்கமாக மாறலாம். தொடர்ந்து புகைப்பதால், இதயம், ரத்த நாளங்கள் மற்றும் நுரையீரல் ஆகியவை நிகோடின், கார்பன் மோனாக்ஸைடு மற்றும் புகையிலைப் புகையில் உள்ள பிற தீங்கு விளைவிக்கும் பொருள்களுக்கு மீண்டும் மீண்டும் ஆளாகின்றன. காலப்போக்கில், இந்தத் தொடர்ச்சியான வெளிப்பாடு இதய நோய்கள் (Cardiovascular disease) மற்றும் சுவாச மண்டல நோய்கள் (Respiratory disease) ஏற்படுவதற்கு பங்களிக்கக்கூடும்.
ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு சிகரெட் மட்டும் பிடிப்பவர்களுக்கு?
ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு சிகரெட்டுகள் மட்டுமே பிடிப்பவர்கள், தங்களைப் புகைப்பவர்கள் என்றே நினைத்துக்கொள்ளாமலும் இருக்கலாம்.
அதிகமாகப் புகைப்பவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான சிகரெட்டுகளைப் புகைப்பது, புகைக்கு வெளிப்படும் அளவைக் குறைக்கிறது. ஆனால், அதனால் புகைப்பழக்கம் தீங்கு இல்லாததாகிவிடாது. அதிக அளவில் புகைப்பவர்களுக்கு மட்டுமே ஆபத்து உள்ளது என்றும் அர்த்தமில்லை.
புகைப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்பவர்களுக்கு, சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைப்பது முழுமையாக நிறுத்துவதற்கான ஒரு படியாக இருக்கலாம். ஆனால், இறுதி இலக்கு புகைப்பழக்கத்தை முழுமையாக நிறுத்துவதாக இருக்க வேண்டும்.

அவ்வப்போது மட்டும் புகைப்பவர் என்ன செய்ய வேண்டும்?
புகைப்பழக்கம் தினசரி பழக்கமாக மாறும் வரை காத்திருக்காமல், அதை நிறுத்த முடிவு செய்யுங்கள். நீங்கள் அவ்வப்போது மட்டும் புகைப்பவராக இருந்தாலும், இப்போதே நிறுத்துவது புகையிலைப் புகைக்கு மேலும் வெளிப்படுவதைத் தவிர்க்க உதவும்.
புகைப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்து, அது கடினமாக இருந்தால், மருத்துவ நிபுணரின் (Healthcare professional) ஆலோசனையைப் பெறுவது உதவியாக இருக்கும்.
டாக்டர் சுரேஷ் சாகதேவன்:
Interventional Pulmonology, Gleneagles Hospital Chennai.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.