நிறுவனம் முடிவெடுத்தால் மீண்டும் CEO ஆவது எனக்கு கௌரவம் - ஜென்சன்; Nvidia-வின் பதில் என்ன?

சீன உளவாளி, பெண் ஊழியர்களிடம் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார் என்று கடந்த வாரம் அமெரிக்க தொழிற்நுட்ப நிறுவனமான என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்றுத் தன்னுடைய பதவியில் இருந்து விலகினார் ஜென்சன் ஹுவாங்.

ஜென்சன் ஹுவாங்கிற்கு ஆதரவு

இதன் பின், சந்தையில் ஏ.ஐ. துறை மற்றும் சிப் துறை ஆட்டம் கண்டது. ஜென்சன் ஹுவாங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், அவரே என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகத் தொடர வேண்டும் என்று அவரது தலைமைப் பண்பைச் சுட்டிக்காட்டிப் பலரும் கருத்து தெரிவித்தனர்.

டொனால்ட் ட்ரம்ப், எலான் மஸ்க்

இவர்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கும் அடக்கம்.

இன்னொரு பக்கம், என்விடியாவின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஜென்சன் ஹுவாங் பதிவு

இதையடுத்து நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார் ஜென்சன் ஹுவாங்...

"கடந்த ஒரு வாரமாக, நண்பர்கள், தொழில்முறை சக ஊழியர்கள் மற்றும் நான் இதுவரை சந்தித்திராத பலரும் என்மீது பொழிந்த அன்பும் ஆதரவும் என்னை நெகிழ வைத்துள்ளது.

எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கருணை காட்டிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது எனக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது.

53 ஆண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்காவிற்கு வந்தேன்; அமெரிக்கக் குடிமகனானது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசுகளில் ஒன்றாகவும், பெருமைக்குரிய தருணமாகவும் கருதுகிறேன்.

அமெரிக்காவைத் தவிர எங்கும்...

என்விடியா எனது வாழ்நாள் உழைப்பு. எனது சக ஊழியர்களுடன் இணைந்து இதனை இன்றைய உயரத்திற்குக் கட்டியெழுப்பியது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமும் கௌரவமும் ஆகும்.

அமெரிக்காவைத் தவிர வேறு எங்கும் என்விடியா போன்ற ஒரு நிறுவனம் உருவாகியிருக்க முடியாது.

Nvidia - என்விடியா
Nvidia - என்விடியா

நான் நமது நாட்டை நேசிக்கிறேன்; என்விடியாவையும் நேசிக்கிறேன்.

என்விடியாவில் உள்ள அனைவரிடமும் எதிர்பார்க்கப்படும் உயர்ந்த தரத்திற்கு ஏற்ப நான் நடந்துகொள்ளவில்லை; எனது தனிப்பட்ட வாழ்க்கையில் சில தீவிரமான தவறுகளைச் செய்துவிட்டேன்.

நிறுவனத்தின் இயக்குநர் குழுவிற்கு நான் ஏற்படுத்திய சிக்கல்களுக்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். எனது தவறுகளுக்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன்; இயக்குநர் குழுவின் சுயாதீன விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.

ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே...

நான் பதவியிலிருந்து விலகியதிலிருந்து, என்விடியாவின் ஊழியர்கள், முதலீட்டாளர்கள், வணிகக் கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எனப் பல தரப்பிலிருந்தும் நான் மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாகத் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் குவிந்து வருகின்றன.

தொழில்நுட்பம், சந்தை, போட்டி மற்றும் புவிசார் அரசியல் சார்ந்த சிக்கலான சூழல்களை நிறுவனம் கடந்துகொண்டிருக்கும் வேளையில், பலரும் என்னை நேரடியாகத் தொடர்பு கொண்டு வருகின்றனர்.

என்விடியா என்பது ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே உருவாகும் அரிதான நிறுவனம்.

பெரும் கௌரவம்!

பங்குதாரர்கள், ஊழியர்கள், நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் நலன் கருதி நான் மீண்டும் திரும்புவதே சிறந்தது என இயக்குநர் குழு முடிவெடுத்தால், அந்த அழைப்பை ஏற்று மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பதைப் பெரும் கௌரவமாகக் கருதுவேன்.

தங்கள் நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. உங்கள் ஆதரவு என்னை மிகவும் பணிவுள்ளவனாக்கியுள்ளது.

எனது குடும்பத்தினருக்கு: நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்; உங்கள் அன்பிற்குத் தகுதியானவனாக வாழ எனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பேன்."

ஆனால், மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜென்சன் ஹுவாங்கை நியமிக்க முடியாது... அவரது ராஜினாமாவை ஒரு மனதாக நிறுவனம் ஏற்றுக்கொண்டது என்று என்விடியா நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் தலைவர் ஹார்வி சி. ஜோன்ஸ் தற்போது தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.