ஜென்சனின் மகள் டு அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி.! Nvidia-வின் அதிகார மாற்றத்தில் என்ன நடக்கிறது?

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவில், 33 ஆண்டுகளாக நிறுவனத்தை வழிநடத்திய ஜென்சன் ஹுவாங்கின் வெளியேற்றம் பெரும் தலைமை மாற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.

அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி (CEO) யார் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, அவரது மகள் மேடிசன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் செல்வாக்கு, நிறுவனத்தின் நிதிப் பொறுப்புகள், அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் என என்விடியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் பல கேள்விகள் எழுந்துள்ளன.

Jensen Huang - Nvidia

என்விடியாவுக்குள் இப்போது என்ன நடக்கிறது?

நவம்பர் 11-ம் தேதி, என்விடியாவின் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மற்றும் இயக்குநர் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலிருந்து ஜென்சன் ஹுவாங் விலகினார். இதையடுத்து, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக (CFO) இருந்த கோலெட் கிரெஸ் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிரந்தரத் தலைவர் தேர்வு செய்யப்படும் வரை அவர் இரு பொறுப்புகளையும் கவனிப்பார். 1993-ம் ஆண்டு நிறுவனத்தைத் தொடங்கிய ஹுவாங், 33 ஆண்டுகளாக அதன் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர். எனவே, இது ஒரு நிர்வாக மாற்றம் மட்டுமல்ல; செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையின் முதன்மை நிறுவனத்தில் ஏற்படும் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

மீண்டும் பொறுப்பேற்பாரா ஜென்சன் ஹுவாங்?

ஹுவாங் பதவி விலகிய சில நாள்களிலேயே, அவரை மீண்டும் தலைமைப் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹுவாங் மீண்டும் பொறுப்பேற்றால் தமக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரை மீண்டும் கொண்டுவரக் கோரும் இணைய மனுவில் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

Jensen Huang - Nvidia

ஆனால், ஹுவாங்கை மீண்டும் நியமிப்பது குறித்து இயக்குநர் குழு பரிசீலிக்கவில்லை என்று அக்குழுவின் முடிவுகளை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நிறுவனத்தின் தலைமை மாற்றம் தொடர்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிர்வாகிகளைப் பரிசீலிக்க, ஆட்சேர்ப்பு நிறுவனத்தைத் தேர்வு செய்யும் பணியில் இயக்குநர் குழு ஈடுபட்டுள்ளது. மேலும், ஹுவாங் தொடர்பான புகார்கள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த விசாரணைகள் முடிவடையாத நிலையில், அவரை மீண்டும் நியமிப்பது நிர்வாக ரீதியான சிக்கல்களையும் உருவாக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பரிசீலனையில் உள்ள பெயர்கள்

நிரந்தரத் தலைமை நிர்வாக அதிகாரி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், நிறுவனத்துக்குள்ளும் வெளியிலும் சில பெயர்கள் அடிபடுகின்றன. கோலெட் கிரெஸ் நிறுவனத்தின் நிதி நிலை, வணிக ஒப்பந்தங்கள் மற்றும் செயல்பாடுகளை நன்கு அறிந்தவர். இடைக்காலப் பொறுப்பில் இருப்பதால், நிர்வாகத் தொடர்ச்சிக்காக அவரே நிரந்தரமாக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மற்றொரு முக்கியப் பெயர் இயான் பக். என்விடியாவின் வரைகலைச் செயலி (GPU) மற்றும் கூடா (CUDA) தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ள அவர், நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவை வழிநடத்தும் அனுபவம் கொண்டவர். நீண்டகாலச் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை முன்னெடுக்கக்கூடிய உள்நாட்டு நிர்வாகியாக அவர் பேசப்படுகிறார்.

வெளிநபர்களில், ஆர்ம் (ARM) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் என்விடியாவின் முன்னாள் நிர்வாகியுமான ரெனே ஹாஸ் பெயர் குறிப்பிடப்படுகிறது. ஏ.எம்.டி (AMD) நிறுவனத்தின் லிசா சூ, ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் உள்ளிட்ட பெயர்களும் சில ஊடக விவாதங்களில் இடம்பெற்றுள்ளன. ஆனால், இவர்கள் யாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நபர்கள் அல்ல. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிர்வாகிகளைப் பரிசீலிக்கப்போவதாக மட்டுமே இயக்குநர் குழு தெரிவித்துள்ளது.

ஜென்சன் குடும்பத்தின் செல்வாக்கு தொடருமா?

ஜென்சன் ஹுவாங் பதவியிலிருந்து விலகினாலும், என்விடியாவில் அவரது குடும்பத்தின் செல்வாக்கு தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது மகள் மேடிசன் ஹுவாங், நிறுவனத்தில் இயற்பியல் செயற்கை நுண்ணறிவு (Physical AI) பிரிவின் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பச் சந்தைப்படுத்தல் பணிகளை கவனிக்கும் மூத்த இயக்குநராகப் பணியாற்றுகிறார். நிறுவனத்தில் அவருக்கு அதிகாரப்பூர்வமான பொறுப்பு உள்ளது.

அதேநேரம், உயர் நிர்வாகக் கூட்டங்களில் பங்கேற்பது, முக்கிய முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவது உள்ளிட்ட கூடுதல் அதிகாரம் அவருக்கு இருந்ததாகச் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

மேடிசன் ஹுவாங்

நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் அவருக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், சிலர் அவரது நிர்வாக அணுகுமுறை குறித்து அதிருப்தி தெரிவித்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ஹுவாங்கின் மகன் ஸ்பென்சர் எந்திரவியல் (Robotics) தயாரிப்பு மேலாண்மைப் பிரிவிலும், மருமகன் நிக்கோ காப்ரெஸ் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பிரிவிலும் பொறுப்புகளை வகிக்கின்றனர். குறிப்பாக, நிறுவனத்தின் பெரிய அளவிலான மேகக்கணிமை (Cloud) ஒப்பந்தங்களில் காப்ரெஸின் பங்கு கவனம் பெற்றுள்ளது. எனவே, புதிய தலைவர் தேர்வுடன், குடும்ப உறுப்பினர்களின் நிர்வாகப் பங்களிப்பு எவ்வாறு அமையும் என்பதும் முக்கியமானதாகிறது.

Jensen Huang - Nvidia

530 பில்லியன் டாலர் நிதிப் பொறுப்புகள்

என்விடியாவின் அடுத்த தலைவருக்கு எதிராக இருப்பது நிர்வாக மாற்றம் மட்டுமல்ல. க்ளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் தரவு மையங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், எதிர்கால நிதிப் பொறுப்புகள் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளன. நிறுவனத்தின் உறுதிப்பாடுகள் மற்றும் உத்தரவாதங்கள் சுமார் 530 பில்லியன் டாலராக உயர்ந்ததாக வெளியான தகவல்கள் கவனம் பெற்றுள்ளன. இதில் சிப் உற்பத்திக்கான ஒப்பந்தங்கள், மேகக்கணிமை நிறுவனங்களுக்கான ஆதரவு மற்றும் தரவு மையத் திட்டங்கள் அடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்தத் தொகையை நிறுவனத்தின் கடன் தொகையாகப் பொருள் கொள்ளக்கூடாது; ஒப்பந்தப் பொறுப்புகள், உத்தரவாதங்கள் மற்றும் கடன் ஆகியவை வெவ்வேறு நிதி வகைகள். இந்தப் பொறுப்புகளைத் தொடர்வதா அல்லது மறுபரிசீலனை செய்வதா என்பது புதிய நிர்வாகத்தின் முக்கிய முடிவுகளில் ஒன்றாக இருக்கும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.