Doctor Vikatan: 50 வயதில் மலச்சிக்கல்... மருந்து எடுத்தால் மட்டுமே தீர்வு; நிரந்தரமாகிவிடுமோ?
Doctor Vikatan: என் வயது 50. எனக்கு மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அது ரொம்பவும் தீவிரமாகும்போது மட்டும் மருந்து எடுத்துக்கொள்வேன். மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் எடை அதிகரிப்பும் இருக்குமா.... மருந்து எடுத்துக்கொண்டால், அதுவே பழக்கமாகிவிடும் என்பது உண்மையா? மலச்சிக்கல் தீர சாப்பிட வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என்ன?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் எம். பரத்குமார்
உணவில் நார்ச்சத்து (Fibre) குறைவாக இருப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது மற்றும் உடல் உழைப்பு குறைவது ஆகியவையே மலச்சிக்கலுக்குப் பொதுவான காரணங்கள்.
மேலும், சில மருந்துகள், ஹார்மோன் மாற்றங்கள், தைராய்டு குறைபாடு (Hypothyroidism) மற்றும் சர்க்கரை நோய் (Diabetes) போன்ற உடல்நலப் பிரச்னைகளும் குடல் இயக்கத்தை பாதிக்கலாம். வயதாகும்போது குடலின் இயல்பான செயல்பாடு சற்று மந்தமாவதும் இதற்கு ஒரு காரணமாகும்.
50 வயதுக்குப் பிறகு புதிதாக மலச்சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது அது நீண்ட நாள்களாகத் தொடர்ந்தாலோ, அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கீழ்க்காணும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்:
மலத்தில் ரத்தம் வருதல்
காரணமின்றி உடல் எடை குறைதல்
ரத்தச்சோகை (Anaemia)
தொடர்ச்சியான வயிற்று வலி அல்லது வயிறு வீக்கம்
வயிற்றில் ஏதேனும் கட்டி போல் தட்டுப்படுதல்
மலம் கழிக்கும் பழக்கத்தில் திடீர் மாற்றம்
இவை பெருங்குடலில் ஏற்படும் பாதிப்புகள் அல்லது கட்டிகளின் (Colon tumour) அறிகுறிகளாகவும் இருக்கலாம். சில சமயங்களில் பெருங்குடலில் கட்டி வளர்வதால் பாதை சுருங்கி, மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படலாம் அல்லது மலத்தின் அளவு (மெல்லியதாக) மாறலாம்.

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது (குறிப்பாக பெற்றோர், உடன்பிறந்தவர்கள் அல்லது பிள்ளைகளுக்கு) பெருங்குடல் புற்றுநோய் இருந்திருந்தால், அதை மருத்துவரிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அத்தகையவர்களுக்கு முன்கூட்டியே அல்லது அடிக்கடி பரிசோதனைகள் (Colonoscopy ) செய்ய வேண்டியிருக்கும்.
எனவே, நீடித்த மலச்சிக்கலை வெறும் வயது மூப்பு அல்லது உணவுப் பழக்கத்தால் வந்தது என்று நினைத்துத் தள்ளிப்போடாமல், தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.
நீடித்த மலச்சிக்கலால் உடல் எடை அதிகரிக்குமா?
மலச்சிக்கல் நேரடியாக உடலில் கொழுப்பைச் சேர்க்காது. அதனால் நிரந்தரமாக உடல் எடை அதிகரிக்காது. ஆனால், குடலில் மலம் தேங்கியிருப்பதால் வயிற்று உப்புசம், அசௌகர்யம் மற்றும் தற்காலிகமாக எடை கூடியது போன்ற உணர்வு ஏற்படலாம்.
ஒருவேளை காரணமின்றித் தொடர்ந்து உடல் எடை அதிகரித்துக் கொண்டே இருந்தால், அதற்கு வேறு ஏதேனும் உடல்நலக் காரணங்கள் உள்ளனவா என மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
மலச்சிக்கலைச் சரிசெய்ய உணவில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்... எவற்றைத் தவிர்க்க வேண்டும்?
குடல் இயக்கம் சீராக இருக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மிகவும் அவசியம்.

சேர்த்துக்கொள்ள வேண்டியவை: பச்சைக் கீரைகள், பப்பாளி, கொய்யா, பேரிக்காய் போன்ற பழங்கள், முழு தானியங்கள், ஓட்ஸ், பயறு மற்றும் பருப்பு வகைகளைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தவிர்க்க வேண்டியவை: அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Processed foods), மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து உணவுகள் மற்றும் நார்ச்சத்து இல்லாத உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
கவனிக்க வேண்டியவை: வயிற்று உப்புசம் ஏற்படுவதைத் தவிர்க்க, நார்ச்சத்து உணவுகளை ஒரேயடியாக அதிகரிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனுடன் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளைச் செய்வதும் குடல் இயக்கத்தை மேம்படுத்தும்.
மலமிளக்கி மருந்துகளை (Laxatives) தொடர்ந்து பயன்படுத்தினால் அது பழக்கமாகிவிடுமா... எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
எல்லா மலமிளக்கி மருந்துகளும் உடலுக்குப் பழக்கமாகிவிடுவதில்லை (Dependency). ஆனால், குடலைத் தூண்டி மலம் கழிக்க வைக்கும் சில வகை மருந்துகளை (Stimulant laxatives) மருத்துவர் ஆலோசனையின்றி நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தினால், குடல் தொடர்பான வேறு சிக்கல்கள் ஏற்படலாம். அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படியே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீடித்த மலச்சிக்கல், மலத்தில் ரத்தம், காரணமின்றி எடை குறைதல், ரத்தச்சோகை அல்லது மலம் கழிக்கும் பழக்கத்தில் திடீர் மாற்றம் ஆகியவை இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி அதற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.

மலச்சிக்கலைத் தவிர்க்க ஒரு நாள் மாதிரி உணவுத் திட்டம்
நமது அன்றாட தென்னிந்திய உணவுப் பழக்கத்திற்கு ஏற்ற, எளிமையான மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுத் திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலையில் தூங்கி எழுந்தவுடன் 1 முதல் 2 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கவும் (விருப்பப்பட்டால் சிறிது எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம்). இதனுடன் இரவே ஊறவைத்த 4 முதல் 5 பாதாம் அல்லது உலர் திராட்சையைச் சாப்பிடலாம். காலை உணவாக (8:00 - 9:00 மணிக்குள்) 2 முதல் 3 ராகி அல்லது கம்பு தோசை, இட்லி அல்லது ஓட்ஸ் கஞ்சியுடன் நிறைய காய்கறிகள் போட்ட சாம்பார் அல்லது சட்னி சேர்த்துக்கொள்ளுங்கள்.
காலை 11:00 மணியளவில் சிற்றுண்டியாக ஒரு கிண்ணம் நறுக்கிய பப்பாளி, தோலுடன் கூடிய ஒரு கொய்யாப்பழம் அல்லது ஒரு டம்ளர் மோர் அருந்தலாம். மதிய உணவிற்கு (1:00 - 2:00 மணிக்குள்) 1 கப் கைக்குத்தல் அரிசி சாதம் அல்லது 2 சப்பாத்தியுடன், 1 கப் கீரை கூட்டு அல்லது பொரியல், பருப்பு, காய்கறிகள் நிறைந்த கூட்டு மற்றும் சிறிது தயிர் எடுத்துக்கொள்ளுங்கள்.
மாலை 4:30 முதல் 5:30 மணிக்குள் ஒரு கப் வேகவைத்த சுண்டல் (கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு) மற்றும் பால் குறைவான டீ அல்லது கிரீன் டீ குடிக்கலாம். இரவு உணவை (7:30 - 8:30 மணிக்குள்) 2 முழு கோதுமை சப்பாத்தி அல்லது தினை/வரகு உப்புமாவுடன் காய்கறி குருமா அல்லது தால், மற்றும் சிறிய கிண்ணம் வெள்ளரிக்காய் அல்லது கேரட் சாலட் சேர்த்து எளிமையாக முடித்துக்கொள்ளுங்கள். இரவு உறங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான பால் குடிப்பது நல்லது.
இத்துடன் நாள் முழுவதும் குறைந்தது 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது குடல் இயக்கத்தைச் சீராக்கப் பெரிதும் உதவும்.
டாக்டர் எம். பரத்குமார்:
அப்போலோ மருத்துவமனையில் , குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

