ரயிலில் கேரள மூதாட்டியிடம் 50 பவுன் நகை திருட்டு; திண்டுக்கல் இன்ஸ்டா பிரபலம் சிக்கியது எப்படி?
கேரள மாநிலம் செங்கன்னூரைச் சேர்ந்த குமாரி என்ற மூதாட்டி, சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கிருந்து திருமணத் தேவைக்காக 50 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு, சென்னையில் இருந்து செங்கன்னூர் செல்லும் ரயிலில் நவம்பர் 3-ம் தேதி தனியாகப் பயணம் செய்துள்ளார்.
இதற்கிடையே, தமிழகத்தின் சேலத்தில் இருந்து அதே ரயிலில் ஏறிய திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், மூதாட்டியிடம் நகை இருப்பதை நோட்டமிட்டுள்ளார். ரயில் பாலக்காடு மற்றும் திருச்சூர் இடையே சென்று கொண்டிருந்தபோது, எவ்வித தடயமும் இல்லாமல் மூதாட்டியின் 50 பவுன் தங்க நகைகளை மிக லாவகமாகத் திருடிக்கொண்டு பாலமுருகன் தப்பியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகாரின் பேரில், கேரள ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர விசாரணை நடத்தினர். தன்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்து நகை திருடியுள்ளார் பாலமுருகன். பின்னர், சிசிடிவி கேமராக்களில் அடையாளம் தெரியாமல் இருக்க பல இடங்களில் வைத்து சட்டையை மாற்றியுள்ளார். இதனால் துப்பு துலக்குவதில் போலீஸாருக்கு ஆரம்பத்தில் சவால் நிலவியது. இதையடுத்து, ரயில் நிலையங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
அதில் சந்தேகத்துக்கிடமான 10 நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் துப்பு துலக்கியதில், திருட்டில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பது உறுதியானது. தொடர்ந்து அவரது சமூக வலைத்தளப் பக்கங்களைக் கண்காணித்த போலீஸார், அதில் திருட்டுபோன நகைகளில் உள்ள ஒரு செயினை கழுத்தில் போட்டு ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்தே பாலமுருகன் திருட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இன்ஸ்டாகிராமில் ஏராளமான ஃபாலோயர்களைக் கொண்ட பாலமுருகன், சமூக வலைத்தளங்களில் பக்திமானாகவும், ஏழை எளிய மக்களுக்கு உதவும் நல்ல உள்ளம் கொண்டவராகவும் தன்னை அடையாளப்படுத்தி வந்துள்ளார். சொந்த ஊரான திண்டுக்கல்லிலும் ஊர்மக்களுக்குப் பிரியமானவராக வலம் வந்துள்ளார்.

ரயிலில் 50 பவுன் நகையைக் கொள்ளையடித்த பிறகும், எவ்விதப் பதற்றமும் இன்றி சொந்த ஊருக்குச் சென்ற பாலமுருகன், தனது குடும்பத்தினருடன் கோலாகலமாக தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். தீபாவளிக்கு ஊர்மக்களுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கியும், கொண்டாட்டங்களில் பங்கேற்றும் நல்லவர் போல வலம் வந்துள்ளார்.
இந்நிலையில், ஒரு வார காலமாகப் பாலமுருகனின் நடமாட்டத்தைத் தீவிரமாகப் பின்தொடர்ந்து வந்த கேரள போலீஸார், அவர் திருடிய நகைகளை விற்பனை செய்வதற்காக கோவைக்குச் சென்றிருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து கோவையில் நகைகளை விற்க முயன்றபோது, கேரள போலீஸார் மற்றும் ஆர்.பி.எஃப் படையினர் பாலமுருகனைச் சுற்றிவளைத்துக் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகளை போலீஸார் மீட்டுள்ளனர். திருடுபோன தனது நகை ஒரே வாரத்தில் மீட்டது மகிழ்ச்சியளிப்பதாக மூதாட்டி குமாரி தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


