ஆந்திராவைப் பின்னுக்குத் தள்ளி ரூ.2000 கோடி முதலீடு; அள்ளிய தமிழகம்; சந்திரபாபுவின் புது ரூட் என்ன?
தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகள் ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூட் மாறுகின்றன என்கிற குற்றச்சாட்டு தற்போது பரவலாக இருந்து வருகிறது.
இந்த நேரத்தில், ஆந்திரப் பிரதேசத்தை விடுத்து பிரேசில் நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டில் உள்ள தருமபுரிக்குத் தங்களுடைய முதலீடுகளைக் கொண்டு வந்துள்ளது.
என்ன முதலீடு?
பிரேசிலைச் சேர்ந்த மின்சாதன உற்பத்தி நிறுவனமான WEG தான் தருமபுரியில் முதலீடு செய்ய உள்ள நிறுவனம். இந்த முதலீட்டின் மொத்த மதிப்பு ரூ.2,000 கோடி உற்பத்தித் திட்டம் ஆகும்.
இந்தத் தொழிற்சாலையின் மூலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பின்தங்கிய மாவட்டமான தருமபுரிக்குப் புதிய தொழில் வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்றும் கூறப்படுகிறது.
சந்திரபாபு நாயுடு பிளான்
இன்று ஆந்திரப் பிரதேசத்தில் இந்தியத் தொழில் கூட்டமைப்பு மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டில் சந்திரபாபு நாயுடு, “‘முதலீட்டுப் பாதுகாப்புச் சட்டம்’ குறித்து மத்திய அமைச்சரிடம் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன்.
ஒவ்வொரு முதலீட்டாளரும் முதலீடு செய்கிறார்கள். ஆனால் ஆட்சி மாற்றங்கள், பழிவாங்கும் அரசியல் மற்றும் பல்வேறு நிச்சயமற்ற தன்மைகள் குறித்துப் பலருக்கும் தீவிரமான கவலைகளும் சந்தேகங்களும் உள்ளன.
நான் இப்போது மாநில அளவில் ஒரு முதலீட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வரப்போகிறேன். மாநில அளவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதும், அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
இதை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, தேசிய அளவிலும் இதே போன்றதொரு சட்டத்தைக் கொண்டு வர நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இது நடைமுறைக்கு வந்தால், இந்தியாவிற்குள் முதலீடுகள் பெருமளவில் குவிவதை நீங்கள் பார்ப்பீர்கள். உலகளாவிய முதலீட்டாளர்கள் நமது நாட்டில் முதலீடு செய்யத் தாமாக முன்வருவார்கள்.

நமது மத்திய அமைச்சர் (இந்தியத் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல்) மிகவும் புத்திசாலி, திறமையானவர் மற்றும் செல்வாக்கு மிக்கவர். முதலீட்டையும் வளர்ச்சியையும் ஊக்குவிப்பதில் எப்போதும் முனைப்புடன் செயல்படும் நமது பிரதமரை அவரால் நிச்சயம் சம்மதிக்க வைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
இதை மட்டும் நாம் சாதித்துவிட்டால், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்று பேசியிருக்கிறார்.
சரிதான்!
சந்திரபாபு நாயுடு கூறுவது சரிதான். கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தன. இப்போது தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததும் பல்வேறு முதலீடுகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றன.
ஆட்சி மாற்றம்தான் முதலீடு மடை மாற்றத்திற்கு முழுக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அதுவும் ஒரு காரணம்தான்.
ஒவ்வொரு ஆட்சியிலும் திட்டமும், அணுகுமுறையும் மாறும். இதனால், முதலீடுகள் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான சட்டம் ஒன்று வரும்போது, அந்தத் திட்டம் எப்போதும் தொடரும்.

தங்களுடைய முதலீடுகளுக்குப் பாதுகாப்பு உணர்வையும், உறுதியையும் அது அளிக்கும்.
சந்திரபாபு நாயுடு விரைவில் அப்படியான ஒரு சட்டத்தைத் தங்கள் மாநிலத்தில் கொண்டுவர உள்ளதாகக் கூறியிருக்கிறார்.
மத்திய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறதோ, இல்லையோ, தமிழ்நாடு அரசு இந்தச் சட்டத்திற்கான முன்னெடுப்பைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.
காரணம், தமிழ்நாடு ஒரு உற்பத்தி மாநிலம் மற்றும் வேகமாக வளரும் மாநிலம். இந்த வளர்ச்சி இதே வேகத்தில் தொடர வேண்டுமானால், முதலீடுகள் இன்னும் அதிகரிக்க வேண்டும்.
இன்னொரு பக்கம், ஏற்கெனவே ஆந்திரா முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாட்டிற்குப் போட்டியாக இருக்கிறது. அங்கே இப்படி ஒரு சட்டம் வந்தால், தமிழ்நாட்டிற்கு முதலீட்டை ஈர்ப்பதற்கு இன்னும் கடினமாகும்.
இதனால், இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு விரைவில் எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


