தாளவாடி சாணியடி திருவிழா: பாரம்பர்ய நம்பிக்கையும்... மருத்துவர்களின் எச்சரிக்கையும்!
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் அமைந்துள்ள கும்டாபுரம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தீபாவளி முடிந்த மூன்றாவது நாளில் கொண்டாடப்படும் பாரம்பர்ய சாணியடித் திருவிழா உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
விவசாயம் செழிக்கவும், கால்நடைகளும் ஊர் மக்களும் நோயின்றி வாழவும் வேண்டி, கோயில் வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள மாட்டுச் சாணத்தை உருண்டையாக உருட்டி ஒருவர் மீது ஒருவர் வீசி மக்கள் வழிபடுகின்றனர்.
சாணத்தில் தோன்றியதாக மக்களால் நம்பப்படும் பீரேஸ்வர சுவாமியின் அருளால், சாணத்தை உடலில் பூசிக்கொண்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது இப்பகுதி மக்களின் காலங்காலமான நம்பிக்கையாக உள்ளது. அதேவேளையில், சமூக வலைத்தளங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களிலும் இந்தத் திருவிழா பேசுபொருளாக மாறி வருகிறது. பாரம்பர்ய நம்பிக்கைகளையும் தாண்டி நவீன மருத்துவ உலகம் முக்கியமான சுகாதார எச்சரிக்கைகளை முன்வைக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய ஈரோடு மாவட்ட பொதுநல மற்றும் தொற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் சிலர், "மாட்டுச் சாணம் விவசாயத்திற்குச் சிறந்த உரம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மாட்டுச் சாணத்தை நேரடியாக மனித உடலில் பூசுவதால் மருத்துவப் பயன்கள் கிடைக்கும் என எந்த ஆய்வுகளும் நிரூபிக்கவில்லை. மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் மாட்டுச் சாணத்தில் உள்ளன.
சாணத்தை உடலில் பூசுவதாலும், கூட்டமாக நின்று ஒருவர் மீது ஒருவர் வீசுவதாலும் அவை வாய், மூக்கு மற்றும் கண்களுக்குள் சென்று கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் கண் தொற்றுகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. குறிப்பாக, உடலில் சிறிய காயங்கள் அல்லது கீறல்கள் உள்ளவர்களுக்குக் கடுமையான சருமத் தொற்றுகளும் ஒவ்வாமையும் ஏற்படும் அபாயம் உள்ளது.
பாரம்பர்ய வழிபாடு என்பதால் அதில் பங்கேற்கும் மக்கள் தங்களின் உடல்நலனில் அக்கறை கொள்வது அவசியம். உடலில் காயங்கள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானவர்கள் சாணியடி நிகழ்வைத் தவிர்ப்பதும், விழா முடிந்தவுடன் கிருமிநாசினி சோப்பு பயன்படுத்திச் சுத்தமான நீரில் குளிப்பதும் அவசியம்" என்றனர்.

அரசின் தாளவாடி பகுதி வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், "கும்டாபுரம் கிராமத்தில் மட்டும்தான் இந்தத் திருவிழா நடக்கிறது. வெளியூர்களில் இருந்து அதிகளவில் மக்கள் வருகிறார்கள். மாட்டுச் சாணத்தை உடலில் பூசுவதன் மூலம் உண்ணிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்றவை ஏற்படும் அபாயமும் இருக்கிறது. வழிபாடு முடிந்ததும் உடனடியாக உடலைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றும், காய்ச்சல் அல்லது நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் செவிலியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

