`எங்கள் கொண்டாட்டம் கொஞ்சம் தாமதமாகத்தான்..- நம் தீபாவளிக்கு பின்னால் இயங்கும் ஓய்வில்லா மனிதர்கள்!
நம் தீபாவளிக்குப் பின்னால்.. ஓய்வில்லாத மனிதர்கள்!
தீபாவளி அன்று அதிகாலையில் எழுவது நமக்கு ஒரு கொண்டாட்டம். ஆனால், சிலருக்கு அதுவே வேலை நேரம்! நாம் வெடிக்கும் பட்டாசுகளின் சத்தத்துக்கு நடுவே நாளிதழ் விநியோகமும் நடக்கும்; நாம் கொண்டாடி முடித்த பிறகு அதே பட்டாசுகளின் குப்பைகளை அகற்றும் வேலையும் நடக்கும். சாலைகளில் காவலர்கள், தீயணைப்பு நிலையங்களில் வீரர்கள், மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எனப் பண்டிகை நாளிலும் ஓய்வில்லாமல் இயங்கும் உலகம் ஒன்று இருக்கிறது.
இவர்களுக்கும் தீபாவளி இருக்கிறது. ஆனால், இவர்களுடைய கொண்டாட்டம் மட்டும் கொஞ்சம் தாமதமாகத்தான் தொடங்குகிறது.
அதிகாலை 3 மணிக்கே தொடங்கும் தீபாவளி!
நம்முடைய வீட்டு வாசலில் நாளிதழ் வந்து விழும்போது, அதற்குப் பின்னால் ஒருவருடைய அதிகாலை உழைப்பு இருப்பதைப் பெரும்பாலும் நினைத்துப் பார்ப்பதில்லை. நாளிதழ் விநியோகஸ்தர்களான மாயாண்டி, சேகர் இருவருக்கும் தீபாவளியும் மற்ற நாட்களைப் போலவே வழக்கம் போல தான் தொடங்குகிறது.
அதிகாலை 3 அல்லது 3.30 மணிக்கே எழுந்து நாளிதழ்களை விநியோகிக்கத் தொடங்கும் மாயாண்டி, சேகர் போன்றவர்களுக்கு தீபாவளி அன்றும் வழக்கமான வேலை நாள்தான். வீடுவீடாக நாளிதழ்களைக் கொண்டு சேர்த்துவிட்டு, அதன் பிறகுதான் வீட்டுக்குச் சென்று குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாட முடியும். சிறுவயதில் சொந்த ஊரில் குடும்பத்தினருடன் கொண்டாடிய தீபாவளி நினைவுகள் இன்றும் அவர்களுக்குள் இருக்கின்றன. இப்போது அந்தக் கொண்டாட்டங்கள் மாறியிருந்தாலும், வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று குழந்தைகளைப் பார்ப்பதில்தான் அவர்களுடைய தீபாவளி மகிழ்ச்சி தொடங்குகிறது.
நம்முடைய பாதுகாப்புக்காகக் காக்கி உடையில்!
தீபாவளி நாளில் பட்டாசுக் கடைகள், மக்கள் கூட்டம், போக்குவரத்து நெரிசல் எனப் பாதுகாப்புப் பணிகளில் காவல்துறையினருக்கு வேலை அதிகம். மற்றவர்கள் கொண்டாட்டத்தில் இருக்கும்போது, மக்களின் பாதுகாப்பைக் கவனிப்பதே அவர்களுடைய முதன்மைப் பொறுப்பு.
"குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தும்போது, அதனால் ஒருவருடைய குடும்பமே சந்தோஷத்தை இழந்து கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது மனவேதனையாக இருக்கும். அது மறக்க முடியாத அனுபவம்" என்கிறார் காவல்துறை அதிகாரி செந்தில் தங்கவேல்.
குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட முடியாமல் இருப்பது சற்றுக் கடினமாக இருந்தாலும், மக்களுக்குச் சேவை செய்ய வந்த பிறகு காக்கிச் சட்டையின் பொறுப்பை உணர்ந்து பணியாற்றுவதாகவும் தெரிவிக்கிறார்.
சாப்பிட அமர்ந்த நேரத்தில் வந்த அவசர அழைப்பு!
பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகள், எதிர்பாராத சம்பவங்கள் எனத் தீபாவளி நாளில் தீயணைப்புத் துறையினருக்கும் கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயப்பன் குமார் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது, தீபாவளி அன்று காலையில் சாமி கும்பிட்டுவிட்டு குடும்பத்துடன் சாப்பிட அமர்ந்திருக்கிறார். அப்போது பெட்ரோல் பங்க் ஒன்றில் ஒருவர் பெட்ரோலைத் தலையில் ஊற்றிக்கொண்டு நிற்பதாக அவசர அழைப்பு வந்திருக்கிறது. உடனடியாகக் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டு சம்பவ இடத்துக்குச் சென்றவர், உதவி ஆய்வாளருடன் இணைந்து அந்த நபரைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
குடும்பத்துடன் இருந்த ஒரு தருணம், அடுத்த நொடியே பணியாக மாறியிருக்கிறது. பட்டாசுகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்து குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் முறையாகச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.
மருத்துவமனையிலும் தொடரும் தீபாவளிப் பணி!
பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் சிறிய கவனக்குறைவுகூடத் தீக்காயங்கள், கண் பாதிப்புகள் எனப் பெரிய பிரச்னையாக மாறலாம். அப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்கு இருக்கிறது.
தீபாவளி நாளில் மருத்துவமனையில் வேலை எப்படி இருக்கும் என்று கேட்டபோது, "கடினமாக இருக்கும்; கணிக்க முடியாது" என்பதுதான் மருத்துவர் நகுலவேந்தனின் பதில். எந்த நேரத்தில் எத்தனை பேர் அவசர சிகிச்சைக்கு வருவார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாத சூழல் இருக்கும். அதனால் எப்போதும் தயாராக இருக்க வேண்டியிருக்கும்.
மற்றவர்களின் மகிழ்ச்சியைக் கெடுக்க விரும்பவில்லை என்றும், தாங்கள் அமைதியாகவே தீபாவளியைக் கொண்டாடுவோம் என்றும் மருத்துவர்கள் தங்களுடைய கருத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.
பட்டாசு வெடிக்கிறோம்... குப்பைகளை அள்ளுவது யார்?
தீபாவளி முடிந்த மறுநாள் தெருக்களில் பட்டாசுக் குப்பைகள் குவிந்திருக்கும். அவற்றை அகற்றுவதற்காக அதிகாலையிலேயே பணியைத் தொடங்கிவிடுகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.
"தீபாவளி அன்னைக்கும் எங்களுக்கு வேலைதான். வேலையை முடிச்சிட்டுத்தான் வீட்டுக்குப் போக முடியும். காலை 11, 12 மணி ஆயிடும். அதுக்கப்புறம்தான் பிள்ளைகளோட கொண்டாட முடியும்" என்கிறார் தூய்மைப் பணியாளர் பச்சைமலை

தீபாவளிக்கு அடுத்த நாள் குப்பைகள் அதிகமாகச் சேர்வதால், அவற்றை அகற்றுவதற்குப் பிற்பகல் 3, 4 மணி வரைகூட ஆகிவிடுமாம். 52 வயதான குமார், 37 ஆண்டுகளாகத் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். "எங்களுடைய தீபாவளி எங்களுக்குக் கிடையாது; எங்க பிள்ளைகளுக்குத்தான். நம்ம குழந்தைகளோட சேர்ந்து கொண்டாட முடியலையேங்கிற வருத்தம் இருக்கும்" என்கிறார். வேலைக்குச் சென்றால்தான் சம்பளம் என்பதால், பண்டிகை நாளிலும் பணிக்குச் செல்வதைத் தவிர்க்க முடியாத சூழல்.
நாம் கொண்டாடும் ஒரு நாளுக்குப் பின்னால் இத்தனை பேருடைய உழைப்பு இருக்கிறது. பட்டாசு வெடித்த பிறகு குப்பைகளைப் பொறுப்புடன் அகற்றுவது, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது, பாதுகாப்பாகப் பட்டாசு வெடிப்பது என நம்முடைய சிறிய கவனம்கூட இவர்களுடைய பணிச்சுமையைக் குறைக்க உதவும்.
இந்தத் தீபாவளியில் நம்முடைய குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியைப் பகிர்வதோடு, நம்முடைய மகிழ்ச்சிக்காக உழைக்கும் இவர்களையும் நினைவில் கொள்வோம்.
ஏனென்றால், தீபாவளி என்பது நாம் கொண்டாடும் பண்டிகை மட்டுமல்ல; நம்முடைய கொண்டாட்டம் சிறப்பாக அமைய உழைக்கும் மனிதர்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய நாளும்கூட.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


