திருச்செந்தூரின் கடலோரத்தில்... - திருச்சீரலைவாய் தல புராணம் முதல் கந்த சஷ்டி விரதம் வரை !

திருச்செந்தூர்... உலகெங்கும் வாழும் முருகபக்தர்களின் மனம் கவர்ந்த தலம். வாழ்வில் ஒருமுறையேனும் அந்த அழகனை திருச்செந்தூர் வந்து தரிசித்துவிடமாட்டோமா என்று ஏங்கும் நெஞ்சங்கள் கோடானகோடி. அதுவும் கந்த சஷ்டி என்றால் சொல்லவே வேண்டாம். ஒருமுறை சூரசம்ஹாரத்தைத் திருச்செந்தூரில் தரிசனம் செய்தவர்களுக்கு ஒவ்வொரு சூரசம்ஹார நாளிலும் திருச்செந்தூரின் நினைவுகள் அலைமோதியபடியே இருக்கும்.

ஒருபுறம் கடலில் அலைகள் ஆவலுடன் கரைக்கு வந்துவந்து கந்தக் கடவுள் வந்துவிட்டாரா என்று பார்த்துக்கொண்டே இருக்கும். மறுபுறம் அதற்குப் போட்டியாக மக்கள் கூட்டம் அலையலையாகத் திரண்டு காத்திருக்கும். எல்லோர் பார்வையும் வேல் முன் நடக்க பின்னால் வரப்போகும் அந்த வேலவனை நோக்கியேயிருக்கும். பாற்கடலைக் கடைந்தபோது முதலில் நஞ்சு வந்ததாம். அதைப்போல் பக்தி என்னும் கடலைக் கடைந்தபடி பக்தர்கள் காத்திருக்க சூரனே முதலில் வருகிறான். ஒருவகையில் அது மகிழ்ச்சிதான். காரணம் அதர்மம் தோன்றி ஆட்டம்போட்டால் பின்னாலேயே அந்த ஆண் மகனும் வருவான். நம்பிக்கை பிறக்கிறது அலைகளுக்கும் மனிதத் தலைகளுக்கும்.

வாரியார் சுவாமிகள்

ஆண் மகனா... யார் அது என்று கேட்கிறீர்களா... இதற்கு விளக்கத்தை வாரியார் சுவாமிகள் சொல்லக் கேட்க வேண்டும்.

இந்த உலகில் நாம் அனைவருமே பெண் பிள்ளைகள். அதாவது பெண்ணின் வயிற்றில் பிறந்தவர்கள். ஆனால் ஒருவர் மட்டுமே ஆண்பிள்ளை. அதுதான் முருகன். அவரே ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து அவதரித்தவர். எனவே அவர் ஒருவரே ஆண்பிள்ளை என்பார் வாரியார் சுவாமிகள்.

வேட்டு சத்தம் கேட்கிறது. ஆம், கந்தன் களம் இறங்கிவிட்டான். கந்தமாதன பர்வம் என்னும் மலையில் இருந்து மணல் வெளிக்குள் தன் திருவடி பதிய வருகிறான். அவனுக்கு முன்பாக வேல் படை வருகிறது. இரண்டும் ஒன்றுதான். அவனே வேல்... வேலே அவன். வேல் முருகப்பெருமானின் ஞானத்தின் வடிவம். அந்த ஞானம் தான் தற்போது சம்ஹாரம் செய்யப்போகிறது என்பதை அறிந்தே அனைவரும் காத்திருக்கிறார்கள் சூரனைத் தவிர.

ஆம்... ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் வடிவம் அல்லவா அவன். அவனைப் பொருத்தவரை தன்னோடு போர் புரிய வருவது ஒரு குழந்தை. சிறுவன். சிவனிடமே வரம் பெற்ற தன்னை அவன் சிறுவன் என்ன செய்ய முடியும் என்கிற தலைகணம்.

தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ என்றானே பாரதி... அதுவல்லவோ ஞானத்தின் உச்சம். கலியுகத்தில் அவன் அடைந்த ஞானத்தைக்கூட 27 சதுர்யுகங்கள் வாழ்ந்த சூரபத்மன் உணரவில்லையே... பெரும் தீ அல்லவா ஈசன்... பிரம்மனும் விஷ்ணுவும் அடிமுடி காண முடியாதபடி அக்னித் தூணாக எழுந்து நின்றவர் அல்லவா ஈசன்... அவரே அல்லவா ஆறுமுகனாகவும் வந்து உதித்தார். இதை அறியமுடியுமா அகந்தையில் ஆட்டம்போடும் மாயையின் மைந்தனால்... யுத்தம் செய்ய வந்து நின்றான். இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். சூரனுக்கு சகல வரங்களையும் தந்தவர் அந்த ஈசன். வருபவன் சிறுவனாக இருக்கலாம். ஆனால் ஈசனின் மகனல்லவா... தனக்கு அருள் தந்த ஈசனின் மைந்தன் என்று வரவேற்று அடிபணிந்திருக்கலாம். நன்றி மறந்தான். போர்புரிய வந்து நின்றான். நன்றி மறந்தால் என்ன நடக்கும் என்பதை உலகுக்கு உணர்த்தவே சேனை கொண்டுவந்தான் அந்த சேவல்கொடியோன்.

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்

முதலில் மாயாமலத்தின் அடையாளமான தாரகன் வந்து நிற்கிறான். உலக மாயைகளின் ஒட்டுமொத்த வடிவம் அவன். மாயைதான் நம்மை இந்த உலகத்தின் இன்பங்களில் சிக்கித் தவிக்க வைக்கிறது. பாசத்தில் பதற வைக்கிறது. ஆசையில் அலற வைக்கிறது. மாயை ஒரு திரை. அதில் மனத்தின் விருப்பங்கள் எல்லாம் ஒரு திரைப்படம் போல் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதையே உண்மை என்று எண்ணி நம்பி் நாம் மயங்கிக் கிடக்கிறோம். ஆனால் அவை நிழல். மனத்தின் நிழல். முருகப்பெருமானின் வேலே அந்த மாயைத் திரையைக் கிழிக்கும் வல்லமை கொண்டது.

அதன்படியே தாரகனை வேல் இருகூறாக்கிப் போட்டது. அசுரன் தன் பலத்தில் இல்லை... படையில் ஒன்றை இழந்தான். அடுத்து சிங்கமுகன் பிடறி சிலிர்க்க வருகிறான். அவன் கன்ம மலத்தின் வடிவம். மனம், மொழி, மெய்களின் விளைவுகளே கன்மம். எத்தனையோ தீமைகளை மனம் அசைபோடுகிறது. சில நேரங்களில அது வார்த்தைகளாய் வெளிப்படுகிறது. தன்னையும் அறியாமல் சிலவேளையில் உடலால் அதை அடைகிறது. ஒரு தீமை இந்தப் படிநிலையில் எங்கு தோன்றினாலும் அதற்கு உண்டாகும் பாவம் ஒன்றுதான்.

என்ன மனத்தால் நினைத்தாலும் மொழியால் வெளிபபடுத்தினாலும் உடலால் நிகழ்த்தினாலும் அதே பாவம்தானா... ஆம் என்கின்றன ஞானநூல்கள். அப்படிப் பிறவிதோறும் உண்டாகும் கன்மமலத்தை அழிக்காமல் நாம் அந்தப் பரமபொருளை தரிசிக்க முடியாது.

மாயையாகிய தாரகன் அழிந்தான். அடுத்து கன்ம மலமாகிய சிங்கமுகன் வந்து நிற்கிறான். வேலினை எதிர்த்து யாரால் வெல்ல முடியும்? சிங்கமுகனும் வீழ்ந்தான். அடுத்து சூரபத்மனே களத்துக்கு வருகிறான். ஏற்கெனவே சொன்னதுபோல் அவனுடன் இருந்த மாயையும் கன்மமும் அழிந்ததால் அவனுக்குப் பரம்பொருளின் காட்சி கிடைத்தது. ஆனாலும் அவனால் சரண்புக மனம் இடம் தரவில்லை. காரணம் ஆணவம். ஆணவத்தில் எதிர்த்து நின்றான்.

இப்போது சூரனை சம்ஹாரம் செய்ய வேண்டும். ஆனால் மாயையும் கன்மமும் அழிந்துவிட்ட நிலையில் ஆணவத்தை அடக்கி ஆட்கொண்டாலேபோதுமே. மரமாகி நின்றவனை இரு கூறாக்கித் தன்னோடு சேர்த்துக்கொண்டார் முருகப்பெருமான். ஆணவம் அழிந்தது. இதுதான் சூரசம்ஹாரம் என்னும் அசுரன் அழிந்த கதை. இல்லை இல்லை அவனையும் கந்தனின் கருணை ஆட்கொண்ட கதை.

திருச்செந்தூர் முருகன்

அதை நேரில் ஒருமுறை கண்டால் போதும். நம் மனக்கண்ணில் இருந்து அது விலகவே விலகாது. ஒவ்வொரு கந்த சஷ்டியின் போதும் திருச்செந்தூரில் இருந்து உடலால் எத்தனை தூரத்தில் இருந்தாலும் மனம் மட்டும் ஜயந்திபுரக்கு விரைந்துவந்துவிடும். அந்த அளவுக்கு நம்மை ஆட்கொள்ளும் காட்சி அது.

வாருங்கள்... நாளை கந்த சஷ்டி தொடங்குகிறது. அடுத்த ஆறுநாள்களும் திருச்சீரலைவாய் என்று போற்றப்படும் திருச்செந்தூரின் சிறப்புகளையும் கந்த சஷ்டியின் மகிமைகளையும் ஒவ்வொன்றாகத் தெரிந்துகொள்வோம். அந்தக் கந்தனின் புகழை தியானிப்போம். கந்தன் நமக்குக் கருணையுடன் அருள்வான்.

திருச்செந்தூர் கடல் ஓரத்தில் கொஞ்சம் பக்தியுடன் நடைபோடுவோம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.