தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை தீவிரம்: சரத் பவாருடன் அஜித் பவார் மகன் ஆலோசனை!

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரால் தொடங்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கடந்த 2023ம் ஆண்டு அஜித் பவார் மூலம் பிளவு ஏற்பட்டது. அதன் பிறகு இரு அணிகளும் தனித்தனியாக செயல்பட ஆரம்பித்தன. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அஜித் பவார் தலைமையிலான அணிக்கு சென்றது. தற்போது அஜித் பவார் தலைமையிலான அணி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறது. அஜித் பவார் இந்த ஆண்டு தொடக்கத்தில் விமான விபத்தில் இறப்பதற்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளையும் ஒன்றாக சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

ஆனால் திடீரென அவர் இறந்து போனதால் அப்பேச்சுவார்த்தை அப்பயே நின்றது. அஜித் பவார் மனைவியை பொம்மை போன்று வைத்துக்கொண்டு கட்சியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் நினைத்தனர். எனவே அவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பார்த் பவார்

இப்போது அஜித் பவார் மகன் பார்த் பவார் கட்சியை தனது இஷ்டப்பட நடத்த ஆரம்பித்து இருக்கிறார். மூத்த தலைவர்களிடம் கேட்காமல் கட்சிக்கு நிர்வாகிகளை நியமிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இது கட்சியின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல் உட்பட சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே அஜித் பவாரின் மனைவியும் துணை முதல்வருமான சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகன் பார்த் பவார் இல்லாமல் கட்சி தலைவர்கள் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்துள்ளனர். அமித் ஷா இரு அணிகளும் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மூத்த தலைவர்களின் இந்த திடீர் முடிவால் அஜித் பவார் குடும்பத்தினர் தங்களது கட்சியை சரத் பவார் கட்சியோடு இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் பிரபுல் பட்டேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத் பவாரை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு கட்சியின் இரு அணிகளையும் ஒன்றாக இணைப்பது குறித்து பேசினார். அதற்கு 10ம் தேதிக்கு பிறகு இது குறித்து பேசலாம் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். பிரபுல் பட்டேலும் 10ம் தேதிக்கு பிறகு சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுவேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து அஜித் பவார் மகன் பார்த் பவார் கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக சரத் பவாரை சந்தித்து கட்சிகள் இணைப்பு குறித்து பேசியுள்ளார். இரண்டு நாட்களும் தலா இரண்டு மணி நேரம் இருவரும் பேசியுள்ளனர். இந்த சந்திப்பை தொடர்ந்து சரத் பவார் தனது கட்சியின் மூத்த தலைவர்களான ஜெயந்த் பாட்டீல், சசிகாந்த் ஷிண்டே, அமோல் கோல்ஹே, அனில் தேஷ்முக் மற்றும் ஜிதேந்திர அவாத் ஆகியோரை அழைத்து சுமார் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இவர்களில் பெரும்பாலானோர், மறைந்த அஜித் பவாருடன் நடைபெற்ற கட்சிகளின் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு ஜெயந்த் பாட்டீல் தலைமை தாங்கினார். அஜித் பவார் இறந்தபோது ஆரம்பத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைப்பு தொடர்பாக அஜித் பவார் உயிரோடு இருந்தபோது எந்த வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை கூறி வந்தனர்.

ஆனால் இப்போது அவர்கள் இரு அணிகளும் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேசமயம் இரு அணிகளும் இணைந்த பிறகு கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பது குறித்தும், மத்தியில் எந்த அணியோடு கூட்டணியில் இருக்கவேண்டும் என்பது குறித்தும் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இருக்கிறது. இது குறித்து இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.