உங்கள் மகள் சுப்ரியாவும் நாங்களும் நாட்டைப் பார்த்துக்கொள்கிறோம் - சரத்பவாரிடம் ஆறுதல் சொன்ன மோடி
முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் இரண்டு நாள்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு புனே ரூபி ஹில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சரத்பவாரிடம் பிரதமர் நரேந்திர மோடி போன் மூலம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.
இது குறித்து சரத்பவாருக்கு மிகவும் நெருக்கமான குடும்ப நண்பர் வித்தல் மணியார் அளித்த பேட்டியில், "பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து, சரத்பவாரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். அவர் சாஹேபிடம் மிகுந்த அன்போடும் மரியாதையோடும், சாஹேப்(பவார்), தயவுசெய்து முழுமையாக ஓய்வெடுங்கள். சுப்ரியா இப்போது தயாராக இருக்கிறார். சுப்ரியாவும் நாங்களும் நாட்டைப் பார்த்துக்கொள்கிறோம்.
நீங்கள் ஓய்வெடுங்கள். இது எனது வேண்டுகோள் என்று கூறினார். அதற்கு, நான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அனைவரும் இருக்கும்போது, நாட்டைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை.
நீங்கள் தொடர்ந்து பணியாற்றுங்கள் என்று சாஹேப் அவரிடம் கூறினார். தனது உடல்நலம் குறித்து விசாரித்ததற்கு சாஹேப் அவருக்கு நன்றி தெரிவித்தார்" என்று மணியார் கூறினார்.
மகாராஷ்டிராவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரத்பவார் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு இருமல் மற்றும் நெஞ்சு வலி போன்ற காரணங்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாராமதி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சுலே, தனது தந்தைக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
நரேந்திர மோடி சரத்பவாரிடம் பேசி இருப்பது மரியாதை நிமித்தமான உரையாடல் என்ற போதிலும், இந்த உரையாடல் மகாராஷ்டிராவின் அரசியல் சூழல் குறித்த பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளின் இணைப்பு மற்றும் சரத் பவாரின் தரப்பு பாஜகவுடன் இணையும் சாத்தியக்கூறுகளும் அடங்கும். மேலும், சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, மோடியின் அமைச்சரவையில் இடம்பெறக்கூடும் என்ற பேச்சும் பல மாதங்களாகவே அடிபட்டு வருகிறது.
இதற்கிடையில், மறைந்த அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினர். அப்போது, சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகனும் மாநிலங்களவை உறுப்பினருமான பார்த் பவார் ஆகியோர் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது குறித்து அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகன்களான பார்த்த், ஜே ஆகியோர் கலந்துகொள்ளாதது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சரத்பவார், புனே மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மும்பை பிரீச் கேண்டி மருத்துமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை சுப்ரியா சுலே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


