Doctor Vikatan: கிட்னி ஸ்டோன் பிரச்னையா... இந்த உணவுகளை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க!

Doctor Vikatan: என் வயது 42. எனக்கு கடந்த ஒரு வருடமாக கிட்னி ஸ்டோன் பிரச்னை இருக்கிறது. அவ்வப்போது வலி அதிகரித்தால் மருத்துவரைப் பார்த்து மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறேன். மாத்திரைகள் தவிர்த்து, இந்தப் பிரச்னைக்கு  உணவுகளின் மூலம் தீர்வுகள் இருந்தால் சொல்லவும்.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி.

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றவும், சிறுநீரகத்தைப் பாதுகாக்கவும் சில உணவுகள் நிச்சயம் உதவும். ஆனால், இயற்கை உணவுகளைப் பற்றிப் பேசும்போது சில விஷயங்களில் விழிப்புணர்வு அவசியம்.

ஏற்கெனவே சிறுநீரக நோய் இருப்பவர்கள், டயாலிசிஸ் (Dialysis) செய்து கொண்டிருப்பவர்கள், தொடர் தொற்று காரணமாக சிறுநீரகத்தில் லேசான வீக்கம் அல்லது பைலோநெஃப்ரைடிஸ் (Pyelonephritis) எனப்படும் அலர்ஜி அல்லது வீக்கம் இருப்பவர்கள், கடுமையான காய்ச்சல் மற்றும் இடுப்பு வலி, வயிற்று வலி உள்ளவர்கள், இது வெறும் சிறுநீரகக் கல்தான், உணவுப் பழக்கத்திலேயே சரியாகிவிடும் என்று நினைத்து அலட்சியப்படுத்தக்கூடாது.

அவர்கள் முதலில் மருத்துவரை அணுகி, கற்கள் எந்த இடத்தில் உள்ளன, அவற்றின் அளவு என்ன என்பதைக் கண்டறிந்த பிறகே அடுத்தகட்ட முடிவை எடுக்க வேண்டும். கற்களின் அளவு பெரியதாக இருந்தால், உணவின் மூலம் மட்டுமே சரி செய்ய முடியாது. எளிதாக வெளியேறக்கூடிய சிறிய அளவிலான கற்களுக்கு இயற்கை உணவு முறைகள் நல்ல பலன் தரும்.

இப்போதைய காலகட்டத்தில் தண்ணீரில் உள்ள உப்புச் சத்துகளாலும் கற்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே, சித்த மருத்துவம் கூறுவது போல், எப்போதும் தண்ணீரை நன்கு காய்ச்சிப் பருகுவது சிறந்தது. வாழைத்தண்டை அடிக்கடி பொரியல் அல்லது கூட்டாகச் செய்து சாப்பிடலாம். கற்கள் இருப்பவர்கள் வாரத்தில் 2 அல்லது 3 நாள்களுக்கு ஒருமுறை இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
முருங்கை ஈர்க்கு மற்றும் கறிவேப்பிலை ஈர்க்கு ஆகியவற்றைத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்துப் பருகலாம். எலுமிச்சை பழச்சாற்றை தண்ணீரில் கலந்து பருகலாம். ஆப்பிள் சாப்பிடலாம் அல்லது ஆப்பிள் சிடர் வினிகரைத் தண்ணீரில் கலந்து அருந்தலாம்.

பூசணிக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய் போன்ற நாட்டுக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பூசணிக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய் போன்ற நாட்டுக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பூசணிக்காய் ஜூஸ், காய்கறிக் கூட்டு, அவியல் அல்லது சாலட்  போன்றவற்றைச் சாப்பிடலாம். உடல்சூடு தான் கற்கள் உருவாக முக்கியக் காரணம். எனவே, நிறைய தண்ணீர் குடிப்பது. நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது மற்றும் இரவில் சரியான நேரத்திற்குத் தூங்குவது (இரவு 10 மணிக்குத் தூங்கி காலை சீக்கிரம் எழுவது) மிகவும் அவசியம்.

கீரை சமைக்கும்போது தக்காளியைச் சேர்த்து சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். கிருமித் தொற்றைத் தடுக்க உணவில் பூண்டு மற்றும் மஞ்சளை அதிகம் சேர்க்கலாம். சீரகத் தண்ணீர் மற்றும் பனங்கற்கண்டு சேர்ந்த அரிசி உலை நீர் குடிப்பதும் கல் உருவாவதைத் தடுக்கும்.

சித்த மருத்துவர் வரலட்சுமி:

சென்னை, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் பணிபுரிகிறார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.