Jafar Panahi: பிரபல இயக்குநர் ஜாஃபர் பனாகிக்கு 5 ஆண்டுகள் சிறை; பின்னணியும் தொடரும் ஒடுக்குமுறைகளும்

ஈரானிய சினிமாவின் முக்கியமான இயக்குநர் ஜாஃபர் பனாகிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஈரானில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை, அவர்கள் மீது சுமத்தப்படும் அரசியல் ரீதியான அழுத்தம், திரைப்படத் தணிக்கைகளில் கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையில் செய்யப்படும் அரசியல் ஆகியவற்றை விமர்சித்து தொடர்ந்து புரட்சிகரமான படைப்புகளைக் கொடுத்து வருகிறார் இயக்குநர் ஜாஃபர் பனாகி.

Jafar Panahi

நேற்றைய தினம் ஈரானின் புரட்சிகர நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் 1 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

ஆனால், இயக்குநர் ஜாஃபர் பனாகிக்குச் சிறை தண்டனையும், அவருக்கு ஈரான் அரசு பல்வேறு வழிகளில் ஏற்படுத்தும் தடைகளும் புதிதல்ல.

ஈரான் அரசின் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர் எடுத்த திரைப்படங்களும், அவர் பங்கேற்ற போராட்டங்களும் ஈரான் அரசுடன் மோதலை ஏற்படுத்தியிருக்கின்றன.

கடந்த 2010-ம் ஆண்டு ஈரானிய அரசுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும், தேசியப் பாதுகாப்புக்கு எதிரான செயல்கள் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு ஜாஃபர் பனாகி கைது செய்யப்பட்டார்.

அப்போது அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனையோடு 20 ஆண்டுகளுக்குத் திரைப்படம் இயக்கவும், திரைக்கதை எழுதவும், வெளிநாடுகளுக்குச் செல்லவும் அவருக்குத் தடை விதித்தது.

Jafar Panahi
Jafar Panahi

ஆனால், இப்படியான அரசியல் ஒடுக்குமுறைகள் ஜாஃபர் பனாகியின் குரலைத் தடுத்ததில்லை. திரைப்படம் இயக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டப் பிறகு, வீட்டிற்குள் இருந்தபடியே This Is Not a Film என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படி அவர் எடுத்த படங்களை வெவ்வேறு திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பி வைத்தார்.

2010-ல் விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத் தண்டனையை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையாக 2022 ஜூலை மாதத்தில் கைது செய்யப்பட்டார். அப்போதும் அரசின் செயல்களைக் கண்டித்தும், சிறையில் அனுபவித்த விஷயங்களுக்காகவும் சிறையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர் 2023 பிப்ரவரியில் விடுவிக்கப்பட்டார்.

மீண்டும் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து ஈரான் அரசை விமர்சித்துத் திரைப்படங்களை எடுத்து அதை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியதாலும், அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கும் இயக்கங்களுக்கு ஆதரவு அளித்ததாலும் இந்தச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில் நேற்று மீண்டும் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Jafar Panahi
Jafar Panahi

ஆனால், இம்முறை சிறைத் தண்டனைக்கான காரணத்தை நீதிமன்றம் தெளிவாகச் சொல்லவில்லை எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஜாஃபர் பனாகி, It Was Just An Accident என்றொரு படத்தை எடுத்திருந்தார்.

ஈரானில் இருக்கும் கட்டுப்பாடுகள், அவருடைய சிறை அனுபவம் உள்ளிட்ட விஷயங்களை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தார்.

அப்படத்தை கான் திரைப்பட விழாவுக்கு அனுப்பி விருதையும் வென்றிருந்தார். இதற்காகவும், தொடர்ந்து அரசை விமர்சிக்கும் இயக்கங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாலும் இந்த சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஈரான் அரசின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் திரைப்படங்களை எடுத்தவர், தனது படங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம் அதிகாரத்தையும் ஒடுக்குமுறையையும் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.