`நொய்யல் ஆற்று நுரைக்கு சோப்பு, ஷாம்பு கலப்பதும்கூட காரணம்! - சுற்றுச்சூழல் அமைச்சர் அடடே விளக்கம்
நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குடன் அதிகளவில் ரசாயன நுரை பொங்கி வழியும் பிரச்னைக்கு, பொதுமக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்பு கூட காரணம் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம் அளித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளநீரூடன் அளவுக்கு அதிகமாக நுரை பொங்கி காணப்படுகிறது. ஆலைகளின் ரசாயனக் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கப்படுவதால் ஏற்படும் மாசு காரணமாகவே நொய்யலில் நுரை பொங்கி எழுவதாக சூழலியல் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பூரில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ராஜீவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மழைக்காலங்களில் மட்டும் ஆற்றில் தண்ணீர் அதிகமாக போகும்போது அதிகளவில் நுரை பொங்குகிறது. மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு தண்ணீர் ஆற்றில் கலக்கும் போதும் நுரை ஏற்படுகிறது.
அதே வேளையில், மழையைப் பயன்படுத்திக் கொண்டு சாயப் பட்டறைகள் மற்றும் டெக்ஸ்டைல் ஆலைகளில் இருந்து ரசாயனக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் ஆற்றில் திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆட்சியில் இரவு பகல் பாராமல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் ஆலை மூடல் போன்ற நடவடிக்கைகள் பாயும்" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

