Doctor Vikatan: மார்பகங்களின் அடியில் அரிப்பு... அடிக்கடி வரும் பிரச்னைக்குத் தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 36. எனக்கு மார்பகங்களின் அடியில் அடிக்கடி அரிப்பு வருகிறது. அது சில நாள்கள் நீடிக்கிறது. சொரிந்து சொரிந்து அந்தப் பகுதியே புண்ணாகிறது. சிவந்து போகிறது. இது ஏதேனும் தொற்றுநோயின் அறிகுறியா... இதற்கு நிரந்தரத் தீர்வே கிடையாதா?


பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்

சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்

மார்பகத்திற்குக் கீழே அரிப்பு, சிவத்தல், அதிக வியர்வை, எரிச்சல் உணர்வு மற்றும் தடிப்புகள் (rash) ஏற்படுவது மிகவும் பொதுவான சருமப் பிரச்னைதான். குறிப்பாக, வெப்பமான மற்றும் ஈரப்பதம் மிகுந்த காலநிலைகளில் இது அதிகம் வருவதைப் பார்க்கலாம்.

மார்பகத்திற்குக் கீழே தங்கும் ஈரப்பதம், வெப்பம் மற்றும் உரசலே (friction) இந்த அழற்சிக்கு முதன்மை காரணம். மார்பகத்திற்குக் கீழே ஏற்படும் அனைத்து அரிப்புகளுமே பூஞ்சைத் தொற்று (Fungal infection) அல்ல. சரியான காரணத்தைக் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை அளிப்பதே நிரந்தரத் தீர்வைத் தரும்.


காரணங்களும் அறிகுறிகளும்:


வியர்வை, வெப்பம் மற்றும் உரசலினால் ஏற்படும் அழற்சி (Sweat, Heat & Friction):
அறிகுறிகள்: அரிப்பு, சருமம் சிவந்து போதல், எரிச்சல் உணர்வு மற்றும் லேசான வலி அல்லது புண் போன்ற உணர்வு இருக்கும்.

சருமம் சிவந்து, அரிப்புடன் கூடிய தடிப்புகள் காணப்படும்.

பூஞ்சைத் தொற்று (Fungal / Candida Yeast Infection):

பூஞ்சைத் தொற்றானது எப்போதும் இருண்ட, வெப்பமான மற்றும் ஈரப்பதம் நிறைந்த இடங்களில் எளிதில் வளரும்.
அறிகுறிகள்: சருமம் சிவந்து, அரிப்புடன் கூடிய தடிப்புகள் காணப்படும். தடிப்புகளின் விளிம்புகளில் தெளிவான பார்டருடன் (borders) கூடிய வட்ட வடிவத் திட்டுகளும் சிறிய புள்ளிகளும் காணப்படும்.

கான்டாக்ட் டெர்மடைடிஸ் (Contact Dermatitis):


அறிகுறிகள்: கம்பி, உலோக கொக்கிகள் உள்ள உள்ளாடைகள்,  ஷேப் வியர்ஸ் (shapewear) அணிவது, சோப்புகள், டிடர்ஜென்ட்டுகள் அல்லது வாசனைத் திரவியங்களை (perfumes) நேரடியாக சருமத்தில் பயன்படுத்துவதால் அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்படும்.

பாக்டீரியல் தொற்று (Bacterial Infection):

அறிகுறிகள்: வலி படிப்படியாக அதிகரிக்கும். துர்நாற்றம் வீசும். புண்ணிலிருந்து திரவம் கசிவதுடன்  சருமத்தின் மேல் பகுதி  (crusts) உரியத் தொடங்கும்.

இன்வெர்ஸ் சோரியாசிஸ் (Inverse Psoriasis):

அறிகுறிகள்: மென்மையான, தெளிவாக வரையறுக்கப்பட்ட சிவப்பு நிறத் திட்டுகள் காணப்படும். எந்த மருந்துகளைப் பூசினாலும் சிறிது காலத்திற்குப் பின் மீண்டும் மீண்டும் தோன்றும்.

ரிழிவு நோய் (Diabetes), அதிக வியர்வை, பெரிய அளவிலான மார்பகங்கள் மற்றும் சருமத்தின் தடிமனான மடிப்புகள் ஆகியவை இந்தத் தொற்று மீண்டும் மீண்டும் வர வழிவகுக்கும்.

சரும மடிப்புகளில் அதிக ஈரப்பதம் (Intertrigo / Excessive Moisture):

சரும மடிப்புகளில் அதிக ஈரப்பதம் தங்குவதால் சருமம் மிகவும் மென்மையாகி,  உரிந்து போதல், எரிச்சல் மற்றும் சிறிய வெடிப்புகள் (cracks) ஏற்படும்.

அபாயக் காரணிகள் (Risk Factors):


நீரிழிவு நோய் (Diabetes), அதிக வியர்வை, பெரிய அளவிலான மார்பகங்கள் மற்றும்  சருமத்தின் தடிமனான மடிப்புகள் ஆகியவை இந்தத் தொற்று மீண்டும் மீண்டும் வர வழிவகுக்கும்.

 தீர்வுகளும் தடுப்பு முறைகளும்

 மார்பகங்களைச் சுற்றியுள்ள பகுதியை மென்மையான துண்டால் மெதுவாக ஒற்றி, ஈரமோ, வியர்வையே இல்லாமல் வைத்திருக்க வேண்டும். ஹேர் டிரையரை Cool mode-ல் வைத்து ஈரப்பதத்தைப் போக்கலாம்.

வாசனை திரவியங்கள் கொண்ட சோப்புகள், பாடி வாஷ்கள் அல்லது பவுடர்களைத் தவிர்க்க வேண்டும்;  சருமத்தை அழுத்தித் தேய்க்கக் கூடாது.

உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து அதிக வியர்வை ஏற்பட்டால், உடனடியாக ஈரமான ஆடைகளை மாற்றி அப்பகுதியை உலர்வாக வைத்திருக்க வேண்டும்.

தடிமனான பிளாஸ்டிக்/ரப்பர் பட்டைகள் கொண்ட அழுத்தமான உள்ளாடைகளைத் தவிர்க்க வேண்டும்.

சரியான அளவில் பொருந்துகின்ற, காற்றோட்டமுள்ள (breathable) மற்றும் வியர்வையை உறிஞ்சக்கூடிய மென்மையான காட்டன் (cotton)  உள்ளாடைகளைப் பயன்படுத்த வேண்டும். தடிமனான பிளாஸ்டிக்/ரப்பர் பட்டைகள் கொண்ட அழுத்தமான உள்ளாடைகளைத் தவிர்க்க வேண்டும்.

அப்பகுதியைச் சுத்தமாகத் துடைத்தபின் லிக்விட் பாரஃபின் (liquid paraffin), துத்தநாக ஆக்ஸைடு (zinc oxide) அல்லது பெட்ரோலியம் ஜெல்லி (petroleum jelly)  போன்ற ஒன்றை மெல்லிய  லேயராகத் தடவலாம்.

தவிர்க்க வேண்டியவை: 

எலுமிச்சை சாறு (lemon juice), ஆன்டிசெப்டிக் திரவங்கள், எசென்ஷியல் ஆயில்கள் அல்லது  வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யக் கூடாது. அவை பிரச்னையை மேலும் தீவிரமாக்கும்.

மருத்துவ சிகிச்சையும் ஆலோசனையும்


பூஞ்சைத்தொற்று என சந்தேகப்பட்டால் மருத்துவர் ஆலோசனையுடன் Clotrimazole Cream  போன்றவற்றை தினமும் 2-3 முறை பயன்படுத்தலாம்.
மருத்துவரின் பரிந்துரை இன்றி வீரியமிக்க ஸ்டீராய்டு க்ரீம்களை (strong steroid creams) பயன்படுத்தக் கூடாது. அவை தற்காலிக நிவாரணம் தந்தாலும், பூஞ்சைத் தொற்றை மறைத்து, சருமத்தை மெலிதாக்கி (thinning of skin) நிலைமையை மோசமாக்கும்.
 தடிப்புகள் மீண்டும் மீண்டும் வந்தால், ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.

மார்பகத்தில் கட்டிகள்/வீக்கம் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

எப்போது மருத்துவரைச் சந்திக்க வேண்டும்?

7 நாள்கள் வரை மேற்குறிப்பிட்ட விஷயங்களைப் பின்பற்றியும் வலி அல்லது வெடிப்புகள் குறையாமல் இருந்தால்.

புண்ணில் இருந்து துர்நாற்றம், திரவக் கசிவு, கடுமையான வலி அல்லது காய்ச்சல் இருந்தால்.

ஒருபக்க மார்பகக் காம்பில் மட்டும் தொடர்ச்சியான தடிப்பு, காம்பிலிருந்து திரவக் கசிவு அல்லது மார்பகத்தில் கட்டிகள்/வீக்கம் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Takeaway message:
சருமத்தைச் சுத்தமாகவும், குளிர்ச்சியாகவும், உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும். சரியான அளவிலான காட்டன்  உள்ளாடை அணிய வேண்டும். பிரச்னையின் ஆரம்பகட்டத்திலேயே மருத்துவரிடம் சென்று சரியான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவதே விரைவான நிவாரணம் தரும்.


டாக்டர் தலத் சலீம்:

சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டனில் செஹட் த ஸ்கின் அண்ட் ஹேர் கிளினிக்கின் உரிமையாளர். 26 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர். லண்டனில் யுனானி மருத்துவம் பயின்றவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் செஹட் (Sehat) என்ற பெயரில் கிளினிக் ஒன்றை நிறுவி, கூந்தல் மற்றும் சரும பராமரிப்பு குறித்த சிகிச்சைகளை வழங்கி வருகிறார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.