வாணியம்பாடி: மதுபோதையில் தகராறு; தந்தையைக் கொன்ற மகன் கைது; என்ன நடந்தது?
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு கட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி. இவரது மகன் ராகுல் (வயது 26), தினமும் குடித்துவிட்டு போதையில் வந்து தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இரவும் மதுபோதையில் இருந்த ராகுல் தூங்கிக் கொண்டிருந்த தந்தை ரவியைத் தட்டியெழுப்பி தகராறு செய்திருக்கிறார். கோபமடைந்த ரவி மகனைக் கண்டிருத்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த ராகுல், தந்தை என்றும் பாராமல் ரவியைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.
கழுத்தையும் பிடித்து நெரித்ததில் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. அக்கம், பக்கத்தினர் ரவியை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அதற்குள்ளாக, ரவி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக, வாணியம்பாடி நகரப் போலீஸார் கொலை வழக்குப் பதிந்து ராகுலைக் கைது செய்திருக்கின்றனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


