அர்னாப் புயல் வருகிறது? `வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - மழை தீவிரமாகும் வாய்ப்பு! | Live

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், குமரிக்கடல் பகுதியிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதனிடையே, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு-மத்திய வங்கக்கடலில் நிலவிய வளிமண்டலச் சுழற்சியின் தாக்கத்தால், இன்று (அக்டோபர் 23) காலை 05:30 மணி அளவில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Rain Alert - மழை

இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதே பகுதியில் நீடித்து, அக்டோபர் 24-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதைத் தொடர்ந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25 அன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 26 காலை வாக்கில் மேற்கு-மத்திய வங்கக்கடலில் சூறாவளி புயலாகவும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

மேலும் வலுவடையும் இந்த புயல், அடுத்த இரு தினங்களில் வட ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் அக்டோபர் 26-ம் தேதி புயலாக மாறும் பட்சத்தில், அதற்கு அர்னாப் (ARNAB) எனப் பெயரிடப்பட உள்ளது. இந்தப் பெயரை வங்கதேசம் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை கொட்டித் தீர்த்து வரும் சூழலில், தற்போது உருவெடுத்துள்ள இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மழைப் பொழிவு மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.