மீனாட்சி மிஷன் மருத்துவமனை: 500 ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து வரலாற்றுச் சாதனை!
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC) மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (MSSH) ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகளைச் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. மிகத் துல்லியமான மருத்துவச் சேவைக்காக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இது ஒரு மாபெரும் முன்னேற்றமாகும். குடல் மற்றும் கல்லீரல், சிறுநீரகம், மகளிர் மருத்துவம், மார்பகம் மற்றும் தைராய்டு, குழந்தைகள் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவைசிகிச்சை மற்றும் இதயவியல் என பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் இந்த ரோபோட்டிக் சிகிச்சைகள் உள்ளடக்கியுள்ளன.
தென் தமிழகத்தில் ரோபோ உதவியுடன் செய்யப்படும் பல அறுவைசிகிச்சை முறைகளை முதன்முதலில் இம்மருத்துவமனைகள் அறிமுகப்படுத்தியுள்ளன. கணையம், உணவுக்குழாய், கல்லீரல், இரைப்பை மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் சிக்கலான பிரச்னைகளுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை இப்பகுதியில் முதல்முறையாகப் பயன்படுத்திய பெருமை இம்மருத்துவமனையையே சாரும். கடந்த பத்து வருடங்களாக, நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி, தங்களின் அறுவைசிகிச்சைத் திறனை இவர்கள் மேம்படுத்தி வருகின்றனர்.
2016-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள டா வின்சி ரோபோட்டிக் சிஸ்டம் மூலம் சுமார் 350 அறுவைசிகிச்சைகளும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன டூமாய் ரோபோட்டிக் சிஸ்டம் மூலம் 150-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நவீன கருவிகள், வழக்கமான மற்றும் லேப்ராஸ்கோப்பிக் தொழில்நுட்பங்களுக்கு பக்கபலமாக இருப்பதுடன், நோயாளிகளின் தனிப்பட்ட உடல்நிலைக்கேற்ப மிகச்சிறந்த சிகிச்சை முறையைத் தேர்வு செய்ய மருத்துவக் குழுவினருக்கு இவை பெரிதும் உதவுகின்றன.
இது குறித்து மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவருமான டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி பேசுகையில்: “ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் 500 என்ற மைல்கல்லை எட்டியிருப்பது, மருத்துவ நிபுணத்துவம், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஆகியவற்றில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இத்தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சைகளையும் எங்களால் மிகத்துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடிகிறது. இனிவரும் காலங்களில், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கும் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த உள்ளோம். தென் தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த மற்றும் நவீன மருத்துவச் சிகிச்சைகள் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்வதே எமது முக்கிய நோக்கமாகும்,” என்று தெரிவித்தார்.
குடல் மற்றும் இரையக குடலியல் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் மோகன் கூறுகையில்: “ரோபோட்டிக் அறுவைசிகிச்சையானது, அதிக துல்லியம், மேம்பட்ட கருவி கட்டுப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை வழங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. சிக்கலான அறுவைசிகிச்சைகளைக் கூட மருத்துவர்களால் எளிதாகச் செய்ய முடிகிறது. இத்தொழில்நுட்ப வளர்ச்சியானது எதிர்காலத்தில் டெலி-சர்ஜரி எனப்படும் தொலைதூர அறுவைசிகிச்சைகளுக்கும் வழிவகுக்கும். இதன்படி, மருத்துவர்கள் வேறு இடத்தில் இருந்தபடியே இணையத்தின் மூலம் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய முடியும்.

ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சையின் முக்கிய நன்மைகளில், அறுவை சிகிச்சையின் துல்லியம் அதிகரித்தல், இரத்த இழப்பு மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வலி குறைதல் மற்றும் மருத்துவமனையில் தங்கும் காலம் குறைதல் ஆகியவை அடங்கும். லேப்ராஸ்கோப்பி மூலம் செய்யப்படும் பல அறுவைசிகிச்சைகளை, ரோபோட்டிக் தொழில்நுட்பத்தின் மூலம் இன்னும் தெளிவாகவும், துல்லியமாகவும் செய்ய முடியும். தொழில்நுட்பம் மேலும் வளரும்போது, பெரிய தழும்புகளற்ற, சிறிய துளைகள் மூலம் பல சிக்கலான அறுவைசிகிச்சைகளை எளிதாகச் செய்ய முடியும்,” என்றார்.
இந்த மைல்கல்லைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறைகள் குறித்து தங்களது அனுபவங்களை முதுநிலை மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர். டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி மற்றும் டாக்டர் மோகன் ஆகியோருடன், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவர்கள், டாக்டர் பிரதீப் மற்றும் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ், சிறுநீரகவியல் துறையில் முதுநிலை நிபுணர் டாக்டர் பால் வின்சென்ட், புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவின் தலைவர் டாக்டர் விஜய பாஸ்கர், மகளிர் நோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் பத்மா ஆகியோரும் கலந்துகொண்டு செய்தியாளர்களுடன் உரையாடினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

