`விடுமுறை நாளிலும் அரசு விழாக்கள்- புலம்பும் புதுக்கோட்டை அரசு ஊழியர்கள்; அமைச்சர் பர்வேஸ் விளக்கம்
"பண்டிகை காலங்கள்ல தொடர்ந்து 3, 4 நாள் விடுமுறை கிடைச்சா, எங்க சொந்த ஊருக்குப் போய் பொண்டாட்டி, பிள்ளைகளோட நிம்மதியா இருக்கணும்னுதானே நினைப்போம்? ஆனா, அமைச்சரின் நிகழ்ச்சிகளால அந்த சந்தோஷமே காணாமல் போயிடுச்சு..!" இப்படி கவலையோடும் கொந்தளிப்போடும் புலம்புகிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட அரசு ஊழியர்கள்.
ஆயுத பூஜை விடுமுறை நாள்களில்கூட ஓய்வின்றி மாவட்ட அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கட்டாயப்படுத்தப்படுவதாக அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் தற்போது அனலைக் கிளப்பியுள்ளன.
குடும்பத்தினருடன் கழிக்க வேண்டிய விடுமுறை.. விழாக்களில் கழிந்த சோகம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவில் அரசுப் பணியில் உள்ளவர்களில் சுமார் 60 சதவிகிதம் பேர் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான். தீபாவளி, ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாள்களில் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும் போது, வெளியூர்களில் வேலை செய்யும் அரசு அலுவலர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சொந்த ஊர்களுக்குப் போய் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகளைச் சந்திக்கத் திட்டமிடுவது வழக்கம். பஸ் கிடைக்கவில்லை என்றாலும் நின்று கொண்டாவது ஊருக்குப் போய்விடலாம் என்று ஆவலோடு காத்திருப்பார்கள்.
ஆனால், இந்த ஆயுத பூஜை விடுமுறை நாள்களில் அந்த மகிழ்ச்சி முற்றிலுமாகப் பறிபோய்விட்டதாக அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒரே நாளில் 17 நிகழ்சிகள்:
சமீபத்திய நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர்கள், "கடந்த அக். 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் சமுதாய வளைகாப்பு, புதிய கட்டடங்கள் திறப்பு, பேருந்து சேவை தொடக்கம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு என ஒரே நாளில் மொத்தம் 17 அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்துகொண்டு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார்; அடுத்த நாள் அக்.19 ஆம் தேதி ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைக்குத் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்விலும் பங்கேற்றார். மாவட்ட, தாலுகா அளவில் உள்ள அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதால், விடுமுறை நாளிலும் கூட யாரும் ஊருக்குப் போக முடியாமல் அமைச்சரின் நிகழ்ச்சிகளில் நொந்துகொண்டே பங்கேற்றனர்.
மேலும் ஆலங்குடி பகுதியில் வளைகாப்பு நிகழ்ச்சி, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி விழா, ரேஷன் கடைகளில் அரிசி விநியோகம் என இந்த ஓட்டம் நின்றபாடில்லை" என்கிறார்கள் ஆதங்கத்துடன்.
மேலும் நம்மிடம் தொடர்ந்து பேசியவர்கள்,
" எல்லா அரசு ஊழியர்களுக்கும் அரசு வாகன வசதி கிடையாது. விழா நடக்கும் இடத்திற்கு நேரத்திற்குப் பேருந்து வசதியும் இருக்காது. இதனால் சொந்தச் செலவிலேயே வாகனங்களை ஏற்பாடு செய்து கொண்டு அரசு ஊழியர்கள் அலைய வேண்டியுள்ளது. கடந்த ஆட்சியிலும் இதே நிலைதான் இருந்தது; ஆனால் மாற்றம் கொண்டுவருவதாகப் பொறுப்பேற்ற இந்த ஆட்சியிலும் அதே அவல நிலை தொடர்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என வேதனைப்படுகிறார்கள், வெளிமாவட்டங்களிருந்து இங்கு பணிபுரியும் அரசு அலுவலர்கள்.
மருத்துவமனைக்குச் செல்வது மற்றும் சொந்த வேலைகளைப் பார்ப்பது போன்ற எதையும் செய்ய முடியாமல் தங்கள் பண்டிகை கால விடுமுறையையும் மகிழ்ச்சியையும் அமைச்சர் வீணாக்கிவிட்டதாகவும் அவர்கள் குமுறுகின்றனர்.
அமைச்சரின் விளக்கம்
அரசு ஊழியர்களின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரும் புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான முகமது பர்வேஸைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்.
"மக்களுக்கு நல்ல திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அமைச்சர்களாகிய நாங்கள் மக்களின் நலன் கருதி நேரம் காலம் கருதாமல் உழைத்து வருகிறோம். இதில் எதுவும் எங்களுடைய சுயநலத்திற்காக கிடையாது. மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காகவும் நலனுக்காவும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறேன்.
குறிப்பாக, மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றி மக்களைச் சென்றடைய வேண்டியது காலத்தின் கட்டாயம். சில நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பு சார்ந்த நிகழ்வுகளை உரிய காலத்தில் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தால்தான் அதன் பயன் உடனுக்குடன் மக்களை சென்றடையும். அரசாங்கத்தின் திட்டங்கள் தேக்கமடையாமல் இருப்பதற்கே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
மாவட்ட நிர்வாகம், மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள்தான் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து என்னை அழைக்கிறார்கள். மக்களின் அவசரத் தேவைகளையும் நலனையும் கருத்தில்கொண்டே அந்தந்தத் துறைத் தலைவர்களும் அதிகாரிகளும் இந்தத் தேதிகளைத் தீர்மானிக்கிறார்களே தவிர, இதில் எந்தவொரு தனிப்பட்ட நபரின் வற்புறுத்தலும் கிடையாது. அவர்களின் அழைப்பின் பேரில்தான் மக்களின் நலன் கருதி நானும் பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையில் கலந்து கொள்கிறேனே தவிர, இது நான் ஏற்பாடு செய்த விழாபோலவும், நான் கட்டாயப்படுத்தி அரசு ஊழியர்களை வரவழைத்ததுபோலவும் சிலர் பேசுவது ஏற்புடையதல்ல.

மக்களுக்குச் சேவை செய்வதில் அரசு இயந்திரமும், அமைச்சர்களும், அரசு ஊழியர்களும் ஒருவருக்கொருவர் இணைந்தே பயணிக்கிறோம். இது எப்போதோ சில வேளைகளில் தவிர்க்க முடியாமல் நடக்கும்போது மக்கள் நலனுக்காக அரசு ஊழியர்கள் அதைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதனை ஊதிப்பெரிதாக்குகின்றனர். மக்கள் நலனைப் போல அரசு ஊழியர்களின் நலனிலும் நமது தவெக அரசு எப்போதும் அக்கறை கொண்டது. அனைவரின் நலனுக்கும் உழைப்பதே அரசின் நோக்கம் என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.எதிர்காலத்தில் இனிமேல் இது அவசியம் கவனத்தில் கொள்ளப்படும்.." என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


