Chennai : எச்சரித்த முதல்வர் தரப்பு; மழையில் இறங்கிய தவெக அமைச்சர்கள்! - பின்னணி என்ன?
அக்டோபர் 17 ஆம் தேதி இரவு சென்னையில் குறுகிய நேரத்தில் மிகக் கனமழை கொட்டித் தீர்த்திருந்தது. பல பகுதிகளிலும் மழை வெள்ளம் தேங்கியிருந்தது. அந்த சமயத்தில் மழைக்காக சென்னைக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்த மாண்புமிகுக்கள் பலரும் களத்துக்கே வரவில்லை. ஆனால், நேற்றிரவு பெய்த மழைக்கு உடனடியாக வேட்டியை மடித்துக் கொண்டு களமிறங்கியிருக்கின்றனர். மாண்புமிகுக்கள் களத்துக்கு வந்ததற்கு முதல்வரின் கோபமும் ஒரு காரணம் என்கின்றனர். என்னவென இறங்கி விசாரித்தோம்.
நம்மிடம் பேசிய தவெகவின் சீனியர் நிர்வாகிகள் சிலர், கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி மாலை தொடங்கி நள்ளிரவு வரை மழை வெளுத்தெடுத்தது. பாரிஸில் மட்டும் 36 செ.மீ மழை பொழிந்திருந்தது.
வடகிழக்குப் பருவமழையில் அரசுக்கு கெட்டப் பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முதல்வர் விஜய் 2 மாதங்களுக்கு முன்பாக 7 அமைச்சர்களை சென்னைக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமித்தார். மழை நீர்வடிகால் பணிகளை மேற்பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மழையின் போது களத்தில் நிற்க வேண்டியதுதான் இந்த 7 அமைச்சர்களின் வேலை.

அருண்ராஜ், பார்த்திபன், ரமேஷ், பிரபு, விக்னேஷ் என முதல்வர் தனக்கு நெருக்கமான நம்பகமான மாண்புமிகுக்களைத்தான் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்தார். ஆனால், இவர்கள் மழைக்கு முன்பான மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்பார்வையிடவில்லை. சென்னையில் தெற்கும் தெரியாத வடக்கும் தெரியாத அமைச்சர்களுக்கு பொறுப்பு கொடுத்தால் இதுதான் நிலைமை என திமுக கவுன்சிலர்களே தவெக அமைச்சர்களை வாரினர். முதல்வர் அப்போதுமே பொறுமைதான் காத்தார். ஆனால், அக்டோபர் 17 ஆம் தேதி இரவு மழை கொட்டித் தீர்த்த போது பொறுப்பு அமைச்சர்கள் யாருமே களத்தில் இல்லை.
எல்லாரும் அவரவர் தொகுதியிலும் அரசு நிகழ்வுகளிலும் பிஸியாகியிருந்தனர். அக்டோபர் 17-21 மழை அதிகமாக இருக்குமென வானிலை மையம் எச்சரித்தும் அதை கண்டுகொள்ளாமல் அமைச்சர்கள் சென்னையிலிருந்து வெளியேறி விட்டனர்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மட்டுமே களத்தில் நின்றார். முதல்வரும் ஆதவ்வுக்கும் மாநகராட்சி ஆணையருக்கும் தொடர்புகொண்டு மழை அப்டேட்களை கேட்டுக் கொண்டே இருந்தார். அப்போதே பொறுப்பு அமைச்சர்கள் யாரும் களத்தில் இல்லாததை அறிந்து அப்செட் ஆகியிருக்கிறார். விடிந்தவுடனேயே எல்லா அமைச்சர்களும் மாலைக்குள் சென்னை திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார். முதல்வர் தரப்பு உஷ்ணப்பட்டதை அறிந்தவுடன்தான் அமைச்சர்கள் உஷாராகி சென்னைக்கு வண்டி பிடித்தனர். ரிப்பன் பில்டிங்கில் முதல்வர் ஆய்வு செய்ய வருவதற்குள் அருண்ராஜூம் செங்கோட்டையனும் அடித்து பிடித்து ஓடிவந்துவிட்டார்கள். மற்ற அமைச்சர்களும் இரவுக்குள் சென்னை ரீச் ஆகிவிட்டனர். முதல்வர் ரிப்பன் பில்டிங்கில் இருந்து கிளம்பும்போதே அமைச்சர்களை வானிலை மையத்தோடு தொடர்பில் இருக்க சொல்லுங்கள். மழை நிலவரத்தை பொறுத்து அவரவர் மண்டலங்களில் நடக்கும் பணிகளை முடுக்கிவிட சொல்லுங்கள் என கொஞ்சம் கண்டிப்பாகவே கூறி சென்றிருக்கிறார். முதல்வர் அதிருப்தியடைந்ததை உணர்ந்ததால்தான் நேற்றிரவு சென்னை மழையில் பெரும்பாலான அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் களத்தில் பம்பரமாக சுழன்றிருக்கின்றனர் என்கின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


