Doctor Vikatan: தைராய்டு, கொலஸ்ட்ரால், சுகர்... அதிகமானால் இதெல்லாம் நடக்கும்... அலெர்ட்!
Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக தைராய்டு, கொலஸ்ட்ரால், சர்க்கரைநோய் என எல்லாப் பிரச்னைகளும் இருக்கின்றன. இவை அதிகமானால் ஒருவருக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்... அதற்கான தீர்வுகள் என்ன?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நாளமில்லா சுரப்பியல் சிகிச்சை மருத்துவர் ரமீஸ் ராஜா
தைராய்டு பாதிப்பு, அதிக கொலஸ்ட்ரால், ரத்தத்தில் அதிக சர்க்கரை ஆகியவை இன்று பலரிடம் காணப்படும் உடல்நலப் பிரச்னைகள். இவை ஆரம்பத்தில் வெளிப்படையான அறிகுறிகளை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் நீண்டகால உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
தைராய்டு ஹார்மோன்கள் ஏன் முக்கியம்?
கழுத்தின் முன்பகுதியில் பட்டாம்பூச்சி வடிவில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி, உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) கட்டுப்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் குறைந்தால் உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, மலச்சிக்கல், குளிரைத் தாங்க முடியாமை, சரும வறட்சி, தலைமுடி உதிர்தல், ஒழுங்கற்ற மாதவிடாய் (Irregular Periods), மலட்டுத்தன்மை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மேலும், கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கலாம்.
தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகச் சுரந்தால் உடல் எடை குறைதல், இதயத் துடிப்பு அதிகரித்தல், கை நடுக்கம், அதிக வியர்வை, பதற்றம், தூக்கமின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு இதயத்துடிப்பு சீரற்றுப் போகும் அபாயமும் உண்டு.
தைராய்டு பாதிப்பைக் கண்டறிய மருத்துவரின் ஆலோசனையின்படி TSH மற்றும் தேவையான பிற தைராய்டு ஹார்மோன்கள் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். மருந்துகளைத் தானாகத் தொடங்கவோ நிறுத்தவோ கூடாது.

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் என்ன பாதிப்பு?
கொலஸ்ட்ரால் என்பது உடலுக்குத் தேவையான கொழுப்புப் பொருள். ஆனால், ரத்தத்தில் LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது, ரத்தக் குழாய்களின் சுவர்களில் கொழுப்புப் படிவங்கள் உருவாகலாம். இதனால் ரத்தக் குழாய்கள் சுருங்கி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறியும் இருக்காது. எனவே, தேவைக்கேற்ப ரத்தத்தில் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்வது அவசியம். ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, புகைப்பழக்கத்தைத் தவிர்த்தல் ஆகியவை முக்கியம். கொலஸ்ட்ரால் அளவு மற்றும் இதயநோய் அபாயத்தைப் பொறுத்து ஸ்டேட்டின் போன்ற மருந்துகளும் தேவைப்படலாம்.
ரத்தச் சர்க்கரை அதிகரித்தால் என்ன நடக்கும்?
ரத்தத்தில் சர்க்கரை தொடர்ந்து அதிகமாக இருப்பது நீரிழிவு நோயைக் குறிக்கலாம். ஆரம்பத்தில் அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் சோர்வு, பார்வை மங்குதல், சிறுநீர்ப் பாதை தொற்று (Urinary Tract Infection) மற்றும் பிறப்புறுப்பு தொற்றுகள் (Genital infections) போன்ற அறிகுறிகள் இருக்கலாம். சிலருக்கு எந்த அறிகுறியும் இருக்காது.
நீண்டகாலமாக சர்க்கரை கட்டுப்பாடின்றி இருந்தால் கண்கள், சிறுநீரகங்கள், நரம்புகள், இதயம் மற்றும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படலாம். இதனால் பார்வைக் குறைபாடு, சிறுநீரகச் செயலிழப்பு, பாதங்களில் உணர்விழப்பு, பாதத்தில் ஆறாத புண்கள், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.
நீரிழிவு நோயைக் கண்டறிய ரத்தத்தில் வெறும் வயிற்று சர்க்கரை அளவு (fasting plasma glucose), 2 மணி நேர உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவு (2 hour post prandial plasma glucose) மற்றும் மூன்று மாத சராசரி சர்க்கரை அளவு (HbA1c) போன்ற பரிசோதனைகள் அவசியமாகின்றன. நீரிழிவு நோய் சிகிச்சை என்பது உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உடல் எடை மேலாண்மை மற்றும் தேவையான மருந்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்த மூன்று பிரச்னைகளையும் கட்டுப்படுத்துவது எப்படி?
சீரான உணவு, வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சி, போதுமான தூக்கம், ஆரோக்கியமான உடல் எடை, புகைப்பழக்கத்தைத் தவிர்த்தல் மற்றும் முறையான மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவை நீண்டகால ஆரோக்கியத்திற்கு உதவும். தைராய்டு குறைபாடு, நீரிழிவு நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சிகிச்சை கிடையாது. ஒவ்வொருவரின் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும்.
முக்கியமாக, அறிகுறிகள் தோன்றும்வரை காத்திருக்க வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையுடன் பரிசோதனை செய்து, நோய் இருந்தால் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற நீண்டகாலச் சிக்கல்களின் அபாயத்தைக் தடுக்க உதவும்.
டாக்டர் ரமீஸ் ராஜா:
சென்னை, ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நாளமில்லா சுரப்பியல் சிகிச்சை மருத்துவராக (Endocrinologist) பணிபுரிகிறார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

