காட்சிப்படுத்தப்பட்ட 60 பாரம்பர்ய ரக நெல் கதிர்கள்; ஆச்சர்யம் தரும் பெண் விவசாயியின் வீட்டுக் கொலு!

’நவராத்திரி’ என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தசரா திருவிழாவில் தினம் ஒரு அலங்காரத்தில் அம்பாள் அலங்கார வழிபாடும், வீடுகளில் வைக்கப்படும் கொலுவும்தான்.

இந்தக் கொலுவில் 9 படிகளில் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், அம்மன், பெருமாள், நராயணர், நாரதர் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் சிலைகள் இடம்பெறும்.

கொலுவில் பாரம்பர்ய நெற்கதிர்கள்

அத்துடன் சிவ குடும்பம், தசாவதார அம்சங்கள், முருகனின் அறுபடை வீடுகள், சிவ பெருமானின் பஞ்ச தலங்கள், கல்யாண ஊர்வலம், சரவணப்பொய்கை, சிவ கைலாயம், ராஜ தர்பார் உள்ளிட்ட பல்வேறு தத்ரூப செட் வகைகளும் இடம் பெறும்.

கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளுக்காக கிரிக்கெட் விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, வன உயிரினப் பூங்கா, படகு சவாரி, குளம், அருவி, நீருற்று போன்ற பொழுது போக்கு அம்சங்கள் செயற்கையாக அமைக்கப்பட்டும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும் வருகின்றன.

அதிலும் தற்போது மிக நவீனமாக கொலுவின் ஓர் அங்கமாக பெண் கல்வியின் அவசியம், உயர்கல்வியின் அவசியம், சமூக மற்றும் சமய ஒற்றுமை, போதை ஒழிப்பு போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆங்காங்கே தொங்க விட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரப்படுகிறது.  

இந்த நிலையில், நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஓய்வு பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு அதிகாரியும், முன்னோடி பெண் இயற்கை விவசாயியுமானவர் லெட்சுமி தேவி.

லெட்சுமி தேவி
லெட்சுமி தேவி

கடந்த 2020-2021-ம் ஆண்டிற்கான பாரம்பர்ய நெல் விளைச்சல் போட்டியில் கலந்து கொண்டு ஆத்தூர் கிச்சிலிச் சம்பா ரகம் சாகுபடி செய்து ஹெக்டேருக்கு 10,024.875 கிலோ மகசூல் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று ரூ.50,000 பரிசுத் தொகையுடன் அப்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் விருதும் பெற்றுள்ளார்.  

இவர், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகவே கொலு வைத்து நவராத்திரி நாட்களில் வழிபாடு நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அவரது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவில் அவரது நெல் வயலில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டும், பிற விவசாயிகளிடமிருந்து சேகரிக்கப்பட்டதுமான சுமார் 60-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் ரகங்களின் அறுவடை செய்யப்பட்டு பொக்கிஷமாகச் சேமிக்கப்பட்டு வரும் கதிர்களை வரிசையாகக் காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்.

அவரது வீட்டிற்கு கொலு பார்க்க வந்து செல்லும் அக்கம்பக்கத்தினர் குறிப்பாக மாணவ, மாணவிகள் ஒவ்வொரு நெல் ரகங்களின் பெயர்களையும் அவற்றின் சிறப்புகள், மருத்துவக்குணங்களையும் ஆர்வத்துடன் கேட்டும் குறிப்பெடுத்தும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் செல்கின்றனர்.

நெல் ரகங்களுடன் லெட்சுமி தேவி
நெல் ரகங்களுடன் லெட்சுமி தேவி

இதுகுறித்து லெட்சுமி தேவியிடம் பேசினோம், “விவசாயத்துக்கும் எனக்கும் சம்மந்தமே கிடையாது. அப்பா, ஹையர் செகண்டரி ஸ்கூல் ஹெச்.எம்.   பி.எஸ்.சி, பி.எல்.ஐ.எஸ்., எம்.ஏ (ஆங்கிலம்) முடிச்சிருக்கேன். பி.எஸ்.என்.எல்லில்  கிளார்க்காக வேலை பார்த்தேன். வேலைக்கு பஸ்ஸூல போகும்போதும் வரும்போதும் வயக்காடுகள்ல பச்சைப் போர்வை போத்தினது  மாதிரி நெல் கதிருங்க அசைஞ்சாடிக்கிட்டு இருக்குறதையும், நெல்நாத்து வாசனையை நுகரும் போதும் நாமளும் விவசாயம் செய்யணும்னு மனசுக்குள்ள தோணுச்சு. 

அதிக  வேலைப்பளு, உடல் நிலை காரணமா கடந்த 2010-ல வி.ஆர்.எஸ்ல ஓய்வுபெற்றேன். மத்தவங்களை மாதிரி டி.வி சீரியல் பார்த்துட்டு சோம்பேறியா வீட்ல இருக்குறது எனக்குப் பிடிக்கல. ஏற்கெனவே மனசுக்குள்ள நினைச்சிருந்த மாதிரி விவசாயம் செய்யலாம்னு எனக்குள்ள ஒரு யோசனை இருந்துச்சு. ’நான் விவசாயம் செய்யலான்னு  நினைக்கிறேன்’னு வீட்ல சொன்னேன்.

கணவர், மகள், மகன்கள், ’சூப்பர்மா நல்ல முடிவுதான்’ன்னு சொல்லி  உற்சாகப்படுத்தினாங்க. ஆனா, உடல்நிலை சரியில்லன்னுதான வி.ஆர்.எஸ் கொடுத்தீங்க எப்படி விவசாயத்தைச் செய்வ? பேசாம வீட்ல இரு’ன்னு சொந்தக்காரங்க, ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. ஆனா, விவசாயம் செய்யணும்.

லெட்சுமி தேவி

அதுலயும் இயற்கை விவசாயம்தான் செய்யணும்கிறதுல உறுதியா இருந்தேன். இயற்கை விவசாயம் செய்யுற யாரையும் எனக்குத் தெரியாது. யூ-டியூப் மூலமாத்தான் இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். அதுலயே நம்மாழ்வார் ஐயாவோட உரைகள், இயற்கை விவசாயம் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்.

சரஸ்வதி மகால் நூலகத்துல ஓலைச்சுவடிகள் பாதுகாப்புத் துறையில வேலை செஞ்ச பெருமாள் சார் மூலமா தஞ்சாவூர்ல ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, ஒரத்தநாடுல மாப்பிளைச் சம்பா நெல் விதைகளை வாங்குனேன். அப்படியே ஒவ்வொரு ரகமாச் சேகரிக்க ஆரம்பிச்சேன்.

கொட்டாரச்சம்பா, காலாநமக், பால்குடவாழை, பனங்காட்டு குடவாழை, மிளகுச்சம்பா, பூங்கார், கருத்தக்கார், சித்திரைக் கார், கருப்புக்கவுனி, ஒரிசா குட்டை, ஒரிசா நெட்டை, ஒரிசா மணிச்சம்பா, ரத்தசாலி, வாசனைச் சீரகச்சம்பா,  செங்கல்பட்டு சிறுமணிச் சம்பா, நவரா, சிவன்சம்பா, வைகரைச் சம்பா, கொத்தமல்லிச் சம்பா, அறுபதாம் குறுவை, கருங்குறுவை, தங்கச்சம்பா, வாடன் சம்பா, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா,  மடுமுழுங்கி, பாசுமதி, சிவப்புக்கவுனி, தூயமல்லி, கல்சேரி, பிசினிச் சம்பா, புழுதிக்கார், கருடன் சம்பா, காட்டுயானம், மாப்பிளைச் சம்பா, இலுப்பைப்பூச் சம்பா என 60-க்கும் மேற்பட்ட ரகங்கள் இருக்கு.  

இன்னமும் பல ரகங்களைத் தேடிக்கிட்டுத்தான் இருக்கேன். பொங்கல் திருநாளில் நெற்நாழியில் நெல் வைத்து சூரிய பகவானுக்கு வழிபடுவோம் இல்லையா?

லெட்சுமி தேவியின் நெல் வயல்
லெட்சுமி தேவியின் நெல் வயல்

அதே மாதிரி பாரம்பர்ய நெல் கதிர்களை கொலுவில் வைத்து வைத்து வழிபாடு செய்யலாமே எனத் தோன்றியது. கடந்த 5 ஆண்டாக கொலுவில் நெற் கதிர்களை அடுக்கி வைத்து வழிபாடு செய்து வருகிறேன். இது வெறும் வழிபாட்டிற்காக மட்டுமல்ல. தமிழர்கள் இத்தகைய பல்வேறு மருத்துவக் குணங்கள் மிக்க இத்தகைய நெல் ரகங்களைச் சாகுபடி செய்தும், உணவாக உண்டும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை தற்போதைய இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்தக் காட்சிப் படுத்தலின் முக்கிய நோக்கம்” என்றார்.   

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.