என் வெண்கோலுக்கு வீர வணக்கம்! – சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் தந்த உற்ற தோழன்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தேசத்தின் சுதந்திர நாள் ஆகஸ்ட் 15 என்றால், என் சுயமரியாதையின் மற்றும் சுதந்திரத்தின் திருநாள் அக்டோபர் 15! அன்று வெள்ளையனை வெளியேற்றி இந்தியாவை மீட்டார்கள்; இன்று வெண்கோல் ஏந்தி எங்களைப் போன்ற பார்வையற்ற பெண்களையும் இந்தச் சமூகத்தில் சுதந்திரமாகப் பயணிக்கச் செய்துள்ளது இந்த நாள்! இந்நாளில் மட்டும் உன்னை கொண்டாடுவது எப்படி ஏற்புடையதாகும்?
வெண்கோலே, நீ என் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்கள் தான் எத்தனை எத்தனை! நீ என் வாழ்க்கை பயணத்தின் ஒரு அங்கம். ஒவ்வொரு ஆண்டும் உன்னுடனான பயணத்தைக் குறித்து எழுதத் துடித்திருக்கிறேன்; உனக்கு நன்றி கூறாமல் நாட்களைக் கடத்தி இருக்கிறேன். இம்முறை இந்த நன்றி மடலை என் வார்த்தைகளால் கோர்த்து உனக்கு மாலையாய் அணிவிக்கிறேன்.
என் பள்ளிப் பருவத்தில் உன்னை ஒரு விளையாட்டுக் கருவியாய் பயன்படுத்தி களிப்படைந்தேன்; ஆனால், என் கல்லூரி முதலாம் ஆண்டிலேயே என் வாழ்வின் நிரந்தர வழிகாட்டி நீயாகத்தான் இருக்கப் போகிறாய் என்ற நிதர்சனத்தை எனக்கு உணர்த்திவிட்டாய்!
நீ என்னுடன் இடமும் வலமும் தட்டித் தட்டி டக் டக் என்று ஒலியெழுப்பும் பொழுதெல்லாம், நான் ஒரு வீராங்கனையாய் அணிவகுத்துச் செல்வதாகவே உணர்கிறேன். நான் சாலையில் உன் கரம் பற்றி நடக்கும் பொழுதெல்லாம் தனிமையை என்றும் உணர்ந்ததில்லை. ஆனால், நீ இல்லாத ஒரு நொடி கூட என்னால் ஓர் அடியும் எடுத்து வைக்க இயலவில்லை. நீ என்றாவது உடைந்து சிதறினால் என் கைகள் நடுங்கத் தொடங்கும். உனக்கு ஓய்வு வீட்டின் மூலைகளில் மட்டுமே தவிர, என் பயணத்தில் என்றுமே இல்லை என்று அன்றுதான் எனக்குப் புரிந்தது!

என் பார்வையின்மையின் அடையாளச் சின்னம் நீ!
நான் நடக்கும் போது மேடு பள்ளங்களை அறியச் செய்து இடரி விழாமல் காத்தாய்!
சாலையோ ரயில் தண்டவாளத்தையோ கடக்கும்போது, உன் இருப்பால் மற்றவர்கள் குறிப்பறிந்து உதவி செய்ய வைத்தாய்!
என் கைகளில் உன் இருப்பால் பேருந்திலும் ரயிலிலும் எனக்கு உட்கார இடம் பெற்றுத்தந்தாய்!
சில ஆண்களின் தவறான தீண்டுதலில் இருந்து என்னை விலக்கி, நீ இடைநின்று ஒரு பலமான அரணாய் நின்று என்னை அந்தத் தீண்டுதலில் இருந்து காத்து அழைத்துச் சென்றாய்!
"பார்வையற்ற பெண்ணால் துணை இன்றித் தனியாகப் பயணிக்க முடியாது" என்ற சமூகத்தின் பார்வையையும் பிழையான கற்பிதங்களையும் தவிடுபொடியாக்கி, எந்நாட்டிற்கும் தனியாய் செல்லும் தைரியத்தை அள்ளித்தந்த போர்க்கருவி நீ!
நான் என் பயணத்தின் போது எத்தனையோ தடைகளை சந்தித்திருக்கிறேன். தடுக்கி விழுந்திருக்கிறேன். ஆனால் அது உன்னால் ஏற்பட்ட விபத்து அன்று, உன்னை சரியாகப் பயன்படுத்தாததால் ஏற்பட்ட விளைவுதான் அது!
உன்னை நான் எப்பொழுதெல்லாம் அலட்சியமாய் பயன்படுத்தியிருக்கிறேனோ அப்பொழுதெல்லாம் எனக்குச் சிறுதண்டனை கொடுத்து செல்லமாய் எச்சரித்திருக்கிறாய். அதுவும் என் நன்மைக்காகத்தான்!

உன்னை இன்னும் கவனமாய் இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதனை உரிமையுடன் நீ உணர்த்தியிருக்கிறாய்!
என் பொருட்டு நீ எத்தனையோ முறை நீரில் குதித்திருக்கிறாய்; குழிகளில் புதைந்திருக்கிறாய்; அழுக்கில் புரண்டிருக்கிறாய். மரங்களிலும் சுவர்களிலும் மோதி நீ காயமுற்றாலும், உன் மார்பிலே தாங்கி என்னை அழகாய்ப் பாதுகாத்திருக்கிறாய்!
ஆனால் மனிதர்களைப் போல் ஒருபோதும் நீ அதைச் சொல்லிக் காட்டியதும் இல்லை; அதற்காய் நீ என்னை சலித்துக் கொண்டதும் இல்லை! அதை நீ சகித்துக் கொண்டே கடந்திருக்கிறாய். உன் கரம் பற்றி நடக்கும் ஒவ்வொரு கணமும் நான் சுயசார்புடைய ஒரு சுதந்திரப் பெண்ணாய் உணர்கிறேன்!
விழி மட்டுமே வழிகாட்டும் என்ற தவறான கண்ணோட்டத்தைத் தகர்த்து, எத்தனையோ பார்வையற்றவர்கள் வாழ்வில் ஒளியூட்டும் வழிகாட்டியாய் நீ விண் உயர்ந்து விருட்சம் தந்து கொண்டிருக்கிறாய்!
அறிவியல் எத்தனையோ புதுமைகளைக் கொண்டுவரலாம்; ஸ்மார்ட் போன்களும், ஸ்மார்ட் கண்ணாடிகளும், ஸ்மார்ட் கெய்ன்களும் ஆயிரம் பரிமாணங்களில் உதித்தாலும், உன் எளிய வடிவத்தின் கம்பீரத்திற்கு எவையும் ஈடாகாது!

தொழில்நுட்பங்கள் எத்தனை மாறினாலும், உன்னை எவராலும் எந்நாளும் மாற்ற முடியாது.
ஆயிரம் யுகங்கள் கடந்தாலும், உன் டக் டக் ஓசை தரும் தடையற்ற சுதந்திரப் பயணத்திற்கு இந்த உலகத்தில் வேறு எந்தக் கண்டுபிடிப்பும் மாற்றாக முடியாது!
நீ என்னைப்பெறாத தாய் இல்லை; இல்லை, என் உயிர் உள்ளவரை என் உற்ற தோழன் நீ!
உனக்கு நன்றி சொல்ல இந்தப் பிறவி எனக்கு நிச்சயம் போதாது!
நீ நான்கு மடிப்புகளாய், ஐந்து மடிப்புகளாய், ஆறு மடிப்புகளாய், ஏழாம் மடிப்புகளாய் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்க வேண்டும். பார்வையற்ற பெண்களின் கரங்களினூடே நீ ஒரு போர்க்கருவியாய் தவழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்!
நான் மரணித்த பிறகும் வெள்ளை தேவதையாய் நீ என்னைச் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும்!
உலக வெண்கோல் தின விழிப்புணர்வு பதிவு.
-மு. முத்துச்செல்வி
சீனியர் மேனேஜர், இந்தியன் வங்கி.
துணைத் தலைவர், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!
இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


