“பூமியே சிவப்பாகுது!”… வலுப்பெறும் ‘சூப்பர் எல் நினோ’ – டிசம்பரில் உச்சம்; 2027 வரை நீடிக்குமா?
உலகம் முழுவதும் வெளியாகியுள்ள வானிலை வரைபடங்களில் பல பகுதிகள் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன. இந்த சிவப்பு நிறம், அந்தப் பகுதிகளில் வழக்கமான சராசரியை விட அதிக வெப்பநிலை பதிவாகி வருவதைக் குறிக்கிறது.
குறிப்பாக பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பம் அதிகரித்து வருவது செயற்கைக்கோள் தரவுகளிலும் தென்படுகிறது. இந்த மாற்றங்களுக்குப் பின்னணியில் வலுப்பெற்று வரும் El Nino முக்கிய காரணியாக இருப்பதாக WMO மற்றும் NASA-வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல் நினோ (El Nino) தற்போது வேகமாக வலுப்பெற்று வருவதாக உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது.
வரும் டிசம்பர் மாதத்தில் இது உச்சத்தை எட்டும் என்றும், 2027 பிப்ரவரி வரை நீடிப்பதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட 100 சதவிகிதம் இருப்பதாகவும் WMO-வின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது 1950-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவான வலுவான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும் இயற்கையான காலநிலை நிகழ்வு.
கடலில் ஏற்படும் இந்த வெப்பநிலை மாற்றம் காற்றோட்டம் மற்றும் மழைப்பொழிவு முறைகளையும் பாதிக்கும். இதனால் சில பகுதிகளில் அதிக வெப்பம், வறட்சி ஏற்படலாம்; மற்ற பகுதிகளில் கனமழை, வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிலவலாம் என வானிலை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
தற்போது தீவிரமடைந்து வரும் இந்த எல் நினோ திடீரென உருவானதல்ல.
2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பசிபிக் பெருங்கடலில் இதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியதாக NASA தெரிவித்துள்ளது. NASA-வின் Sentinel-6 செயற்கைக்கோள், கடலில் வெப்பமான நீரின் அலைகள் கிழக்கு நோக்கி நகர்வதைப் பதிவு செய்தது.
மே மாதத்தில் Peru கடற்கரைப் பகுதியில் கடல் மட்டம் வழக்கமான அளவைவிட சுமார் 15 செ.மீ உயர்ந்திருந்ததாகவும் NASA தெரிவித்தது. வெப்பமான கடல் நீர் விரிவடைவதால் கடல் மட்டம் உயர்வதும் எல் நினோவின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த அறிகுறிகள் தொடர்ந்து வலுப்பெற்ற நிலையில், ஜூன் மாதத்தில் El Nino உருவாகியிருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், WMO-வின் புதிய கணிப்பின்படி, 2026 அக்டோபர் முதல் டிசம்பர் வரை பசிபிக் கடல் வெப்பநிலை சராசரியை விட 3.7°C வரை உயரலாம். இதற்கு முன்பு 2015–16-ல் ஏற்பட்ட வலுவான El Nino-வில், இந்த உயர்வு 2.6°C ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தற்போதைய எல் நினோ மிகவும் வலுவான நிகழ்வாக இருக்கலாம் என WMO தெரிவித்துள்ளது.

இதன் தீவிரத்தை சில வானிலை ஆய்வாளர்கள் ‘Super El Nino’ என்றும் குறிப்பிடுகின்றனர். வரும் மாதங்களில் உலகின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை நிலவலாம் என்றும், சில இடங்களில் வறட்சியும், வேறு சில பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளமும் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே உலகம் வெப்பமடைந்து வரும் சூழலில் இந்த வலுவான எல் நினோ உருவாகியிருப்பதும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
WMO-வின் தற்போதைய கணிப்பின்படி, எல் நினோ டிசம்பரில் உச்சத்தை எட்டலாம்; அதன் தாக்கம் 2027 பிப்ரவரி வரை தொடரலாம். அடுத்த சில மாதங்களில் உலகின் வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் தீவிர வானிலை மாற்றங்களை சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


