Doctor Vikatan: தொப்புளுக்கு மேலே கொழுப்புக்கட்டி... அப்படியே விடலாமா, அகற்ற வேண்டுமா?
Doctor Vikatan: என் வயது 48. எனக்குத் தொப்புளுக்கு மேலே ஒரு ஜான் அளவுக்கு கொழுப்புக்கட்டி இருக்கிறது. அதை அப்படியே விடலாமா அல்லது அகற்ற வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவரும், லேப்ராஸ்கோப்பிக் மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெய் வினோத்குமார்.
நீங்கள் முதலில் உங்களுக்கு வந்திருக்கும் கட்டியின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது அது தொப்புளுக்கு மேலே உள்ள கட்டியாகவோ (Supraumbilical hernia) அல்லது கொழுப்புக்கட்டியாகவோ (Lipoma) இருக்கலாம். உங்களுக்கு வந்துள்ளது இந்த இரண்டில் எது என்பதை உறுதிப்படுத்த நீங்கள் நேரடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
மருத்துவப் பரிசோதனை (Clinical examination) செய்வதுடன், நோயாளியிடம் முந்தைய தகவல்களையும் மருத்துவர் கேட்டறிவார். உடலின் பிற பகுதிகளான கை, தொடை அல்லது வயிற்றில் வேறு எங்கேயாவது இது போன்ற கட்டிகள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும். பொதுவாக கொழுப்புக்கட்டி என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வரக்கூடிய, பாதிப்பில்லாத ஒரு வீக்கமாகும்.
வேறு எங்குமே கட்டி இல்லாமல், தொப்புளுக்கு நேர் மேலே நடுப்பகுதியில் (Midline) மட்டும் இருந்தால், அது எபிகாஸ்ட்ரிக் (Epigastric Hernia) அல்லது சுப்ராஅம்ப்ளிகல் ஹெர்னியாவாக (Supraumbilical Hernia) இருக்க அதிக வாய்ப்புள்ளது.
மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, தேவைப்பட்டால் அல்ட்ராசவுண்ட் (Ultrasound) அல்லது சிடி (CT) ஸ்கேன் செய்து பார்த்தால் துல்லியமாகக் கணிக்கலாம்.

கொழுப்புக்கட்டி என்றால், அதில் வலி அல்லது வேறு எந்த அசௌகர்யமும், அறிகுறிகளும் இல்லை என்றால் இதற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. பயப்படத் தேவையில்லை என்ற உறுதிப்பாடே போதுமானது.
ஒருவேளை ஹெர்னியா என்றால் அதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். தற்போது லேப்ராஸ்கோபி (Laparoscopy) முறையிலேயே இதற்கான அறுவை சிகிச்சையைச் செய்ய முடியும். நோயாளியின் மருத்துவரீதியான தகவல்கள், பிற பாதிப்புகள் மற்றும் பரிசோதனைகளின் அடிப்படையில் துல்லியமான நோய்க்கணிப்பைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சையைத் திட்டமிடலாம்.
டாக்டர் ஜெய் வினோத்குமார்:
சென்னை, அப்போலோ மருத்துவமனையில் பொது மருத்துவர் மற்றும் லேப்ராஸ்கோப்பிக் மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிகிறார். இத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

