Ranabali: என்னை பார்த்து ஓவர் ஆக்டிங் என்று சொன்னாலும் பரவாயில்லை! - ராஷ்மிகா மந்தனா
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் ரணபலி திரைப்படம், இம்மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்கள். அப்படி இவர்கள் கொடுத்த சமீபத்திய பேட்டியில் ட்ரோல்கள் தொடர்பாகப் பேசியிருக்கிறார்கள்.
ராஷ்மிகா மந்தனா, "அன்பையும் இரக்கத்தையும் காட்டுவது பலவீனமல்ல; அதைத்தான் நான் நம்புகிறேன். இன்றைக்கு நம்மைச் சுற்றி எக்கச்சக்கமான எதிர்மறை எண்ணங்கள் பரவிக் கிடக்கின்றன.
அப்படியிருக்கும் போது, என்னால் முடிந்த அளவு நேர்மறையான எண்ணங்களைப் பரப்பவே நான் விரும்புகிறேன். சிலர் என்னுடைய இந்த இயல்பான குணத்தைக் கூட ஓவர் ஆக்டிங் என்று சொன்னாலும் பரவாயில்லை.
உலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் எல்லோரையும் பிடித்துவிடாது. எனக்கு இப்படி இருப்பதுதான் பிடித்திருக்கிறது.
மற்றவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக என்னால் நடிக்க முடியாது. இந்த இயல்புதான் என்னையும், என் குடும்பத்தையும், என்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது" எனப் பகிர்ந்திருக்கிறார்.
தொடர்ந்து விஜய் தேவரகொண்டா, "இன்றைய சூழலில் நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது செய்யப்படுகிற ட்ரோல்கள் பெரும்பாலானவை திட்டமிட்டு உருவாக்கப்படுபவை.
ஒரு நபரை நேரில் சந்திக்காமல், அவரோடு பழகாமல், அவரைப் பற்றி எப்படி ஒருவரால் இவ்வளவு கடுமையான பிம்பத்தை உருவாக்க முடியும்?

சமூக வலைதளங்களில் சில கணக்குகளைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட நபர் மீது தவறான பிம்பத்தை உருவாக்க ஒரு பெரிய குழுவே பின்னணியில் வேலை செய்கிறது.
எனவே, இதுபோன்ற திட்டமிட்ட கருத்துகளை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


