ரஷ்யா: உடைந்த Test Tube; வைரஸ் லீக்? Anti-Plague Institute ஊழியர் மரணம்; தனிமைப்படுத்தலில் 200 பேர்

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் (Irkutsk) பகுதியில் உள்ள ஆண்டி-ப்ளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் உயிரிழந்ததை அடுத்து, அங்குள்ள 200-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஐந்து மருத்துவமனைகளில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

என்ன நடந்தது?

அந்நிறுவனத்தில் லேப் டெக்னீஷியனாகப் பணியாற்றிய 28 வயதான டாரியா ஷிபிலோவா (Darya Shipilova), கடந்த செப்டம்பர் இறுதியில் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தீவிர நிமோனியா பாதிப்பு காரணமாக ஷெலேகோவ் (Shelekhov) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 2-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

பிளேக் தொற்று சந்தேகம் எழக் காரணம் என்ன?

டாரியா பணியாற்றிய ஆய்வகத்தில் பிளேக் நோயை ஏற்படுத்தும் யெர்சினியா பெஸ்டிஸ் (Yersinia pestis) கிருமி தொடர்பான பணிகள் நடந்து வந்துள்ளன. கடந்த செப்டம்பர் 25-ம் தேதி பரிசோதனைக் குழாய் (Test Tube) உடைந்து அவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் இது நுரையீரலைப் பாதிக்கும் நியூமோனிக் பிளேக் (Pneumonic Plague) தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், ஆய்வக விபத்தோ அல்லது பிளேக் தொற்றோ இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

தனிமைப்படுத்தப்பட்ட 200 பேர்

டாரியாவுடன் தொடர்பில் இருந்த சுமார் 200 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பல மருத்துவமனைகளில் மூன்று வார தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள அலுமினிய ஆலை ஊழியர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் விளக்கம்

ரஷ்யாவின் பொது சுகாதார அமைப்பான ரோஸ்போட்ரெப்நாட்சோர் (Rospotrebnadzor), இந்த மரணத்தை பிளேக் தொற்று என மறுத்துள்ளது. அந்தப் பெண் மர்மமான நிமோனியா (Pneumonia of unknown etiology) காரணமாகவே உயிரிழந்ததாகவும், அவரது மரணத்திற்கும் ஆய்வகத்தில் கையாளப்பட்ட கிருமிகளுக்கும் தொடர்பில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், அப்பகுதியில் தொற்று பரவல் நிலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளது.

ஆய்வக ஊழியரின் மரணம் மற்றும் நூற்றுக்கணக்கானோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.