Doctor Vikatan: கஞ்சியா, கார்ன்ஃப்ளேக்ஸா, இட்லி, பொங்கலா? - காலை உணவுக்கு ஏற்றது எது?

Doctor Vikatan:  காலை உணவுக்கு திரவ உணவுகள் சரியானவையா... காலை உணவு ஹெவியாக இருக்க வேண்டும் என்கிறார்களே,  அப்போது அதை எப்படித் திட்டமிட வேண்டும்? கஞ்சியா, கார்ன்ஃப்ளேக்ஸா, இட்லி, பொங்கலா- காலை உணவுக்கு ஏற்றது எது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்

பொதுவாக காலை உணவு (Breakfast) என்பது தவிர்க்கவே கூடாத ஒன்று. இரவில் சுமார் 8 மணி நேர இடைவெளிக்குப் பிறகு மறுநாள் காலையில் நாம் எடுத்துக்கொள்ளும் முதல் உணவு இதுதான். ஒரு வாகனத்திற்கு எரிபொருள் (Fuel) போடுவது போல, நமது உடலைச் சரியாக இயங்க வைக்க, காலை உணவு மிகவும் அவசியம். அதனால் காலை உணவு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

கஞ்சி போன்ற திரவ உணவுகள் எளிதில் செரிமானம்  ஆகிவிடும். ஆனால், நாம் எப்படி உழைத்துச் சம்பாதிக்கிறோமோ, அதுபோல நமது உடலின் உள் உறுப்புகளுக்கும் வேலை தேவை. வாயில் உள்ள உமிழ்நீர் (Saliva) மற்றும் செரிமான அமிலங்கள் (Salivary acids) தூண்டப்பட்டு செரிமானம் சிறப்பாக நடக்க, உணவை நன்றாக மென்று சாப்பிடுவதே  சாதாரண மனிதருக்கு நல்லது. ஆரோக்கியப் பிரச்னைகள் எதுவும் இல்லாதவர்கள் இட்லி, பொங்கல் அல்லது கான்ஃப்ளேக்ஸ் (Cornflakes) என எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

வெளியில் விற்கும் பொங்கலில் வனஸ்பதி, எண்ணெய் (Vegetable oil) அதிகம் சேர்ப்பார்கள். பொங்கல் சாப்பிட்டதும் தூக்கம் வருவதாக உணர இதுதான் காரணம்.

பொங்கல் சாப்பிடலாம். ஆனால், அதிகளவில் நெய் சேர்க்கக் கூடாது. குறிப்பாக, வெளியில் விற்கும் பொங்கலில் வனஸ்பதி,  எண்ணெய் (Vegetable oil) அதிகம் சேர்ப்பார்கள். பொங்கல் சாப்பிட்டதும் தூக்கம் வருவதாக உணர இதுதான் காரணம். தவிர, அது ஆரோக்கியத்திற்கும் நல்லது அல்ல. எனவே, வீட்டிலேயே செய்து சாப்பிடும் பொங்கல் மிகவும் நல்லது. அது புரதம், கலோரி மற்றும் கொழுப்புச்சத்து நிறைந்த  நல்ல சமச்சீர் உணவாக இருக்கும்.


ஒரு சாதாரண நபருக்கு ஒரு நாளைக்கு 1,800 முதல் 2,200 கலோரிகள் தேவை என்றால், காலை உணவில் இருந்து சுமார் 600 கலோரிகளைப் பெறும்படி திட்டமிட வேண்டும்.   நாள் முழுவதும் வேலை செய்வதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால் காலை உணவு நன்றாக செரிமானமாகி தேவையான சக்தியைக் கொடுக்கும்.  இரவு உணவை அளவோடு சாப்பிட வேண்டும். 

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் (Weight loss) காலை உணவாகக் கஞ்சி எடுத்தால், அவர்களுக்குக் காலை 11 அல்லது 12 மணிக்கெல்லாம் பசிக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் மீண்டும் திரவ உணவுகளாக (Liquids) எடுத்துக்கொண்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. இருப்பினும், காலை உணவில் நல்ல தரமான புரதச்சத்து (Protein) மற்றும் நார்ச்சத்து (Fiber) இருக்க வேண்டியது அவசியம். இரவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிட முடியாது என்பதால், ஒரு நாளுக்குத் தேவையான சிறந்த ஊட்டச்சத்துகளைக் காலை உணவிலிருந்தே பெற வேண்டும்.

இட்லியில் கார்போஹைட்ரேட் மற்றும் நொதித்தல் (Fermentation) மூலம் கிடைக்கும் புரோபயாடிக் (Probiotic) நன்மைகளும் கிடைக்கும்.

பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள், அது மிகவும் தவறானது. காலை உணவில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்  நிறைந்திருக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, காய்கறி சப்பாத்தி, இட்லி-சாம்பார் போன்றவை மிகவும் ஆரோக்கியமானவை. சாம்பாரில் புரதச்சத்தும், இட்லியில் கார்போஹைட்ரேட் மற்றும் நொதித்தல் (Fermentation) மூலம் கிடைக்கும் புரோபயாடிக் (Probiotic) நன்மைகளும் கிடைக்கும். இவற்றுடன் கூடுதலாக ஒரு பழம் அல்லது காய்கறிகளைச் சேர்த்துக்கொண்டால் அது ஒரு முழுமையான சமச்சீர் உணவாக  மாறும்.
சுருக்கமாகச் சொன்னால், காலை உணவு என்பது ஹெவியாக இருப்பதைவிட, ஆரோக்கியமானதாகவும் சத்து மிக்கதாகவும்  இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

டயட்டீஷியன் அம்பிகா சேகர்:

உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகராக 30 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் ஆக்ஸிமெட் மருத்துவமனையில் டயட்டீஷியனாகப் பணிபுரிகிறார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.