ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவல் அதிகாரி?

டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர்களை தொடக்கூடாத இடத்தில் தொட்டு போலீஸார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார் செய்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பக்க செய்தியில்,டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடைபெற்ற இடத்தில் மூன்று பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்ததாக புகார் அளித்துள்ளனர். நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்காக அப்புகார்கள் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதாக அதில் தெரிவித்துள்ளது.

போலீஸ் அதிகாரிகள் மீது மூன்று பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்களை தெரிவித்துள்ளனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஒரு பெண் பத்திரிகையாளர் அளித்த பேட்டியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டங்களின்போது, ​​போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக தெரிவித்தார்.

போராட்டத்தின் போது போலீஸாரின் நடவடிக்கையைப் படம்பிடித்துக்கொண்டிருந்தபோது, ​​அந்த அதிகாரி தன்னைத் தவறான முறையில் தொட்டதாகவும், தள்ளிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து புகாரைப் பதிவு செய்வதற்காகத் தானும் மற்றவர்களும் போலீஸ் நிலையத்திற்குச் சென்றதாகவும், ஆனால் உடனடியாகப் புகார் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில்,ஜனநாயகத்தில் இதுபோன்ற நடத்தையை ஏற்க முடியாது.

பத்திரிகையாளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும். பெண் பத்திரிகையாளர்களின் புகார் மீது டெல்லி போலீஸார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்க செய்தியில்,ஜந்தர் மந்தரில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் போலீஸ் அதிகாரி மீது முறையற்ற நடத்தை குறித்துப் புகார் அளித்துள்ளார். நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் பல மணிநேரமாக ஒரே ஒரு கோரிக்கையுடன் அங்கு அமர்ந்திருக்கிறார்கள்.

அது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுதான். இது போலீஸாரின் அடிப்படை கடமை அல்லவா? அவர்கள் அதைக்கூடச் செய்யவில்லை," என்று அவர் கூறினார்.பெண் போராட்டக்காரர்கள் மீது அத்துமீறல்கள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. கேமராக்கள் பறிக்கப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது முதல் முறையல்ல.

பெண் போராட்டக்காரர்களிடம் போலீஸார் அருவருக்கத்தக்க வகையில் அத்துமீறியதற்கான காணொளி ஆதாரங்களை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். ஒரு பெண்ணின் புகாரைப் பதிவு செய்யவே அஞ்சும் ஒரு அரசாங்கம், உண்மையில் எதைப் பாதுகாக்கிறது? டெல்லி போலீஸ் துறை உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமித் ஷா அவர்களே, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? இதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்,” என்று அவர் எழுதினார்.," என்று அவர் கூறினார்.

இது ஆம் ஆத்மி கட்சி செய்தித்தொடர்பாளர் செளரவ் தாஸ் அளித்த பேட்டியில்,"உதவி போலீஸ் கமிஷனர் விவேக் பகத் பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார். அவரைத் தகாத முறையில் தொட்டுள்ளார். இது அதிர்ச்சியளிக்கிறது. டெல்லி போலீஸ் ஏன் உதவி போலீஸ் கமிஷனர் பகத்தை மறைமுகமாகப் பாதுகாக்கிறது? நாங்கள் அந்தப் பெண் பத்திரிகையாளருக்கு துணையாக நிற்போம். நிற்கிறோம். முதல் தகவல் அறிக்கை பதிவு மற்றும் பணி இடைநீக்கம் உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகள் அந்த அதிகாரி மீது எடுக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.