``அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு நான் தரும் மதிப்பெண் ஜீரோ..! - கீதாஜீவன் ஓபன் டாக்!
தமிழக சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக, ராஜபாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ, ஜெகதீஸ்வரி பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து, தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். விழா மேடையில் மாவட்ட ஆட்சியரை அவமதித்தது; கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தது; மணல் திருட்டில் தலையீடு… என அவர் மீது குற்றச்சாட்டுகள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த நிலையில், பள்ளி செயல்பாடு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு இடையே, முறையான தகவல் தொடர்பு இல்லாததே அரசுப் பள்ளி மாணவர்கள் முட்டை சாப்பிட முடியாமல் போனதற்குக் காரணம் என பெற்றோர்களும் குற்றம்சாட்டினர்.
முட்டை விவகாரம் பூதாகரமாகக் கிளம்பியுள்ள நிலையில், தாராபுரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கீதாஜீவனை தொடர்பு கொண்டு, சில கேள்விகளை முன்வைத்தோம்.
விஜய் தலைமையிலான த.வெ.க அரசு மீது நீங்கள் காணும் மிகப்பெரிய குறைபாடு என்ன?
சட்டம் ஒழுங்கு சீர்கேடுதான் மிகப்பெரிய குறைபாடு. விஜய் முதல்வராக பொறுப்பேற்றது முதல் தற்போது வரை கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் அவர், சட்டம் ஒழுங்கினை சீர் செய்ய தவறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
புதிய அரசு, நிர்வாக அனுபவம் இல்லாதவர்களால் நடத்தப்படுகிறது என்ற விமர்சனம் உண்மையா?
உண்மைதான். ஒவ்வோர் ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால், 49 நாள்கள் கழித்து செப்டம்பர் 1-ம் தேதி தண்ணீர் திறந்து வைத்தார் விஜய். விவசாயிகள், விவசாயத்தைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

த.வெ.க அரசு வெளியிட்ட நிதி நிலை அறிக்கையை பற்றி உங்கள் கருத்து?
அது ஒரு வெற்று அறிக்கை. மக்களுக்கான அறிக்கை கிடையாது. எல்லாவற்றையும் தாண்டி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு, அத்துறையின் அதிகாரிகள் தயார் செய்து கொடுத்துள்ள அறிக்கையைப் பார்த்து வாசிப்பதிலேயே அவ்வளவு பிழைகள். இதில், அமைச்சர் ஜெகதீஸ்வரி, நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, தான் ஒரு புலானாய்வு வார இதழின் செய்தியாளராகப் பணியாற்றினேன் என மேடைக்கு மேடை பள்ளி நிகழ்ச்சிகளில் பெருமையாகக் கூறி வருகிறார். தெளிவான பேச்சும், அறிவார்ந்த எழுத்தும்தான் ஒரு செய்தியாளரின் அடிப்படை திறன்கள். அவர் பட்ஜெட் அறிக்கையை வாசித்த விதத்தை மக்கள், டி.வி வால்யூமை கூட்டி வைத்து ரசித்து சிரித்து மகிழ்ந்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு முட்டை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஓங்கி ஒலித்துள்ளது. இத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளீர்கள். இந்த அலட்சியத்தின் காரணம் என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
தமிழகத்தில் காமராசரால் ’மதிய உணவுத் திட்டமாகத் தொடங்கப்பட்டு, எம்.ஜி.ஆரால் “சத்துணவுத் திட்டமாக” விரிவுபடுத்தப்பட்ட இத் திட்டத்தில், கலைஞர் அவர்கள், கடந்த 1989-ம் ஆண்டு வாரத்திற்கு ஒரு முட்டை வழங்கும் முறையைக் கொண்டு வந்தார். அதன் பின்னர், பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைப் போக்கும் நோக்கில், கடந்த 2010-ம் ஆண்டு முதல் வாரத்திற்கு 5 நாள்கள் முட்டை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக எவ்விதத் தடையுமின்றி சீராக வழங்கப்பட்டு வந்த இச்சத்துணவு முட்டைகள், த.வெ.க. ஆட்சிக்கு வந்த பின் திடீரென நிறுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

குறிப்பாக நாமக்கல், ஈரோடு, சேலம், நெல்லை, நாகப்பட்டினம், திருப்பூர், மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்குச் சத்துணவில் முட்டை வழங்கப்படவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன. இதன் பின்னணியில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முட்டை கொள்முதல் முறையாக நடைபெறாததும், சமூக நலத்துறை முற்றிலுமாக முடங்கியிருப்பதுமே முக்கியக் காரணமாகத் தெரியவருகிறது.
நீங்கள் தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது பல அங்கன்வாடிகள், பள்ளிகளில் சத்துணவு முட்டைகள் அழுகியிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததே?
முட்டை அழுகல் என்பது தவிர்க்க முடியாதது. அதே நேரத்தில் எத்தனை முட்டை அழுகல், தண்ணீரில் மிதக்கும் முட்டைகள், கீறல் விழுந்த ஓடுகளுடனான முட்டைகள் ஆகிய சேதமான முட்டைகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் மாற்றிக் கொடுக்க வேண்டும் என ஒப்பந்தத்திலேயே சரத்து உள்ளது. இதனை முறையாக கண்காணித்து உடனுக்குடன் மாற்றி வழங்கப்பட்டது.

ஆனால், இந்த ஆட்சியைப் போல் மாணவர்களுக்கு முட்டையே வழங்கப்படாத நிலை ஏற்படவில்லை. இது போன்ற சேதமான முட்டைகளை தனியே ஒதுக்கி வைத்திருப்பதை, சில எதிர்க்கட்சியினர் வீடியோ எடுத்து தி.மு.க ஆட்சியின் மீது வீண் குற்றச்சாட்டுகளை பரப்பி வந்தனர்.
தற்போதைய சமூக நலத்துறை நிர்வாகத்தில் நீங்கள் காணும் முக்கிய குறைபாடு என்ன?
சமூகநலத்துறையின் மீது மக்களின் நம்பிக்கை இந்த ஆட்சியில் குறைந்து விட்டது.
பெண்கள் பாதுகாப்பு, மகளிர் உரிமைத் திட்டங்கள் ஆகியவற்றில் புதிய அரசு என்ன செய்ய வேண்டும்?
தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் விஜய் அறிவித்தபடி மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500-ஐ மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். தற்போதைய அரிசி, பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில், இந்த தொகை பேருதவியாக இருக்கும்.

தற்போதைய சமூக நலத்துறை அமைச்சருக்கு நீங்கள் வழங்க விரும்பும் முக்கிய ஆலோசனைகள் என்ன? அவருக்கு நீங்கள் வழங்கும் மதிப்பெண் என்ன?
குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள், முதியவர்கள் ஆகியோருக்காகத்தான் இந்த துறை இயங்கிக் கொண்டிருக்கிறது. முதலில் தற்போதைய அமைச்சர் ஜெகதீஸ்வரி, சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறையைப் பற்றிய திட்டங்கள், பொறுப்புகளை நன்கு முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். துறையைப் பற்றிய புரிதல் இல்லை என்றால், இத்துறையில் நீண்ட கால அனுபவம் வாய்ந்த அதிகாரிகளிடம் கேட்டு தெளிவு பெற வேண்டும். என் அனுபவத்தில் அவருக்கு நான் வழங்கும் மதிப்பெண்கள் நூற்றுக்கு பூஜ்ஜியம்தான்.
த.வெ.க கட்சிக்குள்ளேயே பெண் நிர்வாகிகளுக்கு பாலியல்ரீதியான புகார்களுக்கு நடவடிக்கை இல்லை என்கிறார்களே?
ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர், கட்சி நிர்வாகிகள் இரண்டு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்த வழக்கில், அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் எம்.எம்.ஏ சரவணன் மிரட்டி வழக்கை வாபஸ் வாங்க வைத்தாரே? அமைச்சர் ஸ்ரீநாத்தின் நெருங்கிய நண்பர் ரூஸ்வெல்ட் மீது, பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி அளித்த புகாரை வாங்கச் சொல்லி நகைத் திருட்டு புகார் அளித்துள்ளார்களே? அவர்கள் கட்சி பெண் நிர்வாகிகளுக்கே பாதுகாப்பில்லாதபோது தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை பற்றி என்ன பேசுவது என்று தெரியவில்லை.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் த.வெ.க அரசின் தற்போதைய அணுகுமுறை சரியா?
அணுகுமுறை முற்றிலும் தவறு. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அமைக்கப்பட்டதுதான் ‘சிங்கப்பெண் படை’ என்கிறது த.வெ.க அரசு. ஆனால், சிங்கப்பெண்படை போலீஸாருக்கு தவறு செய்தவரை பிடிக்க மட்டுமே அதிகாரமே தவிர, வழக்குப்பதிவு செய்ய எந்த அதிகாரமும் இல்லை. அவர்களுக்கான முழு அதிகாரத்தை வழங்க வேண்டும். குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தீவிரம் காட்ட வேண்டும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


