பங்குச்சந்தை ஓப்பன் ஆன ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் கோடி காலி.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..
இந்திய பங்குச்சந்தைகளில் இன்று கடும் சரிவு ஏற்பட்டது. வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததோடு, நிஃப்டி 50 குறியீடு 23,000 புள்ளிகளுக்கும் கீழே சரிந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் பங்குச்சந்தையில், இந்த திடீர் வீழ்ச்சிக்கு பல்வேறு உலகளாவிய காரணங்கள் முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.
முக்கியமாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தொடர் புவிசார் அரசியல் பதற்றங்களால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு 100 டாலருக்கும் மேல் வர்த்தகமாகிறது.
இந்தியா தனது எரிபொருள் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதால், கச்சா எண்ணெய் விலை உயர்வு நமது நாட்டின் இறக்குமதிச் செலவையும் பணவீக்கத்தையும் அதிகரித்து, பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், அமெரிக்காவின் 10 ஆண்டு கால பாண்ட் ஈல்டு உயர்ந்துள்ளதும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைப் பங்குச்சந்தைகளில் இருந்து பின்வாங்கச் செய்துள்ளது.
இதனுடன், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியப் பங்குகளை விற்று வெளியேறி வருவதும், பேங்கிங் மற்றும் நிதித்துறை பங்குகள் சரிவைச் சந்தித்ததும் சந்தையை மேலும் பின்தள்ளியுள்ளது. உலகளாவிய பொருளாதார நிச்சயத்தன்மையற்ற சூழல் மற்றும் தொடர்ச்சியான முதலீடுகளின் வெளியேற்றம் காரணமாக இந்தியச் சந்தை கடும் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


