Doctor Vikatan: உடற்பயிற்சியின்போது வெளியேறாத வியர்வை...கொழுப்பு குறையாது என அர்த்தமா?

Doctor Vikatan: நான் கடந்த ஒரு வருடமாக ஜிம் சென்று உடற்பயிற்சிகள் செய்கிறேன்.  மற்ற எல்லோருக்கும் உடைகள் நனையும் அளவுக்கு வியர்க்கிறது. ஆனால், எனக்கு மட்டும் வியர்ப்பதே இல்லை. உடலில் இருந்து வியர்வை வெளியேறினால்தான் உடற்பயிற்சியின் பலன் கிடைக்கும், அதாவது கொழுப்பு குறையும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ்.

ஷீபா தேவராஜ்

அதிக வியர்வை வெளிப்பட்டால்தான் அது சிறந்த உடற்பயிற்சி என்பது பரவலாக விளம்பரம் செய்யப்படும் ஒரு விஷயம். அதனால் தான் பலரும் HIIT (High-Intensity Interval Training) செய்தால் நல்லது என்று நினைக்கிறார்கள், ஆனால், உண்மையில் அது உண்மையல்ல.

வியர்வை என்பது நமது உடலைக் குளிர்விக்கும் ஒரு கூலிங் சிஸ்டம் (Cooling System)...  அவ்வளவுதான். நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது உடலின் உட்புற வெப்பநிலை (internal temperature) அதிகரிக்கும். அந்தச் சமயத்தில் உடல் வியர்வையை வெளியேற்றி, அந்த ஈரம் ஆவியாகி (evaporate) உடலைக் குளிர்விக்கிறது, அவ்வளவுதான்.

இதற்கும் உங்கள் உடலிலுள்ள கொழுப்பு (fat) குறைவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே, பயங்கரமாக வியர்க்கும்படி உடற்பயிற்சி செய்தால் தான் சரியானது, வியர்க்கவில்லை என்றால் அது நல்ல உடற்பயிற்சி அல்ல என்று நினைப்பது உண்மையல்ல. எனவே, வியர்வையின் அளவை வைத்து உடற்பயிற்சியைக் கணிப்பது தவறான வழிநடத்தல் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பிறகு உடற்பயிற்சியின் தரத்தை எப்படித்தான் அளவிடுவது என்ற கேள்வி எழலாம்.

வியர்வையின் அளவை வைத்து உடற்பயிற்சியைக் கணிப்பது தவறான வழிநடத்தல்

ஓய்வு நிலை இதயத் துடிப்பு (Resting Heart Rate) என்பது ஒரு நல்ல குறியீடு. உதாரணத்திற்கு, உங்களது ஓய்வு நிலை இதயத் துடிப்பு 70-ல் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் தொடர்ந்து நன்றாக உடற்பயிற்சி செய்து வரும்போது, சில நாள்கள் கழித்துப் பார்த்தால் அது 70-லிருந்து 65-ஆகக் குறைந்திருந்தால், அது  நல்ல முன்னேற்றத்தின் அறிகுறியாகும். ஓய்வு நிலை இதயத் துடிப்பு குறையக் குறைய, உங்களது இதயம் நல்ல ஆரோக்கியத்துடனும் பலத்துடனும் வலுப்பெறுகிறது (getting conditioned) என்பதைக் காட்டுகிறது.
 
உடற்பயிற்சியின் போது நீங்கள் எடுக்கும் ஓய்வு நேரமும் ஒரு முக்கிய அறிகுறி. ஆரம்பத்தில்  ஓர் உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் மூச்சு வாங்குவதால் 2 நிமிடங்கள் வரை ஓய்வு எடுத்திருக்கலாம்.ஆனால், போகப் போக அந்த ஓய்வு எடுக்கும் நேரம் குறைந்து, வெறும் 60 விநாடிகளே உங்களுக்குப் போதுமானதாக மாறினால், அதுவும் மிகச்சிறந்த முன்னேற்றத்தின் அறிகுறியாகும்.
 
எனவே, அதிக வியர்வை தான் சிறந்த உடற்பயிற்சி என்று நினைப்பதை விட, இந்த மாதிரியான சரியான அறிகுறிகளை (indicators) வைத்து உங்களின் உடற்பயிற்சியை அளவிடுவதே சிறந்த வழி.

ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ்:

சென்னை, ஆழ்வார்பேட்டையில் Creed strength and conditioning studio நடத்துகிறார். 14 ஆண்டுகளாக ஃபிட்னெஸ் கோச்சாக இருப்பவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.