திருச்சி ஆட்டோ மெக்கானிக் கொலை; மது போதையில் தம்பியே அண்ணனைக் கொலை செய்த கொடூரம்

திருச்சி மாநகரம், தென்னூர் வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் முஹம்மது பாரூக் (வயது: 32). இவர், ஆட்டோ மெக்கானிக்காகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு அசார் (வயது: 28) என்கிற சகோதரர் உள்ளார். அவர், மீன் கடையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று மாலை பாரூக், அசார் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களின் தாய் நிஷா வீட்டு வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டில் பாருக் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

அதைப் பார்த்து அவர் கதறி அழுதார். அவரின் அழுகைச் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவல் அடிப்படையில், தில்லை நகர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதோடு, திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அரவிந்த் பனாவத், தில்லை நகர் உதவி ஆணையர் விஜயகுமார் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

trichy

போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அண்ணன், தம்பி இருவருக்கும் போதைப் பழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக, அசார் கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனச் கூறப்படுகிறது. மது போதையில் இருவரும் அடிக்கடி சண்டை போடுவார்கள் எனவும், இருவரும் மது போதையில் இருந்த நிலையில் இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது எனவும் அதில், அசார் வீட்டில் இருந்த கத்தியால் பாருக்கின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் எனப் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து, அசாரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.