``நிலவேம்பு, பப்பாளி பயன்பாடு: கட்டுக்குள் டெங்கு; பரவும் உண்ணிக் காய்ச்சல் - அருண்ராஜ் தகவல்!

தமிழ்நாடு முழுவதும் டெங்கு, உன்னிக் காய்ச்சல், ஃபுளூ காய்ச்சல் போன்றவை பரவி வருகிறது. தமிழ்நாடு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் 8-வது மாநில மாநாடு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``புதிய செவிலியர் கல்லூரிகளுக்கான செவிலியர் ஆசிரியர் (Tutor) பணியிடங்களை நிரப்புவது குறித்து நிலவும் கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன.

பி.எஸ்.சி. நர்சிங் மற்றும் எம்.எஸ்.சி. நர்சிங் முடித்து அரசு மருத்துவமனைகளில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களைச் செவிலியர் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. தகுதியின் அடிப்படையில் அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். நிலவேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலை சாறு அருந்துவதால் ரத்தத் தட்டணுக்கள் (Platelets) அதிகரிக்கும் என்ற கருத்து உள்ளது. இது குறித்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களை சுகாதாரத்துறைச் செயலாளர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநரிடம் கேட்டுள்ளோம்.

விரைவிலேயே இது குறித்து மக்கள் பயன்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மாநிலத்தில் டெங்கு பாதிப்பு முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. 2023-ல் 56,863 நபர்களுக்கும், 2024-ல் 46,971 நபர்களுக்கும், 2025-ல் 25,585 நபர்களுக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் இதுநாள் வரை (செப்டம்பர் 19 வரை) 17,490 பேருக்கு மட்டுமே டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு அலட்சியமாக இல்லாமல், கொசு ஒழிப்புப் பணியாளர்களைக் கொண்டு வீடு வீடாகச் சென்று தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

டெங்கு

அரசு மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மருத்துவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகள் இல்லாத நிலையை உருவாக்க அரசு உறுதியாக உள்ளது. டெங்கு பரவலைத் தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை, மாநகராட்சி, நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. முதலமைச்சர் அவர்களும் இது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். கொசு உற்பத்தியைத் தடுக்கப் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். வீட்டின் அருகில் உள்ள காலி மனைகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுமக்களும் தங்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளில் தொய்வு இருப்பதாகக் கூறப்படும் இடங்களில், மாநகராட்சி ஆணையர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் பேசி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். மேலும், கொசு விரட்டிகளின் பயன்பாடு மற்றும் செயல்திறன் குறித்த ஆய்வு சட்டப்பேரவை அறிவிப்பின்படி அக்டோபர் இரண்டாம் வாரத்தில் தொடங்கப்படும். இந்த ஆய்வின் முடிவுகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் பொது சுகாதாரத் திட்டத்தின் கீழ் இது ஒரு புதிய முயற்சியாகச் செயல்படுத்தப்படும்.

காய்ச்சல்

அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தது டெங்குவினால் அல்ல, அது உண்ணிக் காய்ச்சல் எனப்படும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) பாதிப்பினால் ஏற்பட்டதாகும். இதற்கான அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, வாந்தி என டெங்குவைப் போன்றே இருக்கும். உண்ணிப் பூச்சி கடிக்கும் இடத்தில் ஒரு வடு (தழும்பு) காணப்படும். பூங்காக்கள் மற்றும் செடிகள் அதிகம் உள்ள இடங்களுக்குச் சென்று வந்த பிறகு, உடலில் வடுவுடன் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ அணுகுமுறை பெற வேண்டும்.

மாநிலத்தில் கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 19 வரை 5,142 ஸ்க்ரப் டைபஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், இந்த ஆண்டு இதே காலகட்டம் வரை 4,619 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது சுகாதாரத்துறை சார்பில் விரைவில் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிடப்படும். மாலையில் வெளியில் செல்லும் போது கைகால்களை முழுமையாக மூடும் ஆடைகளை அணிவதும், கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவதும் நல்லது." என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.