Doctor Vikatan: ஊரெங்கும் பரவும் டெங்கு காய்ச்சல்... தடுப்பு மருந்தாக பப்பாளிச்சாறு குடிக்கலாமா?

Doctor Vikatan: டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு பப்பாளி இலைச்சாறும் நிலவேம்புக் கஷாயமும் கொடுக்கச் சொல்கிறார்கள். நிலவேம்புக் குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு எந்த அளவுக்கு டெங்கு சிகிச்சைக்கு பலன் அளிக்கிறது... மருத்துவரீதியாக இதற்கான ஆதாரம் உள்ளதா... டெங்கு வருவதற்கு முன்பே இதைத் தடுப்பு மருந்தாக எடுத்துக்கொள்ளலாமா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் ஆடாதோடை மணப்பாகு (சிரப்) ஆகிய மூன்றையும் ஒரு கலவையாகக் (combination) கொடுக்கலாம். சித்த மருத்துவத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகளாகவே இக்கலவையைத் தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.

நிலவேம்புக் குடிநீருக்கு நிறையவே மருத்துவப் பயன்கள் உண்டு. அறிவியல்பூர்வமாகப் பார்த்தால், நிலவேம்புக் குடிநீரில் சேர்க்கப்படும் ஒவ்வொரு தனி மூலிகைக்கும் காய்ச்சலைக் குறைக்கும் சக்தி, வீக்கத்தைக் குறைக்கும் பண்பு (anti-inflammatory) மற்றும் வலி நிவாரணித் தன்மை ஆகியவை உள்ளன.

சித்த மருத்துவத்தின் முக்கிய சிறப்பம்சமாக சினர்ஜெடிக் எஃபெக்ட்  (synergistic effect) என்று ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். நிலவேம்புக் குடிநீருக்கு அது மிகவும் பொருந்தும். அதாவது தனித்தனி மூலிகைக்கு ஒரு பலன் இருந்தாலும், நிலவேம்பில் 9 மூலிகைகளும் ஒன்றாகச் சேரும்போது (குடிநீராக மாறும்போது) கூட்டுப் பலனாகச் செயல்படுவதையே இது குறிக்கிறது.

நிலவேம்புக் குடிநீரில் சேர்க்கப்படும் ஒவ்வொரு தனி மூலிகைக்கும் காய்ச்சலைக் குறைக்கும் சக்தி, வீக்கத்தைக் குறைக்கும் பண்பு (anti-inflammatory) மற்றும் வலி நிவாரணித் தன்மை ஆகியவை உள்ளன.

இது காய்ச்சலைக் குறைப்பதுடன், உடல் வலியைப் போக்குகிறது. வீக்கத்தைக் குறைக்கும் பண்பு உள்ளதால் சோர்வை நீக்கி, வியர்வைப் பெருக்கியாகவும் செயல்பட்டு உடனே வியர்வையை உண்டாக்குகிறது. பப்பாளி இலைச்சாறு ரத்தத் தட்டணுக்களின் (platelets) எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மையைக் கொண்டது. பல மருந்து நிறுவனங்கள் பப்பாளி இலைச்சாறில் உள்ள பப்பைன் (papain) என்ற பொருளை எடுத்து மருந்தாகத் தயாரித்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

நிலவேம்புக் குடிநீர் குறித்தும்  சித்த மருத்துவம் சார்ந்து பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. டெங்கு நோயின் ஒவ்வொரு பரவலின்போதும், அரசு மருத்துவமனைகள் மற்றும் கிராம சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவர்கள் மூலமாகவும், அரசு வழிகாட்டுதலின்படியும் தொடர்ந்து நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், டெங்கு காய்ச்சல் வந்துவிட்டதா இல்லையா என்று தெரியாமல், வீட்டிலேயே இருந்துகொண்டு அளவுக்கு அதிகமாக மருந்துகளைக் குடிக்கக் கூடாது. எந்த நோயாக இருந்தாலும்,  சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டே மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சல் வந்துவிட்டதா இல்லையா என்று தெரியாமல், வீட்டிலேயே இருந்துகொண்டு அளவுக்கு அதிகமாக மருந்துகளைக் குடிக்கக் கூடாது

சில நேரங்களில் நோயாளிக்கு மருத்துவமனை அனுமதி (hospitalization) தேவைப்படலாம். அப்போது ஒருங்கிணைந்த சிகிச்சையாக (integrated) இதையும் சேர்த்துத் தரும்போது விரைவாக குணமடைய முடியும்.

தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் காய்ச்சல் இருந்தால், தாராளமாக நிலவேம்புக் குடிநீர் குடிக்கலாம். அதேசமயம் மருத்துவமனைக்குச் சென்று ரத்தத் தட்டணுக்களின் அளவு குறைந்திருக்கிறதா என்பதைக் கண்காணிப்பது நல்லது.

ஆடாதோடை மணப்பாகு டெங்குவால் ஏற்படும் சில உபாதைகளைக் குறைக்க உதவுகிறது. கஷாயம் போன்ற திரவ மருந்துகள் (diluted medicines) விரைவில் உடலில் உறிஞ்சப்பட்டு (absorption) வேகமாகச் செயல்படும் என்பதால் நோயாளிகளுக்கு விரைவான நிவாரணம் கிடைக்கும்.

காய்ச்சலின் போது, மேற்குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வதுடன் கஞ்சி போன்ற  திரவ ஆகாரங்களை (fluids) நோயாளிகளுக்குத் தொடர்ந்து கொடுத்துவந்தால், உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடுசெய்ய முடியும்.

ஆடாதோடை மணப்பாகு டெங்குவால் ஏற்படும் சில உபாதைகளைக் குறைக்க உதவுகிறது.

பப்பாளி இலைச்சாறு நல்லது என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுக்காமல், சுமார் 10 முதல் 20 மில்லி  வரை மட்டுமே குடிக்க வேண்டும்.
உடலில் ஏற்கெனவே நீரிழப்பு இருக்கும்போது, பப்பாளி இலையின் கடும் கசப்பினால் வாந்தி ஏற்பட்டு மேலும் தொந்தரவாகிவிடக் கூடாது.

மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் குறைவாகக் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது நாட்டுச் சர்க்கரையோ பனங்கற்கண்டோ சேர்த்துக் கொள்ளலாம். இருப்பினும் கசப்பு முழுமையாகப் போகாது. வாந்தி வராமல் பார்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

டாக்டர் விக்ரம் குமார்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில் சித்த மருத்துவராகப் பணிபுரிபவர். சித்த மருத்துவத் துறையில் 16 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.