Apple: ஆப்பிள் நிறுவனத்தில் டிம் குக் செய்த சம்பவம்... 15 ஆண்டுகளில் 13 மடங்கு வளர்ச்சி!
‘ஆப்பிள்’ நிறுவனம் சமீபத்தில் Iphone 18 Pro, Iphone 18 Pro max மற்றும் The all new iPhone Duo Fold மொபைல்களை அறிமுகப்படுத்தி மொபைல் சந்தையையும், ஐபோன் பிரியர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இன்று முதல் உலகம் முழுவதும் இவை விற்பனைக்குக் கிடைக்கும் என்பதால் இணையத்திலும் ஆப்பிள் நிறுவனம் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
ஆப்பிள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஸ்டீவ் ஜாப்ஸ்தான். ஐபோன், ஐபாட், மேக்புக் எனப் புதுமையான தயாரிப்புகளால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸுக்குப் பிறகு ஆப்பிள் என்ன ஆகும் என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் இருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் காலத்திலேயே ஆப்பிள் நிறுவனம் லாபத்தை ஈட்ட பெரும் சிரமப்பட்டது எல்லோரும் அறிந்ததே. என்னதான் உலகம் வியக்கும் தயாரிப்புகள் ஆப்பிளிடம் இருந்தாலும் பெரும் நஷ்டத்திலிருந்த ஆப்பிள் திவால் ஆகும் நிலைக்கே சென்றது.
‘இனி ஆப்பிள் அவ்வளவுதான்...’ என்ற விமர்சனங்கள்தான் அப்போது அதிகம். அப்போதுதான் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, இவர்தான் சரி டிம் குக்கை ஆப்பிள் நிறுவனத்துக்குள் கொண்டுவந்தார்.
காம்பேக் நிறுவனத்திலிருந்து வந்த டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆனார். இவர் ஸ்டீவ் ஜாப்ஸைப் போல மேடையில் பேசி அசத்தும் ‘ஷோமேன்’ இல்லை. உலகம் வியக்கும் புதிய தயாரிப்புகளை உருவாக்கும் தொழில்நுட்ப மேதை என்ற இமேஜும் இவருக்கு இல்லை. ஆனால், இவர் இல்லையென்றால் இன்று ஆப்பிள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மூளைக்காரர்.
ஆரம்பத்தில் டிம் குக் மீது பலருக்கும் சந்தேகம் இருந்தது. ‘ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மேஜீஷியனுக்குப் பதிலாக, ஒரு ஆபரேஷன்ஸ் ஆளா?’ என்ற கேள்வியும் இருந்தது. ஆனால், ஆப்பிளின் வளர்ச்சியைத் தீர்மானித்தது ஜாப்ஸின் கவர்ச்சியான பேச்சு மட்டும் இல்லை; டிம் குக் கட்டமைத்த அந்த ‘போரிங்’ சிஸ்டம்தான். சப்ளை செயின், இன்வென்டரி, ஆபரேஷன்ஸ்... என எதிலெல்லாம் ஆப்பிள் நிறுவனம் திணறியதோ அவற்றிலெல்லாம் தன்னுடைய அசாத்திய திறமையைக் கொண்டு சாதித்துக்காட்டினார்.
ஆப்பிளின் மிகப்பெரிய பிரச்னை!
1990-களின் இறுதியில் ஆப்பிள் திவால் நிலையின் விளிம்பில் இருந்தது. ஆப்பிள் நிறுவனத்திடம் பல தயாரிப்புகள் அப்போது இருந்தன. அவற்றையெல்லாம் குறைத்து ஆப்பிள் நிறுவனத்துக்குத் தனித்துவமான அடையாளம் தயாரிப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றையெல்லாம் தூக்கி எறிந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனால், ஆப்பிள் நிறுவனத்துக்கு இருந்த சப்ளை செயின் பிரச்னை ஆப்பிளை நகரவிடவில்லை.

ஆப்பிளிடம் ஏராளமான சப்ளையர்கள். சொந்த தொழிற்சாலைகள். கிடங்குகளில் தேங்கிக் கிடக்கும் பொருள்கள். ஒரு பொருளைத் தயாரித்துவிட்டு அது விற்பதற்குள், அதன் மதிப்பு குறைந்துவிடும் நிலை என பல பிரச்னைகளை ஆப்பிள் சந்தித்துக்கொண்டிருந்தது. அதாவது, ஆப்பிள் தன் தயாரிப்புகளை விற்று பணம் சம்பாதிப்பதற்கு முன்பே, அந்தப் பொருளினால் நஷ்டத்தைச் சந்தித்துக்கொண்டிருந்தது.
இதைத்தான் டிம் குக் மாற்றினார். முதலில், ஆப்பிள் தனது சொந்த தொழிற்சாலைகளை நடத்துவதற்குப் பதிலாக, ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தியாளர்களிடம் உற்பத்தியை மாற்றினார். இதன் மூலம் விற்பனை குறைந்தால் தொழிற்சாலையை நடத்துவதற்கான செலவைச் சுமக்க வேண்டிய அவசியம் குறைந்தது. டிமாண்டுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய், தேவையில்லாமல் உற்பத்தி செய்து குவிக்காதே என்ற நிலைப்பாட்டுக்கு வந்தார்.
இரண்டாவது அதிரடியாக சப்ளையர்கள் எண்ணிக்கையைக் குறைத்தார். ஆப்பிளிடம் 100-க்கும் மேற்பட்ட சப்ளையர்கள் இருந்த நிலையில், டிம் குக் அவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தார். அதற்குக் காரணம், ஒரு நிறுவனத்திடம் சிறிய அளவில் வாங்கும் வாடிக்கையாளராக இருப்பதைவிட, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் மிகப்பெரிய அளவில் வாங்கும் வாடிக்கையாளராக இருந்தால், பேரம் பேசும் சக்தி அதிகரிக்கும் என்பதுதான்.

அதுமட்டுமல்லாமல், நமக்கு தேவைப்படும் முக்கியமான பொருள் சரியான நேரத்தில் கிடைப்பது, உற்பத்திக்கு முன்னுரிமை கிடைப்பது ஆகியவையும் நமக்கு சாதகமாக இருக்கும்.
மூன்றாவது அதிரடியாக ஆப்பிள் நிறுவனத்தின் இன்வென்டரியை குறைத்தார். 1997-ல் ஆப்பிளின் இன்வென்டரி சுமார் 31 நாளுக்குத் தேவையான அளவில் இருந்தது. டிம் குக் வந்த சில ஆண்டுகளில் அதை வெறும் சில நாள்களாகக் குறைத்தார். அதாவது, கிடங்கில் பணத்தைப் போட்டு வைத்திருப்பதற்குப் பதிலாக, அந்தப் பணத்தை நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் நிலையை உருவாக்கினார்.
இதன் விளைவு? ஆப்பிளின் பணச் சுழற்சி வேகமெடுத்தது. பணம் வேகமாகத் திரும்பி வந்தால், அதே பணத்தை மீண்டும் மீண்டும் தொழிலில் பயன்படுத்த முடியும். அதனால் அதிகமான லாபத்தையும் பெற முடியும்.

ஒரு பக்கம் ஸ்டீவ் ஜாப்ஸ், ‘மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கும் பொருளை எப்படி உருவாக்குவது?’ என்பதில் கவனம் செலுத்தினார். இன்னொரு பக்கம் டிம் குக், ‘அந்தப் பொருளை எவ்வளவு திறமையாகவும் குறைந்த மூலதனத்திலும் தயாரித்து உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பது?’ என்பதில் கவனம் செலுத்தினார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளின் மதிப்பை உயர்த்தினார். டிம் குக் ஆப்பிளின் ஒட்டுமொத்த வொர்க்கிங் சிஸ்டத்தை வலுப்படுத்தினார். அதனால்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவுக்குப் பிறகும் ஆப்பிள் கொடிகட்டிப் பறக்கிறது. இன்று, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக மேலும் வளர்ந்திருக்கிறது.
ஒரு தொழிலில் வெற்றி பெறுவதற்கு எப்போதும் ‘புதுமையான ஐடியா’ மட்டுமே போதாது. அந்த ஐடியாவைத் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தும் சிஸ்டம் வேண்டும். வாடிக்கையாளர்களைக் கவரும் தயாரிப்பை உருவாக்குவது ஒரு திறமை. அதை சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான செலவில் தயாரித்து, உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பது இன்னொரு மிகப்பெரிய திறமை. ஸ்டீவ் ஜாப்ஸுக்கு மிகப்பெரிய கனவு இருந்தது. டிம் குக் அந்தக் கனவுக்கு இறக்கை பூட்டி பறக்க வைத்தார்.

கடந்த 15 ஆண்டு காலத்தில் டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பை சுமார் 13 மடங்கு உயர்த்தி உள்ளார். அதாவது 350 பில்லியன் டாலரிலிருந்து 4.5 டிரில்லியன் டாலராக உயர்த்தி உள்ளார்.
இப்போது ஆப்பிளின் புதிய சி.இ.ஓ-வாக ஜான் டெர்னஸ் பதவி ஏற்றிருக்கிறார். இவர் 2001-ல் ஆப்பிளின் டிசைன் டீமில் சேர்ந்தவர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்பிள் நிறுவனத்தில் பயணிப்பவர். ஸ்டீவ் ஜாப்ஸ், டிம் குக் ஆகியோரின் வழியில் ஜான் டெர்னஸ் எப்படி செயலாற்றுவார் இவர் தலைமையில் ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஒட்டுமொத்த டெக்னாலஜி உலகமுமே காத்திருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
.jpeg?resize=390%2C205)
