Sigma: அப்பா விஜய் இந்தப் படத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது ஏன்? - ஜேசன் சஞ்சய் பதில்

லைகா தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக உருவான இதில், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அக். 2-ம் தேதி இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி தொடர்ந்து பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது.

Jason Sanjay

ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய், ``இயக்குநராக இது என்னுடைய முதல் திரைப்படம். அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படத்திற்கான அடுத்தடுத்த விளம்பர நிகழ்ச்சிகளில் உங்களை மீண்டும் சந்திப்பேன்.

திரைப்படத்தைப் பற்றி அதிக விஷயங்களை இப்போது வெளிப்படுத்த விரும்பவில்லை என்றாலும், இதில் ஹைஸ்ட் (Heist), சாகசம், புதையல் வேட்டை (Treasure Hunt) போன்ற சுவாரசியமான விஷ்யங்கள் நிறைய இருக்கின்றன.

அதே சமயம், ஒரு ஜாலியான திரைப்படமாகவும் இருக்கும். நடிகர் சுந்தீப் கிஷன் நடித்த மைக்கேல் திரைப்படத்தைப் பார்த்த பிறகே, அவரை என்னுடைய கதையின் நாயகனாக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

நான் கல்லூரியில் திரைக்கதை மற்றும் இயக்கம் பயின்றதால், படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைத்துத் துறையினருடனும் இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் குடும்பத்தினரின் ஆதரவு எனக்கு முழுமையாக இருந்தாலும், இந்தத் திரைப்படத்தின் மூலம் என்னை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு முற்றிலும் என்னுடையதே.

என்னுடைய தந்தை ஒரு முதலமைச்சராகப் பல பொறுப்புகளைச் சுமந்து கொண்டிருப்பதால், படத்தின் விளம்பர நிகழ்வுகளில் அவர் பங்கேற்க மாட்டார். மேலும், இந்தப் படத்தின் கவனம் முழுவதும் திரைப்படத்தின் மீதே இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

Jason Sanjay
Jason Sanjay

அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான குணம் Punctuality மற்றும் திட்டமிட்ட நாட்களுக்குள் படப்பிடிப்பை திறம்பட முடிக்கும் கலைதான். நான் சிறுவயதில் வேட்டைக்காரன் படத்தில் தோன்றியது ஒரு மறக்க முடியாத நினைவாக இருந்தாலும், குறும்படங்கள் பலவற்றை இயக்கிய அனுபவமே என்னை ஒரு முழுமையான இயக்குநராக மாற்ற உதவியது. இத்திரைப்படம் எந்தவொரு குறிப்பிட்ட சமூகக் கருத்தையும் போதிக்கவில்லை. மாறாக, தனக்கான அடையாளத்திற்காகப் போராடும் ஒரு நபரின் கதையை மையமாகக் கொண்டது.

திரையரங்கை விட்டு வெளியேறும் பார்வையாளர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையும் நம்பிக்கையும் கிடைக்க வேண்டும் என்பதே என் இலக்கு. காதல் சார்ந்த திரைப்படங்களை இயக்குவீர்களா என்று கேட்டால், என் சொந்த வாழ்க்கையிலேயே காதல் இல்லை, காதல் படம் எப்படி எடுப்பது. அதனால் அதைப் பற்றி இப்போது சொல்ல முடியாது. ஒரு சர்வதேச மொழியாக சினிமா அனைத்து எல்லைகளையும் கடந்து அனைத்து மொழி மக்களையும் சென்றடையும் என்ற நம்பிக்கையில் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளேன். அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் சந்திப்போம்!" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.