முதல்வர் விஜய் vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி : `ஹீரோ - வில்லன் ஆட்டம் ஆடும் இடமா சட்டமன்றம்?

சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் 28 நாட்களாக நடந்து முடிந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக 170 மணி நேரத்துக்கு அவை நிகழ்வுகள் நடந்திருக்கிறது. இதில், அவையின் மையமாக இருந்த முதல்வர் விஜய் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இருவரின் செயல்பாடுமே பெரும் கவலையளிக்கக் கூடியதாகவே இருந்தது. அரசியல் நேர்மையும் அவைக்கு தேவையான உழைப்பும் எங்கே என்கிற கேள்வியை இருவரும் எழுப்ப வைக்கின்றனர்.

CM Vijay

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் உட்பட தவெக அமைச்சர்களுமே தேர்தல் நேர மனநிலையிலேயே அவையை அணுகியிருந்தனர் அல்லது தேர்தலுக்கு கையாண்ட யுக்திகளை கைவிட மனமில்லாமல் அதையே பற்றிக் கொண்டுதான் ஒவ்வொரு நாளையும் ஓட்டியிருந்தனர். தேர்தல் பிரசாரத்தின் போது எல்லா தலைவர்களும் காலை, மாலை என அட்டவணை போட்டு பரபரக்க பேசிக்கொண்டிருக்க விஜய் மட்டும் ஜாலியாக வாரத்துக்கு ஒரு முறை பிரசாரக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார்.

சில கூட்டங்களில் பேசக் கூட மாட்டார். ஏனெனில், விஜய்க்கு அவர் மீதான திரை பிம்பமும் அதுசார்ந்த ஈர்ப்பும்தான் பெரும்பலம். அதை தக்கவைக்க பெரும்பாலும் பொதுவிலிருந்து தள்ளியே இருக்க வேண்டும். மக்களோடு மக்களாக கலக்கவே கூடாது. அதனால் தேர்தலின் போதுமே மிக சொற்பமாகத்தான் விஜய் பேசியிருந்தார். சட்டமன்றத்திலும் அதே பாணியைத்தான் கையாள்கிறார். முதல்வரை நோக்கிய எந்த கேள்விகளுக்கும் முதல்வராக விஜய் பதில் சொல்லவே இல்லை. கைக்கட்டியபடி அமைதியாக அமர்ந்திருப்பார்.

CM Vijay
CM Vijay

அமைச்சர்கள்தான் வரிந்துகட்டிக் கொண்டு முதல்வருக்காக பேசிக் கொண்டிருந்தனர். இந்த இடத்தில் முதல்வர் எழுந்தரித்து பதில் சொன்னால் நன்றாக இருக்குமே மக்கள் நினைத்த இடங்களில் கூட முதல்வர் எழுந்தரிக்கவே இல்லை. பேசாமல் அமைதியாக இருந்து இருந்து கடைசியாக நிகழவிருக்கும் தன்னுடை பதிலுரைக்கு ஒரு சினிமாவுக்கு ஒத்த எதிர்பார்ப்பை, அதாவது தேர்தல் நேரத்தில் அவரின் பிரசார கூட்டங்களுக்கு உருவாக்கிய எதிர்பார்ப்பை போன்று ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டார். கடைசியாக, பதிலுரையில் அப்படியே அப்பட்டமான சினிமா பாணியில் தேர்தல் பிரசார மனநிலையிலேயே ஒரு உரையை நிகழ்த்தியிருந்தார்.

உரையின் உள்ளடக்கத்தையும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டும். முதல்வர் விஜய் பேசும்போதெல்லாம் ஊழல், லஞ்சமற்ற நேர்மையாளர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனால், நேர்மை என்பது ஊழல் லஞ்சம் சார்ந்தது மட்டுமல்ல. அரசியல் நேர்மையும் பேசும் பேசுக்கு உண்மையாக இருக்கும் கருத்தியல் நேர்மையும் கூட முக்கியமானதுதான்.

திமுக எதிர்ப்பு என்கிற ஒரே யுக்தியை மட்டும்தான் விஜய் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தினார். அதிமுகவை பற்றி அவர் பேசவே இல்லை. அது தேர்தல் யுக்தி. ஆனால், அதே பார்முலாவை விஜய் சட்டமன்றத்துக்கும் கொண்டு வருகிறார். முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறையின் மானியக் கோரிக்கை மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மட்டும் கேள்விகளை அடுக்கவில்லை.

CM Vijay
CM Vijay

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால், முதல்வரின் பதிலுரையில் ஒரு இடத்திலும் எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு பதிலே இல்லை. முழுக்க முழுக்க திமுகவை நோக்கியதாக மட்டுமே முதல்வரின் பேச்சு இருந்தது. கடந்த 50 ஆண்டுகளில் ஊழல் மலிந்துவிட்டது. தமிழகம் சீரழிந்துவிட்டது என்பது முதல்வர் விஜய்யின் வாதம். கடந்த 50 ஆண்டுகளில் திமுகவை விட அதிமுகதான் தமிழகத்தை அதிக ஆண்டுகளுக்கு ஆட்சி செய்திருக்கிறது. அப்படியிருக்க அதிமுகவை பற்றி எதையும் பேசாமல் திமுகவை நோக்கி மட்டுமே குண்டுகளை பாய்ச்சுவது எப்படி அரசியல் நேர்மையாக இருக்க முடியும்?

திமுக-வை விமர்சிக்க சர்க்காரியா கமிஷன் வரை எடுத்துப் பேசிய முதல்வருக்கு சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து தவெகவுக்கு தாவிய விஜயபாஸ்கர்கள் மீது இருக்கும் வழக்குகள் பற்றி தெரியவே தெரியாதா? தேர்தல் சமயத்தில் திமுக எதிர்ப்பை கூர்ப்படுத்தி தவெகவை புதிய அதிமுகவாகவும் தன்னை இன்றைய எம்.ஜி.ஆராகவும் காட்டிக் கொள்ள விஜய் முயன்றார். அந்த யுக்தி தவெகவுக்கு கைகொடுக்கவும் செய்தது. அதற்காக தவெக முகாம் சட்டமன்றத்துக்குள்ளும் அதே யுக்தியை கேடயமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அமைச்சர்கள் எழுந்தரித்து நடப்பதே அம்மா ஆட்சிதான் என்கின்றனர். விஜய்யை அப்படியே எம்.ஜி.ஆர் இடத்தில் பொருத்தி துதிபாடுகின்றனர். விஜய்யும் தேர்தல் நேரத்தை போலவே அதிமுகவை கண்டே கொள்ளாமல் திமுகவை அடித்து ஆடுகிறார். இது அவரவர் கட்சி சார்ந்த யுக்தியாக கூட இருந்துவிட்டு போகட்டும். ஆனால், பதிலுரையில் தேர்தல் பாணியில் திமுக எதிர்ப்பை பேசியளவுக்கு எதிர்க்கட்சிகளின் எந்த கேள்விக்கும் முதல்வர் விளக்கமாக பதிலளித்து பேசவில்லை.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

எதிர்க்கட்சிகளின் கேள்விகளும் சந்தேகங்களும் அவர்களுடையது மட்டுமல்ல. மக்களிடம் இருக்கும் கேள்விகளைத்தான் எதிர்க்கட்சிகள் அவையில் பிரதிபலிக்கின்றனர். அதற்கு உரிய பதிலை கொடுப்பதுதான் ஒரு முதல்வரின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால், முதல்வரின் பதிலுரையில் திமுக எதிர்ப்பு என்கிற அரசியலும் தன்னுடைய தொண்டர்களுக்கு தேவைப்படும் கிளர்ச்சியூட்டும் வசனங்களும் தேவையற்ற மேனரிசங்களும் மட்டுமே நிரம்பியிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தன்னுடைய பதவிக்கான பொறுப்பை உணர வேண்டும். 28 நாட்களுக்கு 170 மணி நேரத்துக்கு அவை நடந்திருக்கிறது. இதில் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி நான்கில் ஒரு பங்கு நேரத்துக்கு கூட அவையில் இருந்திருக்கமாட்டார். ஆரோக்கியமான விவாதங்கள் பலவற்றின் போதும் உதயநிதி ஆப்சண்ட்தான்.

அவைக்கு வந்த நாட்களிலும் காலை 9:30 - 10:00 மணிவாக்கில் வந்துவிட்டு 12 மணிக்கு தன்னுடைய அறைக்கு வந்துவிடுவார். கொஞ்ச நேரத்தில் தலைமைச் செயலகத்தை விட்டே கிளம்பிவிடுவார். கடைசி நாளில் திமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட போது உதயநிதி அவைக்கே வரவில்லை. பரந்தூர் ஏர்ப்போர்ட் திட்டம் ரத்து செய்யப்பட்ட போது திமுக வெளிநடப்பு செய்கையில் அவையில் உதயநிதி இல்லை. மறுநாள் கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கு அவையில் பரந்தூர் பற்றி விவாதம் நடந்திருந்தது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என்னுடைய மேடையில் மூன்று பைல்கள் இருக்கிறது என திமுகவினரை நோக்கி முதல்வர் தாக்கியபோது, அதற்கு உடனடியாக எழுந்தரித்து பதில் சொல்ல எதிர்க்கேள்வி கேட்க அவையில் உதயநிதி இல்லை. இரண்டு நாட்கள் கழித்து வந்துதான் அதற்கு பதில் கொடுக்கிறார்.

எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கப்போவதாக முதல்வர் விஜய் அறிவித்ததை பெரும்பாலான மக்கள் ரசிக்கவில்லை. விஜய் அந்த அறிவிப்பை வெளியிட்ட போது அவையில் உதயநிதி இல்லை. எதிர்க்கட்சித் தலைவராக நியாயமாக கேள்விகளை எழுப்ப வேண்டிய போது ஸ்கோர் செய்ய வேண்டிய போது அதையெல்லாம் உதயநிதி தவறவே விட்டிருக்கிறார். எப்படிணே 7 மணி வரைக்கும் அவையில இருக்கீங்க? என உதயநிதி எ.வ.வேலுவிடம் நகைச்சுவையாக கேட்டாராம்.

சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே இத்தனை சலிப்பான கேள்வியை ஒரு எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து கேட்பது ஜனநாயகத்துக்கே உகந்தது அல்ல. அவையில் உதயநிதி அதிக நேரம் இருக்க முடியாதபடிக்கு எதுவும் தடை இருந்ததா? அவரின் கருத்துகளை பகிர முடியாதபடிக்கு குரல்வளை நெரிக்கப்பட்டதா? அப்படி எதுவும் இல்லை. சபாநாயகர் நேர்மையாக செயல்படுகிறார் என உதயநிதியே பாராட்டு பத்திரம் வாசித்திருக்கிறார். முதல்வரின் பதிலுரையின் போது நடந்த சம்பவத்தை தவிர மற்ற எல்லா நேரங்களிலும் சபாநாயகர் திமுகவினருக்கு உரிய நேரத்தை பேச வழங்கியிருக்கிறார்.

சொல்லப்போனால், இந்த 170 மணி நேரத்தில் அதிக நேரம் பேசியது திமுகவினர்தான். எனில், எதிர்க்கட்சித் தலைவரை அவை நிகழ்வுகளில் ஆர்வமாக கலந்துகொள்ள விடாமல் எது தடுத்தது? விஜய் ஆட நினைக்கும் அதே ஹீரோ - வில்லன் ஆட்டத்தைதான் உதயநிதியும் ஆட நினைக்கிறார். முதல்வரின் மானியக் கோரிக்கை அன்று மட்டும் அவைக்கு சரியாக வந்து 2 மணி நேரம் விவாதம் நீளும் வகையில் பேசினார். அன்று உதயநிதி காட்டிய ஆர்வத்தை வேறெந்த நாளிலும் அவையில் காட்டவில்லை.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இதுதான் பிரச்னை.

முதல்வர் விஜய் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இருவருமே சட்டமன்றத்தையும் ஒரு பொதுக்கூட்ட மேடையாக பார்க்கின்றனர். இங்கே ஒரு திரைப்பட பாணியிலான ஹீரோ - வில்லன் ஆட்டத்தை ஆட நினைக்கின்றனர். விளைவு, பேசப்பட வேண்டிய மக்கள் பிரச்னைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு இருவருடைய மோதலுக்குமான களமாக சட்டமன்றம் மாறியிருக்கிறது.

இது ஜனநாயகத்துக்கு அழகல்ல.!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.