சாப்பாட்டுல உப்பை குறைங்க! - சட்டமன்றத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அருண்ராஜ்

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் உப்புக் குறைப்பு என ஒரு முக்கியமான திட்டத்தை அறிவித்திருந்தார்.

அமைச்சர் அருண்ராஜ்

அவர் பேசியதாவது,மக்களின் அன்றாட உணவில் உள்ள உப்பின் அளவை குறைக்க மாநில அளவில் ஒரு இயக்கத்தை தொடங்கவிருக்கிறோம். தமிழகத்தில் 1 கோடியே 50 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கு உப்பும் ஒரு காரணம்.

உலக சுகாதார நிறுவனம் ஒரு நபர் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பு உட்கொள்ள வேண்டும் என்கின்றனர். ஆனால், தமிழக மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 7-8 கிராம் உப்பை உட்கொள்கின்றனர். நாம் உட்கொள்ளும் உப்பில் 88% வீட்டு சமையல் மூலமே உட்கொள்ளப்படுகிறது. ஒரு கிராம் உப்பை உட்கொள்ளலை குறைத்தாலும் ஆரோக்கியம் மேம்படும். மாநில அளவில் சிறுநீர் மாதிரி கணக்கெடுப்பு எடுக்கப்படும்.

அமைச்சர் அருண்ராஜ்
அமைச்சர் அருண்ராஜ்

அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சமையலறைகளில் சுவையில் மாறுபாடு தெரியாமல் உப்பு குறைக்கப்படும்.

சோடியம் குறைவான மாற்று உப்பை மக்களுக்கு கிடைக்கச் செய்ய முன்மாதிரியாக சில இடங்களில் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மாநிலம் தழுவிய விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்படும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சமூக நல பணியாளர்கள் மூலம் உப்புக் குறைப்புப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். உப்பு நாட்டு விடுதலைக்காக மகாத்மா காந்தி கையிலெடுத்த ஆயுதம். இப்போது உப்புக் குறைப்பு மக்கள் நலனுக்காக நாம் எடுக்கும் ஆயுதம் என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.