மனமகிழ் மன்றம்; குளிர்சாதனப் பெட்டி ஏன் வாங்கப்பட்டது? - தூள் பறந்த விவாதம் | மேட்டூர் அணை ஓசை 34
1927-ம் ஆண்டில் மேட்டூர் அணை கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில், நிர்வாகத் தலைமையகத்திற்கு அருகில் புதிய “மனமகிழ் மன்றம்” (CLUB) ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டது. அதே சமயம், இன்னும் கட்டப்படாத மருத்துவமனைக்காக “குளிர்சாதனப் பெட்டி” ரூ.4840 செலவில் கொள்முதல் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த இரண்டு விஷயங்கள் குறித்து ஆட்சேபித்து, மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் பலரும் கேள்வி எழுப்பினர்.
முக்கியக் கேள்விகள்:-
1. கிளப் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?
2. மருத்துவமனை இன்னமும்கூட தொடங்காத நிலையில் குளிர்சாதனப் பெட்டி ஏன் வாங்கப்பட்டது?
3. இது மருத்துவமனைக்காகவா, இல்லையெனில் கிளப்புக்காகவா?
4. பொது பணத்தின் செலவினத்தில் வெளிப்படைத்தன்மை உள்ளதா?
விவாதம் இப்படி இருந்தது:
எத்திராஜுலு நாயுடு:- "மேட்டூரில் கிளப் அமைப்பதற்கு என்ன தேவை உள்ளது?”
C. P. R: அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள், ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியர்கள் கூடும் இடமாக இருப்பதால், அங்கு வேறு எந்த பொழுதுபோக்கு வசதிகள் இல்லாததால் அவர்களின் பொழுதுபோக்கிற்காக சந்திக்கும் இடமாக இது இருக்கும்".
"பொதுப் பணத்தில் இருந்தா"
"அப்போதுகூட ஒரு குறிப்பிட்ட இடத்தில் 150 அல்லது 200க்கும் மேற்பட்டவர்கள் கூடும் போது இது போன்ற விஷயங்களில் அவர்கள் சந்திப்பதற்கு ஏதேனும் ஒரு பொதுவான இடம் இருக்க வேண்டும் என்று உறுதியாக பரிந்துரைக்கிறேன்".
"இந்த மெட்ராஸ் மாகாணத்தில் எத்தனை மருத்துவமனைகளில் இது போன்ற குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன?”
“சுகாதாரத்துறை அமைச்சர் இதற்கு பதிலளிக்க முடியும்”
"இந்த கிளப் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு இன வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்றும் ஐரோப்பிய மற்றும் இந்திய அதிகாரிகள் உறுப்பினர்களாக இருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஏதேனும் குறிப்பிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதா?"
"அப்படித்தான் என நம்புகிறேன்!"
"ஐயா, அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பு அரசால் ஏதேனும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதா?"
"நோட்டீஸ் தரவும், ஐயா பதிலளிக்கிறேன்".
திரு. ரத்தின சபாபதி முதலியார்: "இந்த கிளப் கட்டடத்தின் விலை குறித்து மேட்டூர் திட்ட மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதா?"
C. P. R: "அதில் இருக்கும், ஐயா!"
"முன்பு கூறிய மருத்துவமனை எப்போது கட்டப்படும்?"
"ஏற்கனவே ஒரு மருந்தகம் உள்ளது, இன்னும் மருத்துவமனை தொடங்கப்படவில்லை".
சத்தியமூர்த்தி: "மருத்துவமனை தயாராவதற்கு முன்னர் குளிர்சாதன பெட்டியை ஏன் வாங்க வேண்டும்? மாண்புமிகு “சட்ட உறுப்பினரின்” கட்டுப்பாட்டில் உள்ள துறைகளின் நடைமுறையா இது? இந்தக் கேள்விகளை சட்ட உறுப்பினர் மிகவும் லேசாக எடுத்துக் கொண்டாரா? பொதுப் பணத்தை செலவு செய்யும் முறையா இது?”
C. P. R: "இது ஏற்கனவே தெளிவாக குறிப்பிட்டபடி தலைமைச் செயலாளரால் இது வாங்கப்பட்டது. ஏன், எப்படி என்பது அரசின் பரிசீலனைக்கு உட்பட்டது.”
சத்தியமூர்த்தி: "இந்த விவகாரத்தில் தலைமை பொறியாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதா? விளக்கம் எப்போது பெறப்படும்? சட்ட உறுப்பினர் இந்த அவையில் அவ்விளக்கத்தை சமர்ப்பிப்பாரா?"
"நோட்டீஸ் தரவும், ஐயா. அதன் பிறகே கூற இயலும்"
"இந்த குளிர்சாதனப் பெட்டி மருத்துவமனையின் பிரத்தியேக பயன்பாட்டிற்காக பெறப்படுகிறதா? அல்லது கிளப்பின் பயன்பாட்டுக்கும் சேர்த்தா?"
"இது கிளப்பின் நலனுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது.”
"மருத்துவமனை உபகரணங்களின் மொத்த விலை என்ன?"
"நோட்டீஸ் தரவும்.”
"குளிர்சாதனப் பெட்டி இப்போது என்ன செய்கிறது என்பதை அறியலாமா? அது பழுதடைந்து உள்ளதா?"
"அது இப்போது என்ன செய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது அங்கே உள்ளது என்பதை உறுதிபட கூறுவேன்.”
உறுப்பினர்
C.V.V: "மதிப்பிற்குரிய சட்ட உறுப்பினர் வெளிப்படையாக எனக்குத் தெரியாது என்கிறார். இது போன்ற கேள்விகள் கேட்கும் போது தனது கைகளை நீட்டி தெரியாது என்று சொல்ல வேண்டுமா? அவர் தன் கடமைகளை செய்ய ஊதியம் பெறுகிறார்.
இது குறித்து தெரிந்தும் எனக்குத் தெரியாது என்று கூறுகிறார். முன்னதாகவே, 1927 ஜூலை மாதம் 23ஆம் தேதி இந்த கேள்வி கேட்கப்பட்டது. இன்னும் தொடங்காத மருத்துவமனைக்கு வாங்கிய குளிர்சாதனப் பெட்டி குறித்து எதுவும் தெரியாது என்றும் அதன் மூலம் மருத்துவமனைக்கு ஐஸ்கட்டிகள் எதற்காக தயாரிக்க வேண்டும் என்று தெரியாதெனவும், பொது ஊழியராக பொதுப் பணிக்கான பொறுப்பாளராக எப்படி கூறுகிறார்?"
C. P. R: "என் நண்பர் எனது குறைகளை பெரிதுபடுத்தி கூறி கோபமடைகிறார். நான் கூற விரும்புவது ஒன்றுதான். ஒரு குளிர்சாதனப்பெட்டி வாங்கப்பட்டுள்ளது என்பதை அறிவேன். அது அங்கு உள்ளது. அது அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நான் அறியேன். எனவே, அழைக்கப்படாத தகவல்களை பெறாததற்கு என்னிடம் எந்த குறையும் காண முடியாது.”
சத்தியமூர்த்தி: "இன்னமும் கட்டப்படாத மருத்துவமனைக்கு ஐஸ் தயாரிக்க வாங்கப்பட்ட குளிர்சாதன பெட்டி என்பது குறித்து அறிந்துள்ள சட்ட உறுப்பினர், இதுவரை ஏன் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.”
C. P. R: "இது குறித்து தலைமை பொறியாளரிடம் விசாரிக்கப்பட்டது. அவரிடமிருந்து தகவலுக்காக காத்திருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் என் மீது குற்றம் சுமத்துவது நியாயமாகாது என நினைக்கிறேன்.”
"எந்த தேதியில் தலைமை பொறியாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது?”
"மூன்று வாரங்களுக்கு முன்பு"
"குளிர்சாதன பெட்டி எதற்காக வாங்கப்பட்டது என்பது குறித்த பதிலை அனுப்ப தலைமைப் பொறியாளர் ஏன் மூன்று வார கால அவகாசம் எடுத்துக் கொண்டிருக்கிறார்?"
"உண்மைகளை அறிந்து கொள்வதற்கு முன்பு கருத்துக்களை வெளியிடுவதில் அர்த்தமில்லை. தலைமைப் பொறியாளர் தனது விளக்கத்தை அனுப்பி உள்ளதாக அறிகிறோம். அரசு அது குறித்து இன்னமும் கையாளவில்லை.”
"விளக்கம் என்னவென்று நான் அறியலாமா?"
"இல்லை அது முடியாது".
இல்லை என்பதன் பொருள் என்ன? மாண்புமிகு உறுப்பினர் விளக்கத்தைப் பெற்றாரா இல்லையா?"
"அவர் விளக்கத்தை அனுப்பிவிட்டார் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அது குறித்த கருத்துக்கள் கூறப்படுவதற்கு முன்பு நான் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது.”
C. V. V: "இது குறித்து ஏற்கனவே நான் குறிப்பிட்டதை மாண்புமிகு சட்ட உறுப்பினர் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லையா?"
C. P. R: "அது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இருப்பினும் இது மிகவும் துரதிர்ஷ்டவசமான விவகாரம். நான் இது குறித்து கூறிக் கொள்ள விரும்புவது, அரசு இது குறித்து சிறப்பு கவனம் செலுத்தும்.”
C. V. V: "என்னுடைய கவன ஈர்ப்பு விஷயம் குறித்து தலைமை பொறியாளருக்கு தகவல் சென்றுள்ளதா?"
C. P. R: ”இந்த மேட்டூர் திட்டம் குறித்த விவாதங்களை தலைமைப் பொறியாளர் போதுமான அளவுக்கு ஆர்வம் கொண்டு கவனித்து வருகிறார். இந்த குளிர்சாதன பெட்டி கொள்முதல் செய்து, தற்போது பழுதடைந்த நிலையில் இருப்பது குறித்து தலைமைப் பொறியாளரின் கவனத்திற்கு தற்போதும் கொண்டு செல்லப்படும்.”
ஹரி சர்வோத்தம் ராவ்: "அதிகாரிகளின் ஓய்வு மற்றும் புத்துணர்ச்சி பெறுவதற்கு ஆரம்பிக்கப்பட்டதாக “சட்ட உறுப்பினர்” கூறுகிறார். இந்த வேலையில் பணியமர்த்தப்படும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களின் பொழுதுபோக்கிற்கு ஏதேனும் யோசனை உள்ளதா? என அறிய விரும்புகிறேன்.”
C. P. R: "அந்த விஷயம் குறித்தும் பரிசீலிக்கப்படும்.”
"இந்த கிளப் கட்டடம் புதிதாக கட்டப்பட்டதா?"
"இது இன்னமும் கட்டப்படவில்லை, ஐயா!"
"இந்த குளிர்சாதன பெட்டி கிளப்பிற்காக கொள்முதல் செய்யப்பட்டதா?"
"இந்த கிளப் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை"
"இதுவரை கட்டப்படாத மருத்துவமனைக்கு குளிர்சாதன பெட்டி எப்படி வாங்கப்பட்டது? இதுதான் எனது கவலை.”

C.P.R: "அந்தக் கவலை குறித்து நான் ஏற்கனவே அறிவித்தபடி அது குறித்து விசாரிப்போம்.”
C. S. ரத்தின சபாபதி முதலியார்: "மாண்புமிகு சட்ட உறுப்பினரின் தகவலின் படி, மருத்துவமனையோ அல்லது கிளப் இவை இரண்டும் இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்குள் எப்படி கொள்முதல் செய்யப்பட்ட குளிர்சாதனப்பெட்டி பழுதடைந்தது?”
C. P. R: "கோயம்புத்தூரைச் சேர்ந்த உறுப்பினர் மற்றொரு கோயம்புத்தூரைச் சேர்ந்த உறுப்பினரின் தகவல் பெற்று இதைக் கேட்கிறார். அது குறித்து விசாரிக்கப்படும். மற்றொரு மாண்புமிகு உறுப்பினரால் வழங்கப்பட்ட தகவலின் பேரில் வேறு உறுப்பினர் எழுப்பும் அனுமான கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாது.”
P. பக்தவச்சல நாயுடு: "அரசாங்கத்தின் அனுமதியோ அல்லது முன்னறிவிப்பின்றி இயந்திரங்களை வாங்குவதற்கு தலைமைப் பொறியாளருக்கு அதிகாரம் உள்ளதா என்பதை சட்ட உறுப்பினர் தெரிவிக்க வேண்டும்".
C. P. R: "அவருக்கு அந்த அதிகாரம் உள்ளது".
சர்ச்சைக்குரிய இந்த கொள்முதல் குறித்த விவாதம் இத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த விவாதம் மிகுந்த சுவாரசியமான ஒன்று! ஏனெனில், பிரிட்டிஷ் அதிகாரிகள் குளிர்சாதனப் பெட்டியை எதற்காக வாங்கி இருப்பார்கள் என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடியும். ஆனால், முன்னமே வாங்கியது, ஒப்புதலின்றி வாங்கியது, இந்திய கலாசாரத்துக்கு எதிரான போக்காக மனமகிழ் மன்றம் நிறுவியது போன்ற செயல்களை மன்ற உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
காலப்போக்கில் இந்த மனமகிழ் மன்றம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மேட்டூரில் உள்ள அரசு ஊழியர்களும் நகர முக்கிய பிரமுகர்களும் உறுப்பினர்களாக ஆகும் அளவுக்கு வளர்ச்சி கண்டு மாற்றம் அடைந்தது.
ஒரு சமயத்தில் மேட்டூர் நகரத்தின் முக்கிய விளையாட்டு மன்றமாக திகழ்ந்தது. 3 டென்னிஸ் கோர்ட், டேபிள் டென்னிஸ், கேரம், சிறகுப்பந்து, செஸ், பிரிட்ஜ் (BRIDGE) போன்ற பலவித விளையாட்டுக் கூடமாக புகழ் பெற்று விளங்கியது. 1995 வாக்கில் மனமகிழ் மன்ற கட்டடம், பெரிய இடமாக இருந்த மைதானம் போன்ற இந்த இடத்தின் ஒரு பகுதி அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கும், மற்றொரு பகுதி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்துக்கும் அன்றைய அரசால் பிரித்தளிக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கான கிளப் அப்போது தலைமை காரியாலயம் இருந்த வளாகத்திற்கு அருகில் மாற்றப்பட்டது.
காவிரி – மேட்டூர் திட்ட அமலாக்கத்தின் போது டெல்டா மாவட்டங்களின் சில இடங்களில், மேட்டூர் கால்வாய் ஓடும் பாதையில் உள்ள மிகப்பெரிய நிலப்பரப்புக்கு அருகில், பொறியியல் துறை அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலகத்தில் பணிபுரிபவர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் இவர்களால் நிலங்கள் வாங்கப்பட்டது என்பதை அரசு அறிந்திருக்கிறதா?
ஆம் எனில் வாங்கியவர்களின் பெயர்கள் நிலங்களின் அளவு இவற்றை குறித்த தகவல்கள் இந்த அவையில் வைக்கப்படுமா என்ற கேள்வி மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட போது அவை அதிர்ந்தது.
அரசாங்கத்திடம் இது குறித்து எந்த தகவலும் இல்லை, ஆனால் விசாரிக்கப்படும் என்ற பதில் கூறப்பட்டது! புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக வெட்டப்படும் கால்வாய்களை அடுத்த நிலப்பரப்பில் இவ்வாறு குறைந்த விலையில் நிலங்களை அரசு அதிகாரிகள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு வாங்குவதாக இந்த பகீர் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து தொடர்ந்த விவாதம்:
எத்திராஜுலு நாயுடு: “விசாரணை எப்போது தொடங்கப்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன்?”
“லா மெம்பர்” C. P. R: “எங்கள் அலுவலகத்திற்கு இந்த கேள்வி வந்தவுடன் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.” –
தொடர்ந்த உரையாடல்…
"மாண்புமிகு சட்ட உறுப்பினர் விசாரணையின் முடிவை இந்த அவையின் மேஜையின் மீது வைப்பாரா?”
"இந்த குற்றச்சாட்டுக்கு ஏதேனும் அடிப்படை ஆதாரங்கள் இருந்தால் அது குறித்து ஆராயப்படும்.”
"கால்வாயை ஒட்டிய நிலங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களின் நெருங்கியவர்களின் பெயர்களில் வாங்கியது உண்மைதானா?"
"நான் ஏற்கனவே கூறியது போல இந்த அறிக்கைகள் துறையின் மரியாதை மற்றும் நேர்மையின் அடிப்படையற்ற அபிப்பிராயங்கள் என்று கருதுவதற்கும், துறையின் நன்மதிப்பிற்கு கேடு விளைவிக்கும் செயலாகவும் அரசு கருதுகிறது. அதே சமயம், இதுபோன்ற தவறுகள் உண்மையில் நடந்திருந்தால் கடுமையான நடவடிக்கை அரசாங்கத்தால் எடுக்கப்படும்.”
"அரசு விசாரிக்க போகிறதா என்று மட்டுமே நான் கேட்கிறேன்.”
"மாண்புமிகு உறுப்பினர் குறிப்பிட்ட இடம் வாங்கிய நபர்கள், மற்றும் விவரங்கள் இவற்றை அளித்தால் அதற்கு அரசு தகுந்த பதில் அளிக்கும்."
"அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்களுக்கு இந்த தகவல்கள் கிடைக்காதல்லவா?"
"அப்படியெனில் கடினமாக உழைக்க கூடிய நேர்மையான துறையின் மீது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய, ஒரு துறையின் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு இந்த சந்தர்ப்பம் பயன்படுத்தப்படுகிறதா என்று கருத இடம் உள்ளது. இது குறித்து வருந்துகிறேன்.”- இது சி.பி.ஆரின் பதில்.
"அரசு அதிகாரிகளால் வாங்கப்பட்ட இந்த நிலங்களால், அணை கட்டுமான பணி பாரபட்சமாக அல்லது பாதகமாகவோ பாதிக்கப்படுமா?”
"கட்டுமானப் பணி அல்ல, ஆனால் அரசு அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் நற்பெயருக்கு பாதகம் விளைவிக்க கூடிய செயல் இது!"
"விசாரணையின் தன்மை என்ன என்று அறிந்து கொள்ள முடியுமா?"
"இது குறித்து தலைமைப் பொறியாளரிடம் கேட்டுள்ளோம். நிலங்கள் வாங்குவது குறித்தும் வாங்குபவர்களின் பெயர்கள் குறித்தும் தீவிர விசாரணைக்கு உட்படுத்துவதுடன், அதிகாரிகள் மட்டத்தில் துறையில் இது போன்று நடந்துள்ளதா என்று விசாரணை நடைபெறுகிறது. இது ஒரு ஆதாரமற்ற அவதூறு என்று நிரூபிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
இந்த விவாதம் பிரிட்டிஷ் காலத்திலும் மறைமுகமான முறைகேடுகள் நடந்திருக்கிறதோ என்ற பலமான ஐயப்பாட்டினை எழுப்புகிறது. தீர்க்கமான கேள்விகளும், சுற்றி வளைத்து தரப்பட்ட பதில்களும் சந்தேகங்களை வலுப்படுத்துகிறது. ஆனால், இந்த விசாரணைகள் குறித்து பின்னாளில் எந்த தரவுகளும் அரசு ஆவணங்களில் இல்லை என்பதும் ஆச்சரியமான உண்மை!
விவாதம் இயந்திரங்கள் கொள்முதல் குறித்தும் தொடர்ந்தது.
உறுப்பினர் C. V. V: "மேட்டூர் திட்டத்துக்கான முன்மொழியப்பட்ட இயந்திரங்களில் ஏதேனும் ஒரு நிறுவனம் வழங்கிய விவரக் குறிப்பு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா அல்லது தலைமை பொறியாளர் அங்கீகரித்துள்ளாரா?"

C. P. R: "இயந்திரங்கள் வாங்குவதற்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால், தலைமைப் பொறியாளர் அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறாரா என்பதை நாங்கள் கூற முடியாது.”
"இயந்திரங்கள் வாங்க இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட திரு ராபர்ட்ஸ், எவ்வளவு காலத்துக்கு என்று அனுப்பப்பட்டார்".
"சுமார் ஐந்து அல்லது ஆறு மாதங்கள்".
"இதனால் அரசாங்கத்துக்கு ஆகும் செலவு எவ்வளவு?"
"இங்கிலாந்தில் அவருடைய சொந்த சம்பளம் மற்றும் சில அலவன்சுகள் தவிர வேறு எந்த செலவும் இல்லை! உண்மையில் அவருடைய சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தான் கிடைத்தது"
"திரு. ராபர்ட்ஸ் முன்னிலை படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. காவிரி அணையைக் கட்டுவதற்கு கயிறு பாதைகள், (Ropeways) மற்றும் பிற வழிமுறைகளை இந்தியாவிலேயே செயல்படுத்த முடியாதா? தலைமை பொறியாளர்களுக்கு இதுகுறித்து எந்த புரிதலும் இல்லையா?”
"வெளிப்படையாக இல்லை! அமெரிக்கா, ஜெர்மனி, மற்றும் இங்கிலாந்தில் உள்ள சில சிறப்பு நிறுவனங்களில் மட்டுமே இதுபோன்ற இயந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும் அவர் இந்த நிறுவனங்களுக்குச் சென்று விவரங்களை பெற்று குறிப்பிட்ட இடங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்து ஒரு முடிவுக்கு வர வேண்டி இருந்தது. இந்தியாவில் அத்தகைய நிறுவனங்கள் இல்லாததால் அதை செய்ய முடியாது."

"தலைமைப் பொறியாளர் திரு.முல்லிங்ஸ் ஓய்வு பெற்ற பிறகு ‘கர்னல் எல்லீஸ்’ அவர்களை நியமிக்க ஏதேனும் முன்மொழிவு உள்ளதா?"
"திரு. முல்லிங்ஸுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் சர்வீஸ் உள்ளது. பணியில் இருக்கிறார். இரண்டு வருடங்கள் கழித்து என்ன நடக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது".
"மேட்டூர் திட்டத்தின் ஆரம்ப கால திட்டமிடுதலில் இருந்த கர்னல் எல்லீஸ்" அவர்களின் அனுபவத்தை கருத்தில் கொண்டு அவரை நியமிக்கலாம் என்ற முன்மொழிவு அல்லது பரிந்துரை உள்ளதா?"
"சில விஷயங்களில் ஆலோசனை கேட்கும் எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது உண்மைதான்."
"மேட்டூர் பாசனத் திட்டத்தில் சிறப்பு கமிஷனராக திரு. F. B. இவான்ஸ், டெல்லியில் இருந்து திரும்பியதும் நியமிக்கப்படுவார் என்பது உண்மையா? ஆம், எனில் அந்தப் பதவிக்கான சம்பளம் என்ன? அதற்கான அவசியம் என்ன? இந்திய அரசிடம் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதா? இந் நியமனம் குறித்து சபையின் நிதிக் குழுவின் முன் வைக்கப்பட்டுள்ளதா? மேலும் நிதிக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டதா?"
"ஆம். நியமிக்கப்பட இருக்கிறார். அவர் பதவி மற்றும் ஊதியம் குறித்த தகவல்கள், அரசாணை எண். 163 Public, 24 Feb 1927 தேதியிட்ட அரசிதழில் உள்ளது. அது இந்த அவையில் இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.”
"இந்த விவகாரம் குறித்து நிதிக்குழுவின் முன், முன்மொழிவு செய்யப்பட்டு ஒப்புதல் பெற வேண்டும் அல்லவா?"
"அது போன்ற எந்த தேவையும் உணரப்படவில்லை"
"திட்டத்திற்கான ஒரிஜினல் மதிப்பீட்டில் இது சேர்க்கப்பட்டுள்ளதா?"
"இல்லை!"
திரு. J. A. சல்தானா:- "இந்த கேள்விகள் அனைத்தையும் விசாரிக்க சில உறுப்பினர்களும் நானும் அந்த இடத்திற்கு செல்ல விரும்பினால் தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்குமா?"
"இந்த துணைக் கேள்வி, எந்த பதிலிலிருந்து எழுகிறது என்பதை நான் அறிய விரும்புகிறேன்?"
"இது நம்மை நாமே திருப்தி படுத்திக் கொள்ள!"
அவைத்தலைவர்: மாண்புமிகு. உறுப்பினர், துணைக் கேள்விகளை கேட்பதற்கான விதிகளுக்கு இணங்கி கேட்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்".
திரு. J. A. சல்தானா:- "கடைசியாக கேட்கப்பட்ட கேள்வியின் தொடர்ச்சியாக திரு. இவான்ஸ், மேட்டூரில் இருக்கும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு அங்கு சென்று அனைத்து உண்மைகளையும் நேரில் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வதற்காக அங்கு செல்ல ஆர்வமாக உள்ளோம். மேலும் எங்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதில் அரசாங்கம் ஒத்துழைக்குமா? என்பதை அறிய விரும்புகிறேன்.”
அவைத் தலைவர்: "மாண்புமிகு உறுப்பினர் அதை வாய்வழி கேள்வியாக கேட்கலாம். ஆனால், துணைக் கேள்வியாக அல்ல!"
C. P. R: எனது மாண்புமிகு நண்பரின் தகவல் தாகத்தின் அளவு மற்றும் தன்மையை நான் உணர்கிறேன். அவர் தகவல் தேடும் இடங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தால், அந்த நோக்கத்திற்கு மாண்புமிகு உறுப்பினருக்கு தேவையான வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்கிறேன்.”
இதன் தொடர்ச்சியாக, சில சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகளின் குழு மேட்டூர் அணை கட்டப்படும் இடம், கால்வாய் பாசன வழித்தடங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார்கள்.
மக்கள் பிரதிநிதிகளின் ஆய்வறிக்கை மீளாய்வு குறித்த விவாதம்
1928-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு சட்டமன்றம் கூடியது. அன்றைய கூட்டத்தில் மேட்டூர் அணை திட்டம் குறித்த மக்கள் பிரதிநிதிகளின் அறிக்கை மீண்டும் விவாதிக்கப்பட வேண்டும் என்ற முக்கிய தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

அரங்கில் பதற்றமும் ஆவலும் நிறைந்திருந்தன. ஏனெனில், பல மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் குழு, மிகுந்த உழைப்புடன் மேட்டூர் திட்டத்தை ஆய்வு செய்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகள் வழங்கியிருந்தது. ஆனால், அந்த பரிந்துரைகளின் பெரும்பகுதியும் அரசு அலட்சியத்தால் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சி. வி. வெங்கடரமண அய்யங்கார் உரை :
அவர் உரையைத் தொடங்கியவுடன், சட்டமன்றம் முழுதும் கவனமாகக் கேட்டது.
“அரசாங்கம் எங்களின் பிரதிநிதித்துவ அறிக்கையை கண்ணுக்குப் புலப்படும் படி தள்ளிப்போட்டு விட்டது. எங்கள் பரிந்துரைகள் அனைத்தும் ஆராய்ந்த பின் வழங்கப்பட்டவையே. அவற்றை புறக்கணித்தது நியாயமல்ல” என்றார் அவர். அவரின் முக்கிய வாதங்கள்:
பாசன நீர் விநியோகம்: கோயம்புத்தூர், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் பாசன வசதி கிடைக்க வேண்டும் என்ற பிரதிநிதிகளின் வலியுறுத்தலை அரசு முற்றிலும் புறக்கணித்து விட்டது. சேலத்திற்கு நெரிஞ்சிபேட்டை ‘செக் டேம்’ வழியாக எளிதில் நீர் வழங்க இயலும். ஆனால், "1887-ல் ஒரு முறை வாய்ப்பு மறுக்கப்பட்டது; எனவே இப்போது ஆராய வேண்டாம்" என்று அரசு கூறுவது எவ்வளவு அநியாயம்! என்று கடுமையான கேள்வியை முன்வைத்தார்.

செலவினங்களில் வீணாக்கம்: “அதிகாரிகளுக்கான வீடுகள், வடிகட்டிய நீர், மிகப்பெரிய அலுவலக கட்டடங்கள் ஆகியவற்றில் கோடிக்கணக்கான ரூபாய் வீணாகிறது. காவிரி தண்ணீரை குடிக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு பைசா செலவிடப்படவில்லை. ஆனால், மேட்டூர் அலுவலகத்தில் வேலை செய்யும் சில அதிகாரிகளுக்கு மட்டும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்காக லட்சக்கணக்கில் செலவழிக்கப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார். இங்கிலாந்து சார்பாக இந்த அரசு செயல்படுகிறது என விமர்சித்தார்.
இந்தத் திட்டம் இந்திய ரயத்துகளுக்கு “வெள்ளை யானையாக” மாறும். ஆனால், இங்கிலாந்தில் வேலை இழந்தவர்களுக்கு வேலை தரும் வாய்ப்பாக மாறிவிடும்” என்ற அவரது கூற்று, மன்றம் முழுவதையும் அதிர வைத்தது.
சாராயக் கடைகள்: சட்டமன்ற பிரதிநிதிகள் குழு, மேட்டூரில் “கள்ளு, சாராயக் கடைகள் மூடப்பட வேண்டும்” என்று பரிந்துரைத்திருந்தது. ஆனால் அரசு அதை ஏற்காமல், “கடைகள் மூடினால் கள்ளச்சாராயம் உற்பத்தியாகும்” என்று காரணம் கூறியது. இந்த இடத்தில் கள்ளச்சாரயத்தை தடுக்க முடியாது என்று அரசாங்கம் வெட்கமில்லாமல் கூறுகிறது” என்று அவர் கடுமையாகச் சாடினார்.
(இதே போன்ற பதில்களை கடந்த 100 வருடங்களாக சுதந்திர இந்தியாவில் வெவ்வேறு அரசுகளின் காலத்தில் ஆளும் கட்சிகளின் பதிலாக கேட்டுக் கொண்டே இருக்கிறோம். சாராயக் கடைகளை மூடும் நற்பணியை காண இன்னும் எத்தனை வருடங்கள் காத்துக் கிடக்க வேண்டும் இறைவா!)
இயந்திரங்கள் பயன்படுத்துவதால் திட்டத்தின்படி கட்டுமான நேரம் குறைக்கப்படும் என்று வைத்துக்கொண்டாலும், மனித உழைப்பைப் பயன்படுத்தினால் இந்தியாவில் பட்டினி கிடக்கும் ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு உணவளிக்க முடியும் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டாமா?
“அரசாங்க உத்தரவு மிகவும் கொடூரமாக, நாங்கள் மரத்தின் வேர்கள் சரியாக உள்ளதா என்று பார்க்க அதைப் பிடுங்குகிறோம் என்று அரசு குறை கூறுகிறது. இது நியாயமா?” என்று கேள்வி எழுப்பினார்.
நிபுணர் குழு தேவை: அரசு, “பிரதிநிதிகள் குழு உறுப்பினர்கள் தங்கள் அதிகாரங்களை மீறி முடிவுகளைச் சொல்கின்றனர்” என்று கூறியிருப்பது அவமானம் எனக் குறிப்பிட்டார். “ஒருவேளை அரசாங்கம் எங்கள் அறிக்கையை ஏற்க மறுக்கிறதேயானால், குறைந்தபட்சம் ஓய்வு பெற்ற பொறியாளர்களை கொண்டு ஒரு சுயாதீன குழுவையாவது அமைத்து, அவர்களிடம் அறிக்கை பெறட்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
ராமச்சந்திர ரெட்டி சற்று அமைதியான குரலில், ஆனால் உறுதியுடன் சொன்னார். “பிரதிநிதிகள் குழுவின் உழைப்பை அரசு மதிக்கவில்லை. அவர்கள் சொன்னது எதுவும் தவறல்ல. அரசு சொல்வது போல், ‘மரம் வளர்கிறது, அதைத் தொடக்கூடாது’ என்பது சரியான உவமை அல்ல. நாங்கள் வேரை பிடுங்கவில்லை. மாறாக, மரத்தை நன்றாக வளர வைத்தல் தான் எங்களது நோக்கம்.” இந்த அவரது கருத்து, பிரதிநிதிகள் குழுவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தியது.
எல்லப்பா செட்டியார் “சேலம் மாவட்டம் முழுதும் இந்தத் திட்டத்தை மட்டுமே நம்பியிருக்கிறது. அங்கே மக்களின் நிலம், வீடுகள் அனைத்தும் பலியாகிவிட்டன. இப்போது அவர்கள் எதிர்பார்க்கும் நீரையே மறுக்கிறீர்கள் என்றால், அவர்களின் தியாகம் எதற்காக?” என்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய உறுப்பினர் திரு. முத்தையா முதலியார் கூட, “தஞ்சாவூருக்கு இதற்கு எதிர்ப்பு இல்லை” என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆகவே அரசு சேலத்துக்கும், கோயம்புத்தூருக்கும் பாசன நீர் வழங்குவதில் தாமதிக்க வேண்டியதில்லை” என்று தெளிவாகக் கூறினார்.
கே.எஸ். சிவ சுப்ரமணிய அய்யர், டி.எம்.நாராயணசுவாமி பிள்ளை, சி.மருதவனம் பிள்ளை, எல்.கே.துளசிராம்,கான் பகதூர் பி.கலிப்-உல்-லா சாகிப் பகதூர், திவான் பகதூர் ஆர்.என். ஆரோக்கியசாமி முதலியார், கே.கோட்டி ரெட்டி போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாதங்களை தீர்மானத்துக்கு ஆதரவாக பேசினர்.
எல்.கே. துளசிதரன், “மரத்தை அடிக்கடி சென்று பார்ப்பதன் மூலம் மரத்தை வேரோடு பிடுங்குவதால் நோக்கம் எதுவும் நிறைவேறாது என்று அரசாங்கம் கூறுகிறது. பிரதிநிதிகள் குழு விரும்புவது மரத்தை வேரோடு பிடுங்க அல்ல! மரம் எவ்வாறு வளர்ந்து வருகிறது என்று கண்காணிக்க! நாங்களும் வணிகர்கள். காவலாளி மரத்தைப் பற்றி கவனித்துக் கொள்கிறாரா அல்லது மரத்தை வேறோடு பிடுங்குகிறாரா என்பதை பார்க்க விரும்புகிறோம். இது போன்ற வருகைகளின் நோக்கம் மக்களின் பணம் வீணாகாமல் பார்த்துக் கொள்வது, அங்குள்ள பணியாளர்கள் குளிர் காற்றில் அமர்ந்து கொண்டு மட்டுமே வெறுமனே சம்பளம் பெறுவதைத் தடுப்பது” என்று அரசாங்கத்துக்கு கடுமையான பதிலடி தந்தார்.
கடுமையான கருத்துகள் பரிமாறப்பட்டது என்பது தெளிவாகிறது. இவை அவையில் அனுமதிக்கப் பட்டு, ஆவணங்களாக பதிவும் செய்யப்பட்டுள்ளது நமக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது.
அரசு, பிரதிநிதிகள் குழுவின் பரிந்துரைகளை அநியாயமாக புறக்கணித்துள்ளது என்றும், அந்த நாள் சட்டமன்ற விவாதம், மேட்டூர் திட்டத்தின் நிதி, சமூக, அரசியல் பரிமாணங்களைத் தெளிவாக வெளிக்கொணர்ந்தது எனவும் கூறலாம். அரசு தனது பிடிவாதம் காரணமாக மக்கள் நலனுக்கான பரிந்துரைகளை ஏற்க மறுத்தது என்பது அனைவரும் வலியுறுத்திய குற்றச்சாட்டு.
“யாரிடம் உள்ளதோ அவருக்கு வழங்கப்படும் மற்றும் யாரிடம் இல்லையோ அவரிடம் உள்ள சிறிதளவும் பறிக்கப்படும்” என்ற பழமொழியை ஞாபகப்படுத்தி தீர்மானத்துக்கு ஆதரவாக பேசினார் டி. ஆதிநாராயணன் செட்டியார்.
மாண்புமிகு பேரவைத் தலைவர்: — “திரு. C.V.வெங்கடரமண அய்யங்காரின் திருத்தப்பட்ட தீர்மானத்தை இப்போது சபையின் வாக்கெடுப்புக்கு வைக்கிறேன். கேள்வி என்னவென்றால்:
“இந்த சபை அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கிறது, 19 அக்டோபர் 1928 தேதியிட்ட G.O. எண் 2616 I., மேட்டூர் திட்ட பிரதிநிதித்துவத்தின் அறிக்கையை பின்வரும் விஷயங்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும்—பரிசீலிக்கப்பட வேண்டும். அரசு அறிக்கையின் பரிந்துரைகளை பெரும் அளவில் ஏற்கத் தயாராக இல்லாவிட்டால், P.W.D அதிகாரிகள் முக்கியமாக அடங்கிய நிபுணர்களின் குழு ஒன்றை நியமித்து, அறிக்கையிலும் தீர்மானத்திலும் எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளையும் ஆராய வேண்டும்.
இறுதியாக, வெங்கடரமண அய்யங்கார் முன்மொழிந்த திருத்தப்பட்ட தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
காவிரி - மேட்டூர் திட்டம் தொடர்பான அரசாணைகள் தமிழில் வெளியிடுவது குறித்து 1927-ம் ஆண்டு கேள்வி எண். 424 – 1927 குறியிட்ட கேள்வி ஒன்று திரு. சையத் தாஜுதீன் அவர்களால் சபையில் எழுப்பப்பட்டது.
1925 முதல் 1927 ஜூலை வரை மேட்டூர் திட்டங்கள் மற்றும், 1923 ஆம் ஆண்டு காவிரி குழுவின் அறிக்கை குறித்து அரசு இயற்றிய அனைத்து ஆணைகளையும், செயின்ட் ஜார்ஜ் கோட்டை மாவட்ட அரசிதழில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று “லா மெம்பர்” சி.பி.ஆரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அரசு பரிந்துரையை ஏற்க தயாராக இல்லை என்ற பதில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த “ஆணை ஓசை” தொடருக்கான அனைத்து பெரும்பாலான அரசு ஆவணங்களும், மெட்ராஸ் மற்றும் இதர ஆவணக் காப்பகங்களிலும், தமிழ்நாடு சட்டமன்ற நூலகத்திலும் ஆங்கில மொழியில் மட்டுமே நமக்குக் கிடைத்தது. இந்தத் தொடர் தமிழில் கொண்டு வரவேண்டும் என்ற இலக்கின் காரணமாக அனைத்து ஆவணங்களும் அடியேனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கட்டுரை வடிவமாக எழுதப்பட்டது என்பதை வாசகர்களுக்கு இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்
காவிரி நன்னீரமேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


