ஆஃப் செய்த மாணிக்கம்; திரி கொளுத்தும் த.வெ.க முதல் துர்கா கட்டுப்பாட்டில் அதிகாரிகள் வரை! | கழுகார்

முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் என த.வெ.க அமைச்சர்கள் சொல்ல.. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸார் சொல்ல களேபரமாகிக் கிடக்கிறது த.வெ.க கூட்டணி. இந்த முரணை வளரவிடக் கூடாது என முடிவெடுத்து, கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி மாலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூரும், ராஜ்ய சபா எம்.பி பிரவீன் சக்ரவர்த்தியும் முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அதன்பின்னர் எல்லாம் சுமூகமாகிவிடும் என எதிர்பார்ப்பு நிலவியது.

விஜய் - ராகுல் காந்தி

ஆனால், கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், அண்ணன் விஜய் முதல்வராவார் என கணித்தேன். 2029-ல் அவர் பிரதமராவார். ராகுல் காந்தியே அவரை பிரதமர் பொறுப்பில் அமர வைப்பார் என புது சர்ச்சைக்கு திரி கொளுத்தியிருக்கிறார். முதல்வரிடம் நேரில் வலியுறுத்தியும்கூட த.வெ.க-வினர் நிறுத்தவில்லை என்றால் கூட்டணியில் எப்படி பயணிப்பது.. த.வெ.க-வின் ப்ளான்தான் என்ன? என குமுறுகிறார்கள் கதர்கள்.

தமிழக காவல்துறையின் உச்ச அதிகாரி சனிக்கிழமை தோறும் நடத்தும் மாவட்ட, மண்டல கூட்டத்தால் உயரதிகாரிகள் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்களாம். சுமார் மூன்று மணி நேரம் வீடியோ கான்பரன்ங்கில் நடக்கும் அந்த மீட்டிங்கில், க்ரைம் ரேட் அதிகம் உள்ள மாவட்ட எஸ்.பிக்களுக்கு கடும் டோஸ் விழுகிறதாம். அதைத் தொடர்ந்து ஐ.ஜி-க்களும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மூன்று மணி நேரத்துக்கு மேல் வீடியோ கான்பரன்சிங்கில் மீட்டிங் நடத்துகிறார்களாம். இதனால், வாரத்தில் சனிக்கிழமை, ஞாயிற்று கிழமைகளில் மீட்டிங்கிலேயே மணிக்கணக்கில் நேரம் சென்றுவிடுவதால் உயரதிகாரிகள் மன உளைச்சலுக்கு தள்ளப்படுகிறார்களாம்.

கலவரமோ.. பெண்கள் பாதுகாப்பில் குறைபாடோ இல்லை. முன்விரோத கொலைகள்தான் பெரும்பகுதி நடக்கின்றன. அதனை எப்படி தடுப்பது? ஆட்சியாளர்கள் நல்ல பெயர் எடுக்க நம்மை போட்டு படுத்துகிறார்கள் என புலம்புகிறார்களாம் அதிகாரிகள். உச்ச அதிகாரியின் தொடர் மீட்டிங்கால், தென் மண்டலத்திலிருக்கும் ஐ.ஜி ஒருவர் எதற்கெடுத்தாலும் மெமோ, சஸ்பெண்ட் என அவருக்கு கீழ் பணியாற்றுபவர்களை வதைக்கிறாராம். இதிலிருந்து ஒரு விடிவு வேண்டுமென மேலிடத்துக்கு தகவலை கடத்தி வருகிறார்களாம் ஜூனியர் காக்கிகள்!

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவின் சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவெண்காடு. அங்குள்ள சுவேதாரண்யேஸ்வர் கோவில் நிர்வாகத்தை துர்கா ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாராம். த.வெ.க ஆட்சியிலும் கோயில் நிர்வாக அலுவலர்கள் துர்கா சொல்வதையே கேட்கிறார்களாம். கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி துர்கா திருவெண்காடு சென்ற நிலையில், வீட்டில் இருந்த அவரை திருவெண்காடு கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் மேலாளர் சிவானந்தம் ஆகியோர் சந்தித்து சிறப்பு பூஜை செய்து பிரசாதம் கொடுத்து விசுவாசத்தை காட்டியுள்ளனர்.

துர்கா ஸ்டாலின்

அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னாள் முதல்வரின் மனைவிக்கு சிறப்பு அழைப்புகளை கொடுப்பதை கண்டு கொதித்துப்போன லோக்கல் த.வெ.க-வினர், துறை மேலிடத்துக்கு தகவலைச் சொல்லி அந்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்கள். என்னுடைய டேபிளில் உள்ள ஃபைலையே சேகர்பாபு படித்துவிடும் அளவுக்குத்தான் அதிகாரிகள் எனக்கே ஒத்துழைக்கிறார்கள். இதில் எங்கோ உள்ள கோவில் நிர்வாகத்தினர் அரசியல் பிரமுகர்கள் பூஜைக்கு அழைப்பதை நான் தடுத்துவிட முடியுமா.. என நொந்து புலம்பியிருக்கிறது துறை மேலிடம்.

தி.மு.க ஆட்சி காலக்கட்டத்தில் பதிவுத்துறையில் கோலோச்சிய எம்பெருமாளின் பெயரைக் கொண்ட அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, ஐ.ஜி-யாக பணியாற்றி ஓய்வு பெற்றபின் டி.என்.பி.எஸ்.சி உறுப்பினரானார். அவரும் பதிவுத்துறையின் அப்போதைய டி.ஐ.ஜி-யான பிரியமான பெண் அதிகாரியும் இணைந்து, வெளிநாட்டு சொசைட்டியில் நிலங்களை முறைகேடாக ஒற்றை எழுத்து நிறுவனத்துக்கு மாற்ற திட்டமிட்டிருந்தார்கள். இவ்விவகாரம் வழக்காக பதியப்பட்டு, 2025-ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆர்டர் போட்டது சென்னை உயர் நீதிமன்றம். சூரிய கட்சி ஆட்சியில் இருந்தவரை உயர் நீதிமன்றத்தின் ஆர்டரை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கவில்லை. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அந்த ஃபைலை தூசு தட்டியிருக்கிறார்களாம்.

பிரச்னையில் மாட்டியிருக்கும் அந்த பிரியமான பெண் அதிகாரி, இதேபோல ஒரு குற்றச்சாட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் விசாரணையில் சிக்கியிருக்கிறாராம். அப்போதைய சென்னை போலீஸ் கமிஷ்னரின் செல்வாக்கால் அந்த வழக்கில் இருந்தும் தப்பியவர், இப்போது விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார். இப்படி, ஒரு வழக்குகளும் ஒருசேர நெருக்குவதால் கிலியில் இருக்கிறாராம் அந்த பிரியமான பெண் அதிகாரி.

2024, 2026 என இரண்டு பொதுத் தேர்தல்களை மக்கள் நீதி மய்யம் கட்சி புறக்கணித்துவிட்டதால் அதன் நிர்வாகிகள் மாற்றுக் கட்சியை நோக்கி ஓட்டம் பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என பல மாதங்களாக பகீரத பிரயர்த்தனங்களை செய்தார் கவிஞரும் ம.நீ.ம நிர்வாகியுமான ஸ்நேகன்.

திருவையாறு தொகுதியை பெற தி.மு.க புள்ளிகளுடனுடன் பேசிவந்தார். ஆனால், யாரிடமும் ஆலோசிக்காமல், எங்களுக்கு சீட்டே வேண்டாம் என கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தது ஸ்நேகனை நோகடித்துவிட்டதாம்.

ஸ்நேகன்

ஒரேயொரு ராஜ்ய சபா சீட்டுக்கு மொத்த கட்சியையும் அறிவாலயத்தில் கரைத்துவிட்டாரே... என அப்போது வருத்தத்தை பதிவு செய்த ஸ்நேகன், அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள திட்டமிட்டார். தற்போது ஆளும் கட்சியான த.வெ.க-வின் ஊடகங்களில் பேச சென்சிட்டிவ்வான ஆட்கள் மிக குறைவாக இருப்பதால், அமைச்சர் ஆனந்த் ரூட்டில் த.வெ.க-வில் இணைய ஒப்புக் கொண்டுள்ளாராம். விஷயமறிந்த கமல்ஹாசன், போகிறவர் போகட்டும்.. யாரையும் தடுக்க வேண்டாம் என திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.