Doctor Vikatan: ஸ்ட்ரெஸ் அதிகமானால் மூக்கில் இருந்து ரத்தம் வருமா?

Doctor Vikatan: என் வயது 30, ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். வேலை அல்லது பிற விஷயங்களின் காரணமாக ஸ்ட்ரெஸ் அதிகமானால் எனக்கு மூக்கிலிருந்து ரத்தம் கசிய ஆரம்பிக்கிறது.

இது எப்படிப்பட்ட பிரச்னை? ஏதேனும் பெரிய பாதிப்பின் அறிகுறியா? என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவரும், தலை  மற்றும்  கழுத்து அறுவை சிகிச்சை நிபுணருமான வெங்கட் கார்த்திகேயன்.

காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவரும், தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணருமான வெங்கட் கார்த்திகேயன்

மூக்கில் ரத்தம் வடிதல் பிரச்னையை மருத்துவ மொழியில் எபிஸ்டாக்சிஸ் (Epistaxis) என்று சொல்கிறோம். இந்தப் பிரச்னையை எப்போதுமே முழுமையாகப் பரிசோதிக்க வேண்டும். 

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னைக்கு மன அழுத்தம் ஒரு தூண்டுதலாக இருக்கலாம். ஆனால், அதுவே மூக்கில் ரத்தம் வருவதற்கான முதன்மைக் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. இதன் பின்னணியில் உள்ள உண்மையான சிக்கலைத் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். 

இது மூக்கின் அமைப்பில் உள்ள பிரச்னையாக இருக்கலாம் அல்லது உயர் ரத்த அழுத்தம், ரத்தம் உறைவதில் உள்ள கோளாறு, மற்றும் சில மருந்துகளின் பக்கவிளைவாலும் ஏற்படலாம்.

விரைவில் இஎன்டி மருத்துவர் மற்றும் தலை-கழுத்து அறுவை சிகிச்சை மருத்துவரைச் சந்திப்பது மிக அவசியம்.

ரத்தப்போக்கு ஏற்படும்போது, உங்கள் மூக்குத் துவாரங்களை   இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு வாயால் மூச்சுவிட்டபடி முன்னோக்கி குனியவும். இதன் மூலம் தொண்டைக்குள் ரத்தம் செல்வதைத் தவிர்ப்பதோடு, வாய்க்குள் வரும் ரத்தத்தைத் துப்பவும் முடியும்.

இதற்கான முழுமையான பரிசோதனை மற்றும் சிகிச்சையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். எனவே,  விரைவில்  இஎன்டி மருத்துவர் மற்றும் தலை-கழுத்து அறுவை சிகிச்சை மருத்துவரைச் சந்திப்பது மிக அவசியம்.

ஸ்ட்ரெஸ் அதிகமாவதால்தான் இப்படி வருகிறது என இனியும் இந்தப் பிரச்னையை அலட்சியமாக அணுகாமல், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் புத்திசாலித்தனம்.

டாக்டர் வெங்கட் கார்த்திகேயன்:

சென்னை, கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவரும், தலை  மற்றும்  கழுத்து அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றுபவர். இந்தத் துறையில் 18 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.