மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி- எம்எல்ஏ கார்த்திகேயன்
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் குறித்து கேட்டறிந்தார்.
முன்னதாக பொதுமக்கள், அதிகாரிகள் முன்பாக போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் பேசிய எம்.எல்.ஏ கார்த்திகேயன், "அடிப்படை வசதிகள் கேட்கும் கிராம மக்களிடம் அன்பாக, கனிவாக பதில் சொல்லுங்க, அதற்கு தான் நாம் சம்பளம் வாங்குகிறோம்; பதவியேற்ற 90 நாட்களில் எந்த கிளெர்க்குகளையும் பணியிட மாற்றம் செய்யவில்லை, ஏற்கனவே இருப்பவர்கள் தான் அந்த பகுதியை பற்றி தெரியும் என்பதால் அவர்களே சிறப்பாக பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேசிய போது, ஆலாத்தூர் ஊராட்சியில் பல்வேறு இடங்களில் பிளாட்டுகள் அனுமதி இன்றி அமைக்கப்பட்டு சுற்றுச்சுவர் எடுக்கப்பட்டுள்ளதால் விவசாய நிலங்களுக்கு கூடிய பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த எம்.எல்.ஏ கார்த்திகேயன், ``யாரும் பொது இடத்தை ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகத்தான் எந்த லே -அவுட் வந்தாலும்... என்னிடம் அப்ரூவல் வாங்கிவிட்டுதான் பிடிஓ - வை அப்ருவல் கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். அப்ரூவல் கொடுப்பது அதிகாரியால் முடியும், இருந்தாலும் பாதை ஆக்கிரமிப்பு போன்ற பிரச்னைகள் வரக் கூடாது என்பதற்காகச் சொல்கிறேன் என்றார்.
மாரணி வாரியேந்தல் பஞ்சாயத்து யூனியன் பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் எம்எல்ஏ கார்த்திகேயனிடம், தங்களது பள்ளியில் மாணவிகளுக்கான கழிப்பறை இல்லை என்பதால் மாணவர்கள் கழிப்பறைக்கு சென்று விட்டு வரும் வரை காத்திருந்து பின்னர் மாணவிகளை அனுப்பக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே சீரமைப்பு பணிகள் என்ற பெயரில் மாணவிகளுக்கான கழிப்பறையை இடித்து விட்டார்கள். புதிய கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கவில்லை எனவும், தங்களது பள்ளியில் இருக்கக்கூடிய மேற்கூரைகள் சேதமடைந்து மழை காலத்தில் மழை நீர் கசிவு ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனைக் கேட்ட சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் எதற்காக புதிய கழிவறைக்கான ஒப்பந்த பணி அளிப்பதற்கு முன்பாக இடித்தீர்கள்? உடனடியாக ஒரே நாளில் திங்கள்கிழமைக்குள் புதிய பணி ஒப்பந்தம் போடப்பட்டு கழிவறையை கட்டிகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, `பள்ளியில் உள்ள மேற்கூரைகளை சரி செய்வதற்கு உடனடியாக திட்டப்பணிகளை உருவாக்கி பணிகளை முடித்து தர வேண்டும் எனத் தெரிவித்தார்.
அப்போது ஆசிரியையைப் பார்த்து பேசிய எம்.எல்.ஏ, `நீங்கள் உங்கள் வீட்டுக்காக கேட்கவில்லை. பள்ளிக்காக கேட்கிறீர்கள்... பாராட்டுகிறேன், நிச்சயமாக திங்கள்கிழமைக்குள் நான் கழிப்பறையை கட்டுவதற்கான ஆணையை பிறப்பிப்பேன் எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

