தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது- நயினார் நாகேந்திரன்
அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் விஜய் கொண்டுவந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்ட்.12) நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது.
தமிழக சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள தவெக அரசின் செயல், ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதைக்கும் முயற்சியாகும்.
"ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு" என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. மக்கள்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப தொகுதிகள் பிரிக்கப்படும் போதுதான், ஒவ்வொரு குடிமகனின் குரலும் நாடாளுமன்றத்தில் சமமான வலிமையுடன் ஒலிக்கும். இது வெறும் எல்லைகளைப் பிரிப்பது அல்ல; மக்களின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, எந்த மாநிலத்திற்கும், குறிப்பாகத் தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில், தவெக அரசின் இந்த எதிர்ப்பு தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல.

கண்மூடித்தனமாக இத்தகைய சீர்திருத்தங்களை எதிர்ப்பதைத் தவிர்த்து, முதல்வர் விஜய் அவர்களின் அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

