தொகுதி மறுவரையறையில் திமுகவை பாஜக ஏமாற்றுகிறது - கார்த்தி சிதம்பரம் சொல்லும் விளக்கம் என்ன?

தொகுதி மறுவரையறையில் திமுகவை பாஜக தவறாக வழிநடத்துவதாக மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் பதிவிட்டிருப்பதாவது...

"அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50% மக்களவைத் தொகுதிகளை உயர்த்தித் தருவதாக ஒரு போலியான மாயையைக் காட்டி, பாஜக கட்சி திமுக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளைத் தவறாக வழிநடத்தி வருகிறது.

தொகுதி மறுவரையறை

முதலில், இந்த நடவடிக்கையைச் செய்ய வேண்டுமென்றால், முன்னாள் பிரதமர்களான திருமதி. இந்திரா காந்தி, திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543 ஆகக் கட்டுப்படுத்தி வைத்துள்ள அரசியல்சாசன விதியைத் திருத்த வேண்டும்.

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைத்தால் அது தென்னிந்தியாவிற்கு அநீதியாக முடியும் என்பதால், அதைத் தவிர்க்கும் பொருட்டு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50% தொகுதிகளை உயர்த்தித் தருவதாகக் கூறி பிராந்தியக் கட்சிகளை பாஜக ஈர்க்கப் பார்க்கிறது. அதற்கு அரசியல் சாசனத் திருத்தங்கள் தேவைப்படும்.

மேலும், 815 உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய நாடாளுமன்றம் ஒரு திறனற்ற நாடாளுமன்றமாகவே இருக்கும். எந்தவொரு உறுப்பினருக்கும் அர்த்தமுள்ள வகையில் பேசுவதற்குப் போதிய நேரம் கிடைக்காது.

அத்துடன், உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் தென்னிந்தியாவிற்கும் வடஇந்தியாவிற்கும் இடையே உள்ள இடைவெளி மேலும் அதிகரிக்கும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இந்த மொத்த எண்ணிக்கை மட்டுமே மிக முக்கியமானது.

தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதன் மூலம், பாஜக தனது சொந்த அரசியல் ஆதாயத்திற்காக தொகுதிகளைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வழியேற்படும்.

தொகுதி மறுவரையறையோடு மகளிர் இடஒதுக்கீட்டை இணைப்பது ஒரு அரசியல் தந்திரமே தவிர வேறில்லை. தற்போதுள்ள 543 தொகுதிகளிலேயே பெண்களுக்கான 181 இடங்களை தாராளமாக உறுதி செய்ய முடியும்.

எனவே, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543 என்ற அளவிலேயே வைத்திருக்க வேண்டும்; மேலும், மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய தொகுதிப் பங்கீடே தொடர வேண்டும்"

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.