2018 வெள்ளப் பாதிப்பின்போது பினராயி விஜயன் சாப்பிடாமல் இருந்தாரா? - ஆவேசமான வி.டி.சதீசன்
கேரள மாநிலத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி அதிகாலை பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டன. அதே சமயம் அன்றைய தினம் மீட்புப்பணிகளை முடுக்கிவிடாமல் முதல்வர் வி.டி.சதீசன் ஒரு மதிய விருந்தில் கலந்துகொண்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.
மேலும், முதல்வர் பயணத்துக்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தியது பற்றியும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இன்று திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் வி.டி.சதீசன் கூறுகையில், "மாநில பேரிடர் நிவாரணத் துறை அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காலை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக ரிப்போர்ட்கள் பெறப்பட்டுள்ளன.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் வெள்ளம் தேங்கியுள்ளது. மற்ற இடங்களில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகளுக்காக கொல்லத்தில் இருந்து 14 படகுகள் செங்கன்னூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களும், காவல்துறையும், தீயணைப்புத் துறையும் தயார் நிலையில் உள்ளன. மாநிலம் முழுவதும் 316 நிவாரண முகாம்களில் 11,018 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோட்டயம், இடுக்கி, கொல்லம், மலப்புரம், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
7 பேரைக் காணவில்லை. முதற்கட்ட அறிக்கையின்படி 165 ஹெக்டர் பரப்பளவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 3,596 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு 10,000 ரூபாயும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குத் திரும்பும்போது அவசரத் தேவைகளுக்காக 10,000 ரூபாயும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.
முற்றிலும் வீடு இழந்தவர்களுக்கான உதவித் தொகை 6 லட்சம் ரூபாயாகவும், நிலம் வாங்கி வீடு கட்டுவதற்கான உதவித் தொகை 12 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது" என்றவரிடம் ஹெலிகாப்டரில் பயணம் செய்ததையும், மக்கள் துயரப்படும் சமயத்தில் விருந்தில் கலந்துகொண்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய வி டி.சதீசன், "அன்று காலை 5 மணி முதலே வருவாய்த்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள், ஆட்சியர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்தேன்.
நான் நேரடியாக வர வேண்டுமா என்று கேட்டதற்கு, இப்போது தேவையில்லை என்றனர். இதையடுத்தே பிற்பகல் 3 மணியளவில் நான் உணவு சாப்பிடச் சென்றேன். 2018- 2019 மழை வெள்ளப் பேரிடரின்போது அப்போதைய முதலமைச்சர் உண்ணாவிரதம் இருந்தாரா என்று எனக்குத் தெரியாது. நான் உணவு சாப்பிட்டது ஒரு குற்றமா? சரி, தவறு நடந்துவிட்டது, இனிமேல் நான் உணவே சாப்பிடாமல் இருக்கிறேன்.

நான் உணவு சாப்பிடச் சென்ற வீட்டில் உள்ளவர்களும் உணவு சாப்பிடாமல் எனக்காகக் காத்திருந்தனர். இந்த விவகாரத்தை நான் மக்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். பேரிடர் மேலாண்மை தொடர்பான அனைத்துக் கடமைகளையும் நான் சரியாகச் செய்துள்ளேன்.
முன்னாள் முதலமைச்சர் ஹெலிகாப்டரில் பயணம் செய்ததைப் பற்றி நான் எதுவும் விமர்சிக்கவில்லை. நான் ஹெலிகாப்டரில் சென்றது முதலீட்டாளர்கள் குழுவைச் சந்திப்பதற்காகவே தவிர, சொந்த வேலைக்காக அல்ல. எனது ஹெலிகாப்டர் பயணத்தால் அரசுக்கு ஒரு ரூபாய் கூட கூடுதல் செலவு ஏற்படவில்லை. பினராயி விஜயனைப் போல நான் கட்சி மாநாடுகளுக்கு அரசுச் செலவில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


